1978 இல் தங்கம் கடத்தி விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட ஐ.தே.க பிரதி அமைச்சர் !

Published By: Digital Desk 3

06 Jun, 2023 | 09:53 AM
image

சி.சி.என்

வயிற்றுப்பசிக்காக  தென்னை மரத்தில் ஏறி ஒரு  தேங்காய் பறித்தமைக்காக ஏழை  மனிதனை மரத்தில் கட்டி வைத்து  திருடன்  என  தாக்குதல் நடத்தும்  இந்த சமூகம்  கோடி கோடியாக தங்கம் கடத்தும் அரசியல்வாதிகளை  பெருமையாக நினைக்கின்றது. அது குறித்து பேசுவதுமில்லை.

அதேவேளை மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றில் இருக்கும் எம்.பிக்கள், அமைச்சர்கள் என்ன குற்றங்களைச் செய்தாலும் அவர்களின் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகின்றனர். அல்லது மக்களை ஏமாற்றும் விதத்தில் கதை கூறுகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த மாதம் 23 ஆம் திகதி டுபாயிலிருந்து வரும் வழியில் சுமார் எட்டு கோடி ரூபாய் பெறுமதியா தங்க பிஸ்கட்டுகள் கையடக்கத்தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிடிபட்டார். இவர் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார். தனது தொகுதியை மாத்திரமல்லாது நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகளையும் பின்னணியையும் அவரது செய்கை கேள்விக்குட்படுத்தியது.

கிட்டத்தட்ட 45 வருடங்களுக்குப்பிறகு இலங்கையில்  நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய ஒருவர் இவ்வாறு விமான நிலையத்தில் ஒரு தொகை தங்கங்களுடன் பிடிபட்டிருக்கின்றார். இதற்கு முன்பதாக  1978 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி அமைச்சராக விளங்கிய அனுர டேனியல் என்பவர் இதே விமான நிலையத்தில்  தங்க கட்டிகளுடன் பிடிபட்டார். அதுவே இலங்கை வரலாற்றில், அரசியல்வாதி ஒருவர் தங்கக் கடத்தலுடன் பிடிபட்ட முதல் சம்பவமாக இருந்தது. அந்த நேரத்தில் இன்று போல இணைய வசதிகளோ சமூக ஊடகங்களோ இல்லாத காரணத்தினால் அது வெறும் பத்திரிகை செய்தியாகவே கடந்து போனது. ஆனால் இலங்கையின் ஊழல் மற்றும் திருட்டு  அரசியல் கலாசாரம் 1978 களிலேயே வெளிப்பட்டு நின்றது. இந்த தங்கக் கடத்தல் சம்பவத்தின் எதிரொலியாக 1982 ஆம் ஆண்டு இவர் தனது எம்.பி பதவியை இராஜிநாமா செய்தார். ஆனால் அடுத்து என்ன நடந்தது? அவரது இடத்துக்கு அவரின் சகோதரி ரூபா சிறியானி நியமிக்கப்பட்டார். இது தான் இலங்கை அரசியல் கலாசாரம்.

அந்த சம்பவத்துக்குப்பிறகு எத்தனையோ  பிரமுகர்கள்   பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கங்களுடன் பிடிப்பட்டிருக்கலாம் . ஆனால் அவர்கள் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களாகவோ அல்லது அவர்களது உறவினர்களாகவோ இருக்கும் பட்சத்தில் விடுவிக்கப்பட்டிருக்கலாம்.  அனுர டேனியல் மற்றும் அலி சப்ரி ரஹீம் போன்று பலரும்  இதே விமான நிலையத்தில் தங்கங்களுடனோ அல்லது பெறுமதியான உபகரணங்கள் பொருட்களுடனோ வந்து போய் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சோதிக்கப்படுகின்றனரா என்பதே இங்கு எழுந்திருக்கும் கேள்வி.

அலி சப்ரி ரஹீமைத் தவிர நாடாளுமன்றில் உள்ள 224 பேரும் வெளிநாடுகளுக்கு உத்தியோக பூர்வமாகவோ அல்லது தனிப்பட்ட பயணங்களையோ மேற்கொள்கின்றனர். இவர்கள் தமக்குரிய இராஜதந்திர கடவுச்சீட்டின் மூலம் உயர் பிரமுகர்கள் செல்லும் வழியாக விமான நிலையத்துக்குள் நுழைகின்றனர் அல்லது வெளியேறுகின்றனர். இதன் காரணமாக இவர்கள் தீவிர சோதனைக்குட்படுவதில்லை என்பதே உண்மையாகும்.

அதற்காக 224 பேரும் தங்கம் கடத்துகிறார்கள் என்பதில்லை. அலி சப்ரி ரஹீம் ஒரு எம்.பி மாத்திரமே. முதன் முறையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான மக்களுக்கு பெரிதாக அறியப்படாத ஒருவராக விளங்கும் அவராலேயே  இத்தனை கோடி பெறுமதியான தங்கத்தை கொண்டு வர முடியுமானால் சிரேஷ்டத்துவமிக்க ஊழல்  அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் என்னவெல்லாம் கொண்டு வந்திருப்பார்கள்?

அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அந்த தங்கங்களும் கையடக்கத் தொலைபேசிகளும் தன்னுடையது இல்லை என்றும் தன்னோடு பயணித்த சக வியாபார பங்காளியினுடையது என்றும் அழகாக ஊடகங்களுக்கு சமாளிப்பை கொடுத்தார். அவரது உடல் மொழியே அவரது பொய்யை தோலுரித்து காட்டியது.

தன்னை அரசாங்கம் காப்பாற்றவில்லை என்பதற்காக ஜனக ரத்னாயக்கவுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லையென்று கூறி உண்மையான அரசியல் சுயலாபத்தை வெளிப்படுத்தி நின்றார். அதாவது தமது குற்றச்செயல்களுக்கு அரசாங்கம் துணை போனால் ஆதரவாக நிற்பது இல்லையென்றால் எதிராக குரல் கொடுப்பது என்ற இந்த பிற்போக்குத்தனமான அரசியல் கலாசாரத்தில் புதிய இளம் அரசியல்வாதிகளும் இணைந்து கொண்டிருப்பது எவ்வளவு கேவலமான செயற்பாடு? இதை அவர் தனது வாயாலேயே கூறியமை மிகவும் வெட்கக் கேடான சம்பவமாகும்.  

இதன் மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார்? தனது குற்றச் சம்பவங்களுக்கு அரசாங்கம் ஆதரவளிக்காது விட்டால் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நான் ஆதரவளிக்க மாட்டேன் என்பதாகும். இதை விட குப்பை  அரசியல் உள்ளதா? இதையும் சகித்துக்கொண்டிருக்கின்றனரே இந்நாட்டு மக்கள்…! இந்த சம்பவத்தில் சிக்கிய அலி சப்ரி எம்.பியின் மீது அரசாங்கமோ அல்லது அவரது கட்சியோ எடுத்துள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்ன? ஏன் அது குறித்து ஊடகங்களும் கேள்வி எழுப்புவதில்லை?

அலி சப்ரி ரஹீமை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள் தான். இதே போன்று நாடாளுமன்றில் உள்ள ஏனைய அமைச்சர்கள், எம்.பிக்களைப் பற்றி கடத்தல் தகவல்கள் கிடைத்தால் அவர்களால் கைது செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. தான் பிடிபட்டவுடன் உடனடியாக உயர் பீடத்திடம் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார் அவர். ஆனால் அங்கிருந்து சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே அபராதத்தை செலுத்தி விட்டு வெளியேறியிருக்கின்றார். கடத்தப்பட்ட பொருட்களும் அரசுடமையாக்கப்படும் என அறிவித்தல் வந்து விட்டது. 

எனினும் இது பற்றி சற்றும் அலட்டிக்கொள்ளாத அலி சப்ரி ரஹீம் எம்.பி, நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனக ரத்னாயக்கவுக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்த்து வாக்களித்து விட்டு அரசாங்கத்திடம் தனது எதிர்ப்பை காட்டி விட்டு மீண்டும் டுபாய் பயணித்து விட்டார். அவர் எதற்காக மீண்டும் சென்றார் என்பது அல்ல இங்கு பிரச்சினை. இந்த நாட்டில் அரசியல்வாதிகளாக இருக்கக் கூடியவர்கள் குற்றச்சாட்டுகளில் சிக்கியும் எவ்வாறு அதிலிருந்து வெளியேறுகின்றனர், மீண்டும் சுதந்திரமாக எப்படி பறந்து திரிகின்றனர் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இப்படியானவர்களை மீண்டும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்போகின்றார்களா? ஆனால் ஒரு விடயம் மாத்திரம் நன்கு புலப்படுகின்றது. இலங்கை அரசியல் கடலில் ஊழல் சுறாக்களும் திமிங்களும் நிறைந்துள்ளனர்…ஆனால் அலி சப்ரி ரஹீம் ஒரு நெத்தலி மீன் மாத்திரமே…!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13