பயங்கரவாதத்தை முறியடிக்கும் சட்டங்கள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக அமைய வேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை நீதியமைச்சருக்குக் கடிதம்

Published By: Digital Desk 3

02 Jun, 2023 | 02:27 PM
image

(நா.தனுஜா)

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்தை முறியடிக்கும் நோக்கில் புதிதாகக் கொண்டுவரப்படக்கூடிய எந்தவொரு சட்டமும் சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் கடும் எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், அதுபற்றிய கரிசனைகள் மற்றும் திருத்த முன்மொழிவுகளைத் தமக்கு அனுப்பிவைக்குமாறு நிதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரிடமும் கோரிக்கைவிடுத்திருந்தார்.

அதற்கமைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பான தமது கரிசனைகளை உள்ளடக்கி சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பிரதிப்பணிப்பாளர் ஸ்மிரிதி சிங்கினால் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது.

இச்சட்டமூலமானது கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், பாதுகாப்பு பெறுவதற்கான உரிமை என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு மனித உரிமைகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் காணப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி இச்சட்டமூலம் இலங்கை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானதாகவும் காணப்படுகின்றது.

மேலும் இச்சட்டத்தின்கீழ் பயங்கரவாதக்குற்றமாகக் கருதப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் உரியவாறானதும் தெளிவானதுமான வரைவிலக்கணம் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன் அரச பாதுகாப்பு அதிகாரிகள்வசம் மட்டுமீறிய அதிகாரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. 

அதேபோன்று இச்சட்டவரைபைத் தயாரித்தவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர்களால் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாகவும் இதனைத் தயாரிக்கவில்லை. 

எனவே சர்வதேச சட்டத்தின்கீழ் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யவேண்டுமெனில் இச்சட்டமூலத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றே நாம் கருதுகின்றோம்.

அதன்படி குறிப்பாக உத்தேச பயங்கரவாதச்சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்ற பதத்துக்கு விரிவான வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருப்பதுடன் அதன்கீழ் பல்வேறு குற்றங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று சந்தேகநபரை குற்றச்சாட்டுக்களின்றி ஒரு வருடகாலம் வரை தடுப்புக்காவலில் வைக்கமுடியும் என்பதுடன் சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக மேல்நீதிமன்றத்தினால் தடுப்புக்காவல் காலத்தை நீடிக்கமுடியும் என்ற சரத்து இச்சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ளது.

மேலும் இப்புதிய சட்டமூலத்தின் ஊடாக இராணுவத்தினருக்கு மட்டுமீறிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி எந்தவொரு நபருக்கோ அல்லது அமைப்புக்கோ எதிராகத் தடைவிதிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவை உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினராலும் வெளிப்படுத்தப்பட்ட கரிசனைகளைக் கருத்திற்கொள்ளுமாறு வலியுறுத்துவதுடன், பயங்கரவாதத்தை முறியடிக்கும் நோக்கில் புதிதாகக் கொண்டுவரப்படக்கூடிய எந்தவொரு சட்டமும் சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் வலியுறுத்துகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த , தாஜூதீன் கொலைகளிற்கு நீதி...

2024-11-10 10:51:58
news-image

இலங்கையும் இந்தியாவும் வரலாற்று நாகரிகத்தின் இரட்டையர்கள்...

2024-11-10 10:51:16
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் தாயும் மகளும்...

2024-11-10 10:37:37
news-image

தேர்தல் தினத்தன்று இலங்கை வரும் நாணய...

2024-11-10 09:32:01
news-image

கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உள்ளிட்ட வேனிலிருந்தவர்களை...

2024-11-10 09:20:26
news-image

யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார்...

2024-11-10 09:46:49
news-image

இன்றைய வானிலை

2024-11-10 07:07:34
news-image

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2024-11-09 18:33:44
news-image

முச்சக்கரவண்டி - லொறி மோதி விபத்து...

2024-11-09 18:07:08
news-image

மொனராகலையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட...

2024-11-09 17:49:55
news-image

கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தில் திருட்டு...

2024-11-09 17:33:52
news-image

புத்தளத்தில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு!

2024-11-09 16:53:15