ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மெரீனாவில் மக்களுடன் இரவு பகலாக தங்கியிருந்து ஜல்லிக்கட்டு போராட்டக்காரரர்களுக்கு லாரன்ஸ் ஆதரவு தெரிவித்து வந்தார். கழுத்தில் பெல்ட் கட்டியபடி வந்த லாரன்ஸ், மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டததோடு, அவர்களுடன் இணைந்து மவுன போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தார். மெரினாவில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் லாரன்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒருவாரம் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். ஆனால் “போராட்ட களத்தில் நானும் இருக்க வேண்டும். அந்த மக்கள் முகங்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். உணவு மற்றும் குடிநீர், பெண்களுக்காக கழிப்பறை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போராட்டம் வெற்றி பெற்ற பிறகு வந்து ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி வைத்தியசாலையில் இருந்து மீண்டும் மெரீனாவுக்கு ராகவா லாரன்ஸ் சென்றார். அதன் பின்னர் 6-ம் நாளான நேற்று மீண்டும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் நேற்று இரவு மீண்டும் வைத்தியசாலைக்கு சென்றார். 

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களை பொலிஸார் அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கடலை நோக்கி படையெடுத்தனர். பொலிஸார் எங்களை வெளியேற்ற நினைத்தால் கடலில் இறங்கி தற்கொலை செய்து விடுவதாகவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 

இந்தசம்பவம் குறித்து லாரன்ஸ் அளித்த பேட்டி,

எங்களது அறவழிப் போராட்டம் குறித்து இன்று பேசி முடிவெடுக்க இருந்த நிலையில், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் மெரீனாவில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பொலிஸார் பலவந்தமாக அப்புறப்படுத்தியதால் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

அதனைத்தொடர்ந்து, வைத்தியசாலையில் இருந்து மெரினாவுக்கு சென்ற லாரன்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய லாரன்சுக்கு கடைசிவரை அனுமதி கிடைக்கவில்லை. எனினும் தான் ஒரு மணிநேரத்தில் கடற்கரைக்கு வந்துவிடுவதாகவும், மாணவர்கள் யாரும் கடலில் இறங்க வேண்டாம் எனவும், தங்களது உயிரே முக்கியம் எனவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.