(நெவில் அன்தனி)
அம்பாந்தோட்டை விளையாட்டரங்கில் இன்று (02) ஆரம்பமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு 269 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது.
சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் துஷான் ஹேமன்தவும் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரணவும் இலங்கை அணியில் அறிமுக வீரர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றது.
மத்திய வரிசையில் சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்ததாலேயே இலங்கை அணி கௌரவமான நிலையை அடைந்தது.
20ஆவது ஓவரில் 4ஆவது விக்கெட் வீழ்ந்தபோது இலங்கை 84 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
இந் நிலையில் சரித் அசலன்கவும் தனஞ்சய டி சில்வாவும் 5ஆவது விக்கெட்டில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலப்படுத்தினர்.
ஸிம்பாப்வேயில் இந்த மாத மத்திய பகுதியில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு பலம்வாய்ந்த அணியைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் ஆப்கானிஸ்தானுடனான தொடரை எதிர்கொள்ளும் இலங்கைக்கு இன்றைய போட்டியில் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
இலங்கை ஒருநாள் அணிக்கு 2 வருடங்களின் பின்னர் மீளழைக்கப்பட்ட டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன, முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய சிரேஷ்ட வீரர்கள் இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.
இலங்கை அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக இருவரும் துடுப்பாட்ட தில் பிரகாசிக்கத் தவறியிருக்கலாம் என விமர்சர்கள் குறிப்பிட்டதுடன் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து பரீட்சிக்க வேண்டும் எனவும் கூறினர்.
திமுத் கருணாரட்னவின் அனுபவம் இலங்கைக்கு பெரும் பங்காற்றும் என போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் அணித் தலைவர் தசுன் ஷானக்க குறிப்பிட்டார். ஆனால், திமுத் கருணாரட்ன 4 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.
மற்றைய அனுபவசாலியான ஏஞ்சலோ மெத்யூஸ் 12 ஓட்டங்களையும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உதவி அணித் தலைவர் குசல் மெண்டிஸ் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த பெத்தும் நிஸ்ஸன்க 38 ஓட்டங்களுடன் 4ஆவதாக ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து சரித் அசலன்கவும் தனஞ்சய டி சில்வாவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டனர்.
தனஞ்சய டி சில்வா 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து தசுன் ஷானக்க நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் 17 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அறிமுக வீரர் துஷான் ஹேமன்த தனது முதல் முயற்சியில் 22 ஓட்டங்களைப் பெற்றார். அவர் சரித் அசலன்கவுடன் 7ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்தார். இது அணியின் இரண்டாவது அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
மறுபக்கத்தில் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்த அசலன்க 95 பந்துகளில் 12 பவுண்டறிகளுடன் 91 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பரீத் அஹ்மத் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
சிறிது நேரத்தில் ஆப்கான் அணி வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM