பாகிஸ்தானின் மே 9 கொந்தளிப்புகள்

06 Jun, 2023 | 02:30 PM
image

 ஆர்.சேதுராமன் 

கடந்த வருடம் மே 9 திகதி நடந்த சம்பவங்கள் இலங்கை அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைப் போன்று, இவ்வருடம் மே 9 ஆம் திகதி பாகிஸ்தானில் நடந்த சம்பவங்கள் அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மே 9 வன்முறைகள் காரணமாக  புதிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார். அவரை இராணுவச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்கும் முயற்சிக்கப்படுகிறது.

இம்ரான் கானை மே 9 ஆம்  திகதி பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர் கைது  செய்ததையடுத்து அவரின் ஆதரவாளர்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் அக்கைது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அறிவித்த நிலையில், இம்ரான் கான் பிணையில் விடுவிக்கப்பட்டமை தெரிந்த விடயம்.

50 பில்லியன் ரூபா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான அல் காதிர் அறக்கட்டளை வழக்கிலேயே இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வழக்கில் இம்ரான் கானை மீண்டும் கைது செய்வதற்கு அமைச்சர்கள் சூளுரைத்துள்ளனர்.

ஆனால்,  இம்ரான் கான் கைதானதையடுத்து நடந்த சம்பவங்கள் இம்ரான் கான் மற்றும் அவரின் பிரிஐ கட்சிக்கும்  நெருக்கடிகளை அதிகரிக்கச் செய்துள்ளன. அச்சம்பவங்களின் பின்னர் அவரின் கட்சித் தலைவர்கள் பலர் கைதாகியுள்ளதுடன், மேலும் பல தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரகளால் பல கட்டடங்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் பாகிஸ்தான் இராணுவ நிலையங்களும் தாக்கப்பட்டன. தனது கைதுக்கு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசீம் முனீர் காரணம் என இம்ரான் கான் குற்றம் சுமத்தியிருந்தார்.

லாகூரில் இராணுவ உயர் அதிகாரியின் வாசஸ்தலமாக பயன்படுத்தப்படும் 'ஜின்னா இல்லம்', 1998 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நடத்திய அணுகுண்டு பரிசோதனைகளின் நினைவுச் சின்னமாக நிர்மாணிக்கப்பட்ட 'சாகாய் மலை', ராவல்பிண்டியின் இராணுவப் படைத் தலைமையகம் ஆகியனவும் அன்றைய தினம் தாக்கப்பட்டன.

பஞ்சாப் மாகாணத்தின்  மியான்வாலி நகரிலுள்ள பாகிஸ்தான் விமானப்படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான ஷேன்யாங் எவ்-6 ரக போர் விமானமும் தீக்கிரையாக்கப்பட்டது.

இவை பாகிஸ்தானின் தேசிய நலன்கள் மீது 'செப்டெம்பர் 11' பாணியில் நடந்த தாக்குதல்கள் என திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அஹ்சான் இக்பால் விமர்சித்துள்ளார்.

'கறுப்பு தினம்'

இராணுவக் கட்டடங்கள், சின்னங்கள் மீதான தாக்குதல்களை நடத்தியவர்கள் இராணுவச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர் என பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பும் இராணுவத் தளபதி ஜெனரல் அசீம் முனீரும் தெரிவித்துள்ளனர்.

மே 9 ஒரு கறுப்பு தினம் எனக் கூறியுள்ள ஜெனரல் அசீம் முனீர், மேற்படி வன்முறைகளில் ஈடுபட்டவர்களை இராணுவச்சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

பாகிஸ்தான் வரலாற்றில் மே 9 ஒரு கறுப்பு தினம் எனக் கூறியுள்ள பிரதமர் ஷெரீப், பாகிஸ்தான் எதிரிகள்கூட கடந்த 75 வருடங்களில் செய்ய முடியாத அளவுக்கு  மே 9 ஆம் திகதி சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

அமெரிக்கப் பாராளுமன்றத்தின் மீது 2021  ஜனவரி  6 ஆம்  திகதி தாக்குதல் நடத்தியவர்களைத் தண்டிப்பதைப் போன்று பாகிஸ்தானின் மே 9 வன்முறைகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர்  ஷெஹ்பாஸ் ஷெரீப் கூறியுள்ளார். அமெரிக்கர்களின் தண்டனை சட்டபூர்வமானது என்றால் எமது நினைவுச்சின்னங்களை அழித்தவர்களை எமது சட்டத்தின் கீழ் தண்டிப்பதை எவரும் ஆட்சேபிக்க முடியாது என மே 28 ஆம் திகதி கூறினார்.

கைதுகளும் விலகல்களும்

மே 9 சம்பவங்களின் பின்னர், ஷா மெஹ்மூத் குரேஸி, பவாத் சௌத்திரி, மருத்துவர் யஸ்மீன் ரஷிPத், ஷெரீன் மஸாரி, மலீகா புகாரி, பைஸாஸுல் ஹசன் சௌஹான் உட்பட இம்ரான் கானின் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பிரியை கட்சித் தலைவர்கள் பலரும் கைதாகினர்.

சில தினங்களின் பின்னர், மேற்படி அமைச்சர்களில் சிலர் உட்பட இம்ரான் கானின் நெருங்கிய சகாக்கள் பலர் மே 9 சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இம்ரானின் பிரிஐ கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். பவாத் சௌத்திரி, இம்ரான் இஸ்மாயில், ஷெரீன் மஸாரி, பயாஸுல் ஹசன் சௌஹான், பிர்தௌஸ் ஆசிக் அவான் ஆகியோரும் இவ்வாறு விலகிச் சென்றனர். தனது கட்சிப் பிரமுகர்கள் விலக நிர்ப்பந்திக்ப்படுவதாக இம்ரான் கான் குற்றம் சுமத்தியுள்ளார்.

இம்ரான் தகுதி நீக்கப்பட்டால் ...

இந்நிலையில் தான் மீண்டும் கைதாகி, தகுதி நீக்கம் செய்யப்படக்கூடும் எனக் கருதும் இம்ரான் கான் அப்படி நடந்தால் தனது பிரிஐ கட்சிக்கு தலைமை தாங்குவதற்கான தலைவர்களை அறிவித்துள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பிரிஐ உபதலைவருமான ஷா மஹ்மூத் குரேஷி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பெர்வேஸ் கட்டாக் ஆகியோரை இதற்காக இம்ரான் கான் தெரிவுசெய்துள்ளார்.

'கொல்வதற்கும் திட்டம்'

தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த இம்ரான் கான், 'என்னை கைது செய்வதற்கு, தகுதிநீக்கம் செய்வதற்கு அல்லது கொலை செய்தவற்குக்கூட திட்டமொன்று உள்ளதை நான் அறிவேன். நான் கைதானால் அல்லது தகுதி நீக்கம் செய்யப்பட்டால் ஷா மஹ்மூத் குரேஷியும் பர்வேஸ் கட்டாக்கும் கட்சியை கையாள்வார்கள்' என்றார்.

அதேவேளை, தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக ஷா மஹ்மூத் குரேஷி, பெர்வேஸ் கட்டாக், அசாத் கைசர், ஹலீம் ஆதில் ஷேக், அவ்ன் அப்பாஸி, முராத் சயீத், ஹமத் அஸார் ஆகியோர் அடங்கிய 7 பேர் குழுவொன்றையும் இம்ரான் நியமித்துள்ளார்.

ஆனால், தனக்கு பதிலாக கட்சியை வழிநடத்துவதற்கு இம்ரான் கான் தெரிவு செய்த, ஷா மஹ்மூத் குரேஷி மே 9 வன்முறைகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியிலுள்ள ஆதியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தான் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார். எனினும், பிரிஐ கட்சியிலிருந்து பிரிந்த ஒரு குழுவினர், முன்னாள் அமைச்சர் பவாத் சௌத்திரி தலைமையில், கடந்த புதன்கிழமை சிறைச்சாலையில் குரேஷியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பிரிஐ கட்சியிலிருந்தும் இம்ரான் கானிடமிருந்தும் குரேஷியை விலகக் கோருவதற்காக இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மே 9 வன்முறைகளுக்கு இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேவேளை, தனத பிரியை கட்சியை பலவீனப்படுத்தி, ஒழிக்கும் நோக்குடன் திட்டமிட்டு நடத்தப்பட்டவையே இவ்வன்முறைகள் என இம்ரான் கான் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேர்தல் நடந்தால், ஆளும் பாகிஸ்தான் ஜனநாயகக் கூட்டணியிலுள்ள கட்சிகள் தோல்வியடைந்து விடும் என அக்கட்சிகள் அஞ்சுதாகவும் அவர் கூறியுள்hர்.

'பிரிஐ ஆனது  சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதிக்காக 27 வருடகால  ஜனநாயகப் போராட்ட வரலாற்றைக் கொண்ட கட்சி. ஒரு போதும் தொண்டர்களை வன்முறை வழியில் அனுமதிக்கவில்லை. நான் சுடப்பட்டபோதுகூட இத்தகைய பிரதிபலிப்பு இடம்பெறவில்லை எனக் கூறிய இம்ரான் கான், பல வன்முறைகளை  தடுப்பதற்கு தனது கட்சியினர் முயற்சிக்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் காணப்பட்டன' என இம்ரான் கான்  கூறியுள்ளார்.

தேசத் துரோக வழக்கு மூலம் தன்னை 10 வருடங்கள் சிறையில் அடைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக இம்ரான் கான் கூறியுள்ளார்.

இராணுவச் சட்டத்தின் கீழ் விசாரணை

மே 9 வன்முறைகள் தொடர்பாக இராணுவச் சட்டத்தின்கீழ், இராணுவ நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுவதற்காக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐம்பதை கடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவிலியன்களை இராணுவச் சட்டங்களின் விசாரிக்கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன வலியுறுத்தியுள்ளன.

அதேவேளை, இம்ரான் கான் மீதும் இராணுவ சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என தற்போதைய  பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லாஹ் கடந்த செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார். மே 9 வன்முறைகளை திட்டமிட்டு நடத்தியவர் இம்ரான் கான் என சனாவுல்லாஹ் குற்றம் சுமத்தியுள்ளார்.

சிறையிலிருந்த நிலையில், இம்ரான் கான் எவ்வாறு தனது கட்சித் தலைவர்களுடன் தொடர்புகொண்டிருக்க முடியும் என செய்தியாளர்கள் வினவியபோது, 'அவர் சிறைக்கு செல்வதற்கு முன்னரே யார், எங்கே, என்ன செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டிருந்தது' என அமைச்சர் சனாவுல்லாஹ் பதலளித்துள்ளார்.

இராணுவச் சட்டத்தின் கீழ் இம்ரான் கான் விசாரிக்கப்படக் கூடும் என்பதை நிராகரிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட்...

2023-09-26 12:00:59
news-image

ரணில் - பைடன் கலந்துரையாடல் இல்லாதது...

2023-09-24 16:59:36
news-image

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம்...

2023-09-22 15:57:14
news-image

முன்னாள் ஜனாதிபதிகளும் அரசியலும்

2023-09-21 15:27:10
news-image

பிரதமரை சந்தித்து அரசியல் வியூகத்தை கூறிய...

2023-09-17 17:16:23
news-image

திரிபோலி பிளட்டூன் (Tripoli platoon) இரகசிய...

2023-09-15 16:36:29
news-image

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களும் விசாரணைகளும்

2023-09-13 16:48:46
news-image

விடாமுயற்சியுடன் ஆபிரிக்காவில் போட்டியிடும் இந்தியா -...

2023-09-13 15:47:03
news-image

செனல் 4 வெளிப்படுத்தல் விசாரிக்கப்பட வேண்டும்...

2023-09-10 16:03:22
news-image

முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பை தூண்டும்...

2023-09-09 10:45:40
news-image

இந்தியாவை பதற்றத்தில் வைக்க சீனா முயல்கின்றதா?

2023-09-08 13:17:17
news-image

இலங்கைக்கு தேவை ஒரு தர்மன் அல்ல...!

2023-09-07 16:38:32