ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை

02 Jun, 2023 | 08:48 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு வலிமைமிக்க அணியை கட்டியெழுப்பும் நோக்கில் ஆப்கானிஸ்தானுடனான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொண்ட இலங்கை, ஆரம்பப் போட்டியில் 6 விக்கெட்களால் தோல்வியுற்று பெரும் ஏமாற்றம் அடைந்தது.

ஹம்பாந்தோட்டை விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியைவிட துடுப்பாட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் இந்த வெற்றியுடன் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 269 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 46.5  ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 146 ஓட்டங்கள் ஆப்கானிஸ்தானின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

அத்துடன் இலங்கை பந்துவீச்சாளர்கள் 14 வைட்கள் மூலம் 21 ஓட்டங்களை அள்ளிக்கொடுத்திருந்தனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான மதீஷ பத்திரணவுக்கு இந்தப் போட்டி சிறப்பாக அமையவில்லை. அவர் 8 வைட்களைக் கொடுத்ததுடன் 8.5 ஓவர்களில் 66 ஓட்டங்களை தாரைவார்த்து ஒரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தான் மொத்த எண்ணிக்கை 25 ஓட்டங்களாக இருந்தபோது ரஹ்மத்துல்லா குர்பாஸ் (14) ஆட்டம் இழந்தார்.

ஆனால், இப்ராஹிம் ஸத்ரானும் ரஹ்மத் ஷாவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்து அணியின் மொத்த எண்ணிக்கைய 171 ஓட்டங்களாக உயர்த்தினர்.

இப்ராஹிம் ஸத்ரான் 98 பந்துகளில் 11 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 98 ஓட்டங்களைப் பெற்றார்.

மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ரஹ்மத் ஷா 3ஆவது விக்கெட்டில் மேலும் 40 ஓட்டங்களை அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதியுடன் பகிர்ந்தார்.

ரஹ்மத் ஷா 55 ஓட்டங்களையும் ஷஹிதி 38 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்தபின்னர் மொஹமத் நபியும் நஜிபுல்லா ஸத்ரானும் வெற்றி இலக்கைக் கடக்க ஆப்கானிஸ்தானுக்கு உதவினர்.

நபி 27 ஓட்டங்களுடனும் நஜிபுல்லா ஸத்ரான் 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் கசுன் ராஜித்த மாத்திரம் ஓரளவு சிறப்பாக பந்துவீசி 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆப்கானிஸ்தான் துடுப்பெடுத்தாடியபோது 24ஆவது ஓவரை வீசிய லஹிரு குமார 3ஆவது பந்துடன் உபாதைக்குள்ளாகி ஓய்வறை நோக்கிச் சென்றார்.

எஞ்சிய 3 பந்துகளை அணித் தலைவர் தசுன் ஷானக்க வீசி ஓவரைப்பூர்த்தி செய்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றது.

மத்திய வரிசையில் சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்ததாலேயே இலங்கை அணி கௌரவமான நிலையை அடைந்தது.

20ஆவது ஓவரில் 4ஆவது விக்கெட் வீழ்ந்தபோது இலங்கை 84 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

இந் நிலையில் சரித் அசலன்கவும் தனஞ்சய டி சில்வாவும் 5ஆவது விக்கெட்டில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலப்படுத்தினர்.

இலங்கை ஒருநாள் அணிக்கு 2 வருடங்களின் பின்னர் மீளழைக்கப்பட்ட டெஸ்ட் அணித் திமுத் கருணாரட்ன (4), முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் (12) ஆகிய சிரேஷ்ட வீரர்கள் இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

பெத்தும் நிஸ்ஸன்க 38 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி ய தனஞ்சய டி சில்வா 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து தசுன் ஷானக்க 17 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அறிமுக வீரர் துஷான் ஹேமன்த 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் 7ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்தார். இது அணியின் இரண்டாவது அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

மறுபக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அசலன்க 95 பந்துகளில் 12 பவுண்டறிகளுடன் 91 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பரீத் அஹ்மத் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இரண்டாவது போட்டி இதே அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெறவுள்ளதுடன் அப் போட்டிக்காக இலங்கை அணி நிறையவிடயங்களில் கவனம் செலுத்தி தவறுகளைத் திருத்திக்கொண்டு விளையாட வேண்டிவரும். அத்துடன் தொடரில் தோல்வியைத் தவிர்ப்பதாக இருந்தால் 2ஆவது போட்டியில் இலங்கை வெற்றிபெற்றே ஆகவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருபதுக்கு - 20 இல் நேபாளம்...

2023-09-27 15:10:16
news-image

இளைஞர் விளையாட்டு விழா கடற்கரை கரப்பந்தாட்டடம்...

2023-09-27 10:24:38
news-image

லீக் பிரதிநிதிகள் கால்பந்தாட்ட மறுமலர்ச்சிக்காக மனச்சாட்சிக்கு...

2023-09-27 10:31:59
news-image

ஹசரங்க உபாதையிலிருந்து மீண்டால் மாற்று வீரராக...

2023-09-27 09:51:56
news-image

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2023-09-26 11:18:45
news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59