நிராகரிக்கப்பட்ட அரசியலில் தப்பிப் பிழைத்தல்

Published By: Vishnu

06 Jun, 2023 | 09:56 AM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

இலங்கையில் இனம், மதம் ,மொழிக்கு எதிராக இடம்பெறும் எந்தவொரு சம்பவத்தின் பின்னாலும் ஒரு இரும்புக்கரமும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலும் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றன.  

குறிப்பாக  பெளத்த மதத்தை விமர்சிக்கும்  வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சம்பவங்களைக் கூறலாம்.   மேற்கூறிய சம்பவங்கள்  அரசை வீழ்த்த முன்னெடுக்கப்பட்டு வரும் சதி என ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளமை முக்கிய விடயமாகும்.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பத்தரமுல்ல பகுதியில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்று கவிழ்க்கப்பட்ட சம்பவம்  எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்துள்ளது. 

மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து மக்களை பிளவுபடுத்துவதற்கு நாட்டின் பல இடங்களில் சில குழுக்கள் இயங்கி வருவதாகவும் இதற்கெதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி விசேட பொலிஸ் பிரிவை நிறுவ உத்தேசித்துள்ளதாகவும் சாகல கூறுகிறார். 

இதற்கு முன்னர் இந்த நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ஒரு சம்பவமும் இடம்பெறவில்லையா என பலரும் ஆச்சரியமாக புருவங்களை உயர்த்தும் செய்தியாகத்தான் இது உள்ளது.பொதுபலசேனாவின்  ஞானசார தேரரையும்  மட்டக்களப்பு மங்கலராமய விகாரதிபதியையும் விட இங்கு நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் மோசமாக வேறு எவரும் நடந்து கொண்டார்களா என்ன? 

‘ஒரு அயோக்கியனின் இறுதி புகலிடம் தேசபக்தி’  என்பது சமுவேல் ஜோன்சனின் புகழ் பெற்ற வார்த்தைகள்.  எனினும் ஒரு அயோக்கியனில் இறுதித் தெரிவு அரசியல் என ஜோர்ஜ் பெர்ணாட்ஷா பின்னாட்களில் கூறினார்.  ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்  அரசியலில் தப்பிப்பிழைத்தல் என்பது சவாலுக்குரியது. அதற்கு அவர்கள் மக்களை  உணர்வுபூர்வமாக அணுகுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. 

இலங்கையைப் பொறுத்தவரை மதம் மற்றும் மொழிகளை  வைத்து செய்யும் அரசியலில் மக்களை இலகுவில் ஈர்த்து விடலாம். பெளத்தத்துக்கும் சிங்கள மொழிக்கும் ஆபத்து என வீதியில் போகும் யாராவது  கூறினாலும் அவரை பெரிய மனிதராக்கி விடுவர் சிங்கள பெளத்த மக்கள். 

இடம்பெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கும் போது மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சில அரசியல்வாதிகள்  

தமது  இருப்பை தக்க வைக்க இப்போது மதங்களை கையிலேடுத்திருக்கின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்  கூட ஒரு அரசியல் இருப்புக்கான அல்லது ஒரு புதிய ஆரம்பத்துக்காக கட்டமைக்கப்பட்ட ஒரு சம்பவமாகவே இன்னும் இலங்கை மக்கள் மனதில் பதிந்து நிற்கின்றது. 

ஆனால் மதங்களைப் பற்றி பேசுதல் என்பது கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் ஒரு வெளிப்பாடு என்ற சில குரல்களும் இப்போது எழுந்துள்ளமை ஆச்சரியமளிக்கின்றது. 

 இலங்கையில்   ஊடகவியலாளர்கள் மாத்திரமே கருத்து வெளியிடும் சுதந்திரம் பற்றி அதிகம் கதைக்கும் வர்க்கத்தினராக ஒரு காலத்தில் விளங்கினர். யுத்த கால செய்தி அறிக்கையிடலின் போதும்  அதன் பிறகு அரசாங்கத்தின் ஊழல்கள் , அலட்சியப்போக்குகள் குறித்தும், நெருக்கடி காலகட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த தகவல்களை  வெளியிடும் போதும் ஊடகங்களின் குரல்கள் நசுக்கப்படுவது இந்த நாட்டில் வாடிக்கையானதொன்றாக விளங்கியது. 

அந்த சந்தர்ப்பங்களில் இந்த   கருத்து வெளியிடும் சுதந்திரத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டங்கள் ,கவனஈர்ப்பு செயற்பாடுகள் ஊடக அமைப்புகளால் அடிக்கடி முன்னெடுக்கப்பட்டு வந்தன. கருத்து வெளியிடும் சுதந்திரம் என்பது ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் மாத்திரமே  சொந்தமானது என்ற கருத்தும் அக்காலகட்டத்தில் பரவலாக இருந்தது. 

யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, கருத்து வெளியிடும் சுதந்திரம் பற்றி அரகலய காலத்தில் அதிகமாகவே பேசப்பட்டது. இந்த சுதந்திரத்தை அதிகமாக அப்போதைய காலகட்டத்தில் பயன்படுத்தியவர்கள்  சிங்களவர்களாவர். தாம் தெரிவு செய்த அரசாங்கத்துக்கு எதிராகவே அவர்கள் பேசத்தொடங்கியதால் அவர்களை யாரும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் வடக்கு கிழக்கு யுத்தம், விடுதலைப் புலிகள், தமிழர்கள் பற்றியும் அவர்கள் அதிகமாகவே தமது கருத்துக்களை சுதந்திரமாக முன் வைத்தனர். 

அரகலயவுக்குப் பிறகு போராட்டக் காரர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறை காரணமாக மீண்டும் இந்த கருத்து வெளியிடும் சுதந்திரம் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது.   

ஆனால் இப்போது அப்படியல்ல.  சில  அரசியல்வாதிகளும் தமது கருத்து வெளியிடும் சுதந்திரம் பற்றி கதைக்கின்றனர். கடந்த காலங்களில் இவ்வாறானவர்களே ஊடகங்களின் குரல்களை நசுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களாக இருந்தனர். இதை விட நாட்டின் அமைதியான சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் தீவிர மதவாதிகளும் தமது கருத்து வெளியிடும் சுதந்திரம் பற்றி வாய்திறந்துள்ளனர்.

எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை இருக்கும் போது மதங்களைப் பற்றி கதைக்கும் விமர்சிக்கும் உரிமையும் ஏன் இருக்கக் கூடாது, என்பதே இவர்களின் வாதமாக உள்ளது. ஆனால் இவர்கள் இந்த நாட்டில் பெளத்த மதத்தைத் தவிர வேறு எந்த மதங்களையும் தாராளமாக விமர்சிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளல் நல்லது.

மதபோதகர் ஜெரோமுக்கு எதிராக ஆரம்பித்த இந்த மத நிந்தனை சர்ச்சைகள் அதன் பிறகு நகைச்சுவை கலைஞர் நடாஷா மற்றும் ராஜாங்கனை சத்தாரன தேரர் ஆகியோரின் கைதுகளோடு பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அநேகமாக போதகர் ஜெரோம் நாடு திரும்பியதும் அவரும் கைது செய்யப்படலாம். 

எந்த சந்தர்ப்பத்தில் எதை கதைக்க வேண்டும் என்ற வரையறைகளும் கட்டுப்பாடுகளும்  இந்த நாட்டின் அரசியல்வாதிகளுக்கு இல்லை. ஆனால் எப்போதாவது கதைக்கப்பட்ட ஒரு விடயத்தை தமக்கு சாதகமாக்கிக்கொள்ள கைதுகளை மேற்கொள்ளும் அதிகாரங்களை இந்த நாட்டின் அரசியல்   கொண்டுள்ளது.  போதகர் ஜெரொமும்  நகைச்சுவை கலைஞர் நடாஷாவும்  திட்டமிட்ட வகையில் பெளத்த மதத்தைப்பற்றி கதைக்கவில்லையென்பது ஒரு சாராரின் கருத்து. மேலும் போதகர் ஜெரோமின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை விட, இப்போது அவரது பின்னணி குறித்தே பெரிதும் ஆராயப்படுகின்றது. 

ஆடரம்பரமாக தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கு அவருக்கு எவ்வாறு பணம் கிடைத்தது என்பதே இப்போது அவர் குறித்த தேடலில் பிரதானமாக உள்ள விடயமாகும். போதகர் ஜெரோம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்குமிடையிலான தொடர்புகள் பற்றியும் இக்காலகட்டத்தில் பேசப்பட்டமை முக்கிய விடயம். 

ஆனால் திடீரென அந்த சம்பவங்களை மறைக்கும், மறக்கும்  முகமாகவே பெளத்த மதத்துக்கு எதிராக வேறு சில சம்பவங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 போதகர் ஜெரோம் மற்றும் நடாஷாவிற்கு எதிராக சட்டம் தன் கடமைகளை செய்த அதே வேளை மிக பாரதூரமான மதவாத  கருத்துக்களை கூறி வரும் கடும்போக்கு பெளத்த பிக்குகளின் மீதும் சட்டம் பாய வேண்டும் என்ற ஏனைய மத உணர்வாளர்களை சாந்தப்படுத்தத்தான் ராஜாங்கனை தேரர் கைது செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் நியாயமானது.

எனினும் இந்த மத விமர்சன சம்பவங்களும் கைதுகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சவாலானவை. அரசியல் ரீதியாக   அவரது நகர்வுகளை   எதிர்க்க முடியாதவர்கள்  மத விவகாரத்தை கையிலெடுத்திருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதை சாகல ரத்னாயக்கவின் கருத்து வெளிப்படுத்தி நிற்கின்றது.

நல்லாட்சி காலத்தில் ஏற்பட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதலும் அதற்குப்பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களும் இந்த சம்பவங்களின் தீவிரத்தை உணர்த்தி நிற்கின்றன. ஆனால் மீண்டும் அவ்வாறான சம்பவங்களின் ஊடாக  அரசியல் செய்வதற்கு  திரைமறைவில் சில கறை படிந்த கரங்கள் முயற்சி செய்கின்றன என்றால் அதற்கும் நாட்டு மக்கள் சரியான பதிலடி கொடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றனர் என்பதை   உரியோர் அறிந்து கொள்வது அவசியம். 

நிராகரிக்கப்பட்ட அரசியலில் தப்பிப் பிழைக்க  ‘மதம் ‘ எனும் மந்திரக்கோலை இனியும் இலங்கையில் பயன்படுத்த முடியாது என்பதை கடும்போக்காளர்கள் உணர்ந்து கொள்வார்களாக. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32
news-image

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறுபான்மையினருக்கு...

2024-12-08 15:49:06
news-image

மிரட்டப்படும் எதிர்க்கட்சிகள்

2024-12-07 11:12:36
news-image

வரலாற்றுத் திருப்பமாகுமா?

2024-12-07 10:36:56
news-image

ஓரிரவு கொள்கை வீதத்தால் இலங்கையின் பொருளாதாரத்தில்...

2024-12-08 11:00:25
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆயுள் அதிகம்

2024-12-08 12:55:25
news-image

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் சிபாரிசுகளில் தொடரும் மர்மம்...

2024-12-08 11:08:15