பாடசாலை கழிவு முகாமைத்துவ திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை ஆரம்பித்தது நெஸ்லே லங்கா

Published By: Digital Desk 5

02 Jun, 2023 | 12:10 PM
image

கல்வி அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து அகில இலங்கை பாடசாலைகள் மட்ட சுவரொட்டி ஓவியப் போட்டியை ஏற்பாடு செய்கிறது 

நெஸ்லே லங்கா நிறுவனம், கல்வி அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து, தனது பாடசாலை கழிவு முகாமைத்துவ திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அகில இலங்கை பாடசாலைகள் மட்ட சுவரொட்டி ஓவியப் போட்டியை ஆரம்பித்துள்ளது.

‘பூமிக்கு நல்லது செய்வோம் - ஒரு ஓவிய வடிவம்) எனப் பெயரிடப்பட்ட இந்தப் போட்டி, இளம் வயதிலேயே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், பாடசாலை மாணவர்களிடையே கழிவுகளை பொறுப்புணர்வுமிக்க வழியில் அகற்றுவதன் முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வலயம், மாகாணம் மற்றும் அகில இலங்கை என மூன்று சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டதுடன், இறுதிச் சுற்றானது உலக சுற்றுச்சூழல் தினத்தை இலக்காகக் கொண்டு இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்படும்.

இலங்கையின் எதிர்கால சந்ததியினர் மத்தியில் சிறந்த நடத்தை மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் 2020 இல் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை கழிவு முகாமைத்துவத் திட்டம் பொறுப்பான வழியில் கழிவு அகற்றல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேவேளையில் பாடசாலைகளுக்கு கழிவு முகாமைத்துவ உபகரண தொகுதிகளை நன்கொடையாக வழங்க நடவடிக்கை எடுத்தது.

கழிவுகளற்ற எதிர்காலத்தை அடைவதற்கான நெஸ்லே லங்காவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு விரைவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டம், 2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் சுமார் 350,000 மாணவர்களை எட்டியுள்ளது.

“முறையற்ற விதத்தில் கையாளப்படுகின்ற கழிவுகள் என்பது அவசரமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு கரிசனையாக அமைவதுடன், நமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு, அனைத்து பிரிவுகள் மற்றும் தொழில்துறைகளில் அடங்கும் அனைவரின் நெருங்கிய ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

நாட்டின் எதிர்கால சந்ததியினரிடையே பொறுப்பான விதத்தில் கழிவுகளை அகற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பாடசாலை கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டமானது சிறந்ததொரு தளமாகும்,” என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட சுற்றாடல் அலுவலரான சுஜீவா பெரேரா அவர்கள் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் அழகியல் கிளையின் உதவிப் பணிப்பாளரான திருமதி ருவினி ஜயலத் அவர்கள், அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஓவியப் போட்டி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கையில், “ஓவியப் போட்டிகள் சிறுவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதற்கும், அழகியல் திறன்களை வளர்ப்பதற்கும் உதவும் அதே வேளையில், அவை பொறுப்புணர்வுடனான கழிவு முகாமைத்துவம் போன்ற நற்பழக்கவழக்கங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு பயனுள்ள கருவியும் ஆகும். அத்துடன், சிறுவர்களிடம் நேர்மறையான நடத்தை மாற்றத்தையும் இது ஊக்குவிக்கிறது,” என்று குறிப்பிட்டார். 

“குறிப்பிடத்தக்க நல்விளைவை ஏற்படுத்த ஆரம்ப பருவத்திலேயே நல்ல பழக்கங்களை கற்பிப்பது இன்றியமையாதது. நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களை எட்டும் வகையில் இந்த மகத்தான நிகழ்ச்சித்திட்டத்தை நடத்துகின்றமைக்காக நெஸ்லே லங்கா நிறுவனம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஓவியப் போட்டி எமது சிறுவர்களுக்கும் அவர்களது கலைத்திறனை வெளிப்படுத்த சிறந்த களமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை,” என மஹரகம மத்திய கல்லூரியின் அதிபர் திருமதி என்.டி.சி.ஜெயாங்கனி அவர்கள் தெரிவித்தார்.

பூமிக்கு நன்மை செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ள நெஸ்லே லங்கா, இலங்கையில் பிளாஸ்திக் கழிவு மாசுபாட்டைச் சமாளிக்கும் தனது முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. பிளாஸ்திக் உட்பட அதன் பொதியிடல் பொருட்கள் எதுவும் நிலத்தடிக் குப்பை அல்லது நீர்நிலைகளில் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யும் இலட்சியத்துடன் அது செயல்பட்டு வருகிறது.

இந்த நோக்கத்திற்காக, நிறுவனம் அதன் பொதியிடலில் குறைத்தல், மீள்பாவனை செய்தல், மீள்வடிவமைப்பு செய்தல் மற்றும் மீள்சுழற்சி செய்தல் ஆகியவற்றின் முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.

இதில் straws போன்ற ஒற்றை உபயோகப் பிளாஸ்திக்குகளைக் குறைத்தல், அதன் தயாரிப்புகளுக்கு மீள்சுழற்சி செய்யக்கூடிய அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொதியிடல் முறைமையை நாடுதல், தொற்றுநீக்கிய பான அட்டைப்பெட்டிகளுக்கு ஒரு சுழற்சிப் பொருளாதாரத்தை உருவாக்க உதவுதல் மற்றும் பசுமையான மற்றும் தூய்மையான இலங்கைக்கு வழிகோலுவதற்கு தேவையான நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல் ஆகியவை அடங்கும்.

‘தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகள் என அனைவரதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு  என்ற அதன் நோக்கத்தால் உந்தப்பட்டு, நெஸ்லே நிறுவனம் இலங்கையில் தலைமுறை தலைமுறையாக இளமை முதல் முதுமை வரை உயர்தர உணவு மற்றும் பான வகைகள் மூலம் ஊட்டமளித்துள்ளது.

1906 ஆம் ஆண்டு இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்து, இன்று, நெஸ்லே இலங்கை மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. கடுமையான பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, குருநாகலிலுள்ள தனது அதிநவீன தொழிற்சாலையில், இலங்கையில் விற்பனை செய்யப்படும் 90% க்கும் அதிகமான தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்