(என்.வீ.ஏ.)
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போவது இந்தியாவா? அவுஸ்திரேலியாவா? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் புதன்கிழமை (07) இலங்கை நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு அணிகளும் ஆங்கிலேய சூழ்நிலைகளுக்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்வதில் கடந்த 15 தினங்களாக ஈடுபட்டிருந்ததுதுடன் போட்டியின்போது பிரயோகிக்க வெண்டிய வியூகங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நியூஸிலாந்திடம் 8 விக்கெட்களால் கோட்டைவிட்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை இம்முறை வென்றெடுக்க இந்தியா கடுமையாக முயற்சிக்கவுள்ளது.
சவுத்ஹாம்படன் ரோஸ் பவுல் விளையாட்டரங்கில் மேக மூட்டங்களுக்கு மத்தியில் அந்த இறுதிப் போட்டி நடைபெற்றது. முதலாம் நாள் ஆட்டமும் நான்காம் நாள் ஆட்டமும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. இதனால் இழக்கப்பட்ட ஆட்டநேரத்தை ஈடு செய்வதற்கு 6ஆவது நாள் ஒதுக்கப்பட்டிருந்தது. இறுதியில் நியூஸிலாந்து 8 விக்கெட்களால் இந்தியாவை வெற்றிகொண்டு முதலாவது உலக டெஸ்ட் சம்பியன் என்ற கௌரவத்தைப் பெற்றுக்கொண்டது.
ஆனால், இந்த வருடம் காலநிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மை என்பன இப்போதைக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இலங்கை நாணயப்படி 46 கோடியே 83 இலட்சத்து 72,686 ரூபா பணப்பரிசு சம்பியனாகும் அணிக்கு வழங்கப்படுவதுடன் அதில் சரிபாதி பணப்பரிசு தோல்வி அடையும் அணிக்கு கிடைக்கும்.
இதில் சம்பியனுக்கான பணப்பரிசையும் டெஸ்ட் வெற்றிக் கோலையும் சுவீகரிக்கும் குறிக்கோளுடன் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியாவும் பெட் கமின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலியாவும் களம் இறங்கவுள்ளன.
பூவா? தலையா? போடப்படும்போது விளையாடப்போகும் இறுதி பதினொருவர் தீர்மானிக்கப்படுவர் என ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் விட்ட அதே தவறுகளை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மீண்டும் இழைக்க மாட்டோம் எனவும் அவர் கூறினார்.
முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா, முதன்மை விக்கெட் காப்பாளர் ரிஷாப் பன்ட் ஆகிய இருவரும் உபாதை காரணமாக இல்லாமல் இந்தியா களம் இறங்கவுள்ளது.
ஆனால், அவர்கள் இல்லாத குறையைப் போக்கக்கூடியவர்கள் குழாத்தில் தாராளமாக இருப்பதாக ரோஹித் நம்புகிறார்.
இரண்டு அணிகளிலும் பிரபல்யம் பெற்ற அதிசிறந்த துடுப்பாட்ட வீரர்களும் பந்துவீச்சாளர்களும் இடம்பெறுவதால் இந்த இறுதி டெஸ்ட் போட்டி, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கு ஒப்பான விறுவிறுப்பை தோற்றுவிப்பதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்தவீச்சுக்கு சாதகமாக அமையும் என்பதால் நான்கு வேகபந்துவீச்சாளர்களை இந்தியா பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அப்படி பயன்படுத்தினால் துடுப்பாட்டத்தில் ஒரு வீரரை இழக்கக்கூடும்.
இந்தியாவைப் பொறுத்த மட்டில் ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, செத்தேஷ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே ஆகிய நால்வரும் துடுப்பாட்டத்தில் அசத்துவர் என எதிர்பார்க்கப்டுகிறது.
அதேபோன்று டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, மானுஸ் லபுஸ்சான், ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி, கெமரன் க்றீன் ஆகியோர் துடுப்பாட்டத்தில் அதிகப்பட்ச பங்களிப்பை வழங்குவர் என நம்பப்படுகிறது.
ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில், சேத்தேஷ்வர் புஜாரா, விராத் கோஹ்லி, அஜின்கியா ரஹானே, இஷான் கிஷான் அல்லது கே. எஸ். பாரத் (விக்கெட் காப்பாளர்), ஆகிய துடுப்பாட்ட வீரர்களும் ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய சுழல்பந்துவீச்சாளர்களும் மொஹமத் ஷமி, மொஹமத் சிராஜ், உமேஷ் யாதவ் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும் இந்தியாவின் இறுதி அணியில் இடம்பெறுவர் என கருதப்படுகிறது.
ஒருவேளை, இன்னுமொரு வேகப்பந்துவீச்சாளரை அணியில் இணைப்பதாக இருந்தால் சுழல்பந்துவீச்சாளர்களில் ஒருவரை நீக்கவேண்டிவரும்.
அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, மார்னுஸ் லபுஸ்சான், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, கெமரன் க்றீன், பெட் கமின்ஸ், நெதன் லயன், ஜொஸ் இங்லிஸ், ஸ்கொட் போலண்ட், மிச்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு அணியினரில் எந்த அணி சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப திறமையை வெளிப்படுத்துகின்றதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM