செங்கோல் ஏந்திய இந்திய புதிய பாராளுமன்றம் !

Published By: Digital Desk 3

02 Jun, 2023 | 02:15 PM
image

ஆர்.பி.என்.

இந்தியாவின் நவீனத்துவம் மிக்க புதிய பாராளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 28ஆம்  திகதி (28 -05 -2023) கோலாகலமாக நாட்டுக்கு சமர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அத்தருணம் மீண்டும் சரித்திரத்தை  புரட்டிப் பார்த்தது போன்று பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோலும் இன்று பெரும் பேசு பொருளாக  மாறிவிட்டது.

சோழ மன்னர்களின்  ஆட்சி நிலவிய  காலம் தொட்டு,  இந்த செங்கோல் நீதி வழுவாத நல்லாட்சியின்  சின்னமாக பார்க்கப்படுகிறது.செம்மை என்பதன் பொருள் நேர்மை என்பதாகும். நல்லதோர்  அரசன் செங்கோல் வழுவாமல் ஆட்சி செலுத்த வேண்டும் என்பதையே இது பறைசாற்றி நிற்கிறது.

அந்தவகையில் இந்திய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவின் போது, பிரதமர் மோடி, தமிழகத்தின் பெயரை  பறைசாற்றி நிற்கும்  பாரம்பரியமிக்க செங்கோலை சபாநாயகர் இருக்கைக்கு அருகே நிறுவினார். இந்திய வரலாற்றில்  செங்கோல் பிரதான பங்கு வகிக்கின்றது. இதே செங்கோல் இந்தியாவின் முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேருவிடம், இந்தியா சுதந்திரம் அடைந்த போது வழங்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த 1947 ஆம்  ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம்  திகதி  நள்ளிரவு சுதந்திர தின கொண்டாட்டங்கள் டாக்டர். ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நேதாஜி , சுதந்திர போராட்ட வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர் . இதன்போதே செங்கோல் முதல் தடவையாக  பிரசன்னமாகியது . மீண்டும்  அது 75 ஆண்டுகளுக்குப்  பின்னர் புதிய பாராளுமன்றத்தை அலங்கரித்துள்ளது.

இந்த நிகழ்வில் 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் திருஞானசம்பந்தரால் எழுதப்பட்ட கோளறு பதிகத்தின் 11 பாடல்களையும் ஓதுவார்கள் பாடி முடித்ததும் திருவாவடுதுறை ஆதீனம் குமாரசாமி தம்பிரான் , மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் இருந்து  செங்கோலை பெற்று புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்கும் நேருவிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரக் காற்றை  சுவாசிக்க தொடங்கியது.

இறுதியாக  ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு அடையாளமாக வழங்கிய அந்த செங்கோல் பாதுகாப்பாக அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதே செங்கோல்  தான் தற்போது புதிய பாராளுமன்றத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது.சோழ மன்னர் காலத்தில்  அரியணையில் ஏறும் போது அவர்களின் ராஜகுரு, எவ்வாறு செங்கோலை வழங்கி ஆசீர்வதிப்பாரோ, அதே பாணியில் இந்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது.  

இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின்  பல்வேறு ஆதீனங்களையும் சேர்ந்த சுமார் 30 ஆதீன கர்த்தாக்கள் பங்கு கொண்டனர். அவர்கள் பிரதமருக்கு பூரண ஆசி வழங்கி செங்கோலை அவரிடம் கையளித்தனர். முன்னதாக புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கர்நாடகாவின் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள்,ஓம குண்டம் வளர்த்து கணபதி ஹோமம் செய்தனர். 

அதனை தொடர்ந்து பிரதமர் மோடி, செங்கோல் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். இதையடுத்து தமிழகத்தின்  பல்வேறு  ஆதீனங்களின்  தலைமை  குருமாரிடம் ஆசீர்வாதம் பெற்றார். பின்னர் மோடி, நாதஸ்வரம், மற்றும் வேத மந்திரங்கள் முழங்க  செங்கோலை புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு  ஊர்வலமாக கொண்டு சென்று மக்களவை அறையில் சபாநாயகரின் கதிரைக்கு வலது புறமாக  இதற்கென அமைக்கப்பட்ட சிறப்பு இடத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கோலை நிறுவி மலர் தூவினார்.

முறையான  அரசாட்சி  என்னும்போது செங்கோலுக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படாதவாறு, நீதி வழுவாமல் ஆட்சி செலுத்துவதாகும்.  இதனை பறைசாற்றும் வகையில், ஜனநாயகத்தின் பிறப்பிடமாக கருதப்படும் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோலுக்கு பெருமை சேர்க்க வேண்டிய  பாரிய பொறுப்பு  இந்திய பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளை சார்ந்ததாகும் .

செங்கோலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு

1947 ஆம்  ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்திய சுதந்திரத்தின் விடியலை நெருங்கியபோது, லூயிஸ் மவுண்ட்பேட்டன் பிரபு ஜவஹர்லால் நேருவிடம், பிரிட்டனின் அதிகாரத்தை இந்தியாவுக்கு அதிகாரபூர்வமாக மாற்றுவதை எவ்வாறு குறிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அப்போது ஜவஹர்லால் நேரு,  புகழ்பெற்ற சரித்திர நாயகனான சி.ராஜகோபாலாச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டார் , அவர், தெற்கு இராச்சியங்களில்  நிலவிய  வரலாற்று ரீதியான இந்திய நாகரிக பாரம்பரியத்தைப் பின்பற்றலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

அங்கு மாநிலத்தின் தலைமை குரு , அதிகாரத்தை மாற்றுவதைக் குறிக்கும் செங்கோலை புதிய மன்னரிடம் ஒப்படைப்பார். இதன் மூலம் அதிகார பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம்  என்று ராஜாஜி கூறினார். அவரது கருத்து வரவேற்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது .அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஒரு சைவ மடாலயமான திருவாவடுதுறை ஆதீனத்தின் அப்போதைய மடாதிபதியான ஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகளிடம் செங்கோலை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்குமாறு  ராஜாஜி  கேட்டுக் கொண்டார். 

அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள  நகை வடிவமைக்கும்  கடை ஒன்றில் செங்கோல்  வடிவமைக்கப்பட்டது. ஐந்து அடி உயரமான இந்த செங்கோல்  வெள்ளியால் ஆனது, அதன் மேல்  தங்கமுலாம்  பூசப்பட்டுள்ளது . அதன் மேற்பகுதி  நந்தியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது  வலிமை மற்றும் உண்மையைக் குறிக்கிறது.

இந்த செங்கோலானது எல்லையற்ற நம்பிக்கை, எல்லையற்ற சாத்தியங்கள் மற்றும் வலுவான ,வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதிப்பாட்டின் சின்னமாக பார்க்கப்படுகிறது. மேலும் இது இந்தியாவின் புகழ்பெற்ற சகாப்தத்திற்கு சாட்சியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் புதிய பாராளுமன்றம் !

உலகின் மிகப்பெரிய  ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகின் அதிகூடிய சனத்தொகையைக்  கொண்ட நாடு என்ற பெருமையும் தற்போழுது இந்திய தேசத்துக்கு உண்டு.  அதுமட்டுமல்லாது பல இன , மத மற்றும் மொழி பேசும்  மக்கள் வேற்றுமையிலும் ஒற்றுமையாக வாழும் நாடு இந்தியா என்ற பெருமையையும் பெறுகின்றது. அந்த வகையில் இந்தியாவின் பாராளுமன்ற கட்டிடமும் பெருமைக்குரிய ஒன்றாகும். 

இந்தியாவின் பாராளுமன்ற கட்டிடம் மிக பழைமை வாய்ந்ததும் , சரித்திர முக்கியத்துவம் பெற்றதுமாகும் . இது 1921 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு , 1927 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி அப்போது இந்திய ஆளுநராக இருந்த  இர்வின் பிரபுவால்  திறந்து வைக்கப்பட்டது.

இந்திய பாராளுமன்றத்தைப்  பொறுத்தமட்டில்  மக்களவையில்  இரு நியமன  உறுப்பினர்கள் உட்பட 545 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 12 நியமன உறுப்பினர்கள் உட்பட 254 உறுப்பினர்களும் உள்ளனர். இந்தவிதமான  சூழலில் பாராளுமன்ற கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லை என்றும், குறித்த கட்டிடம் நூற்றாண்டு கால பழைமை வாய்ந்தது என்பதால்  புதிய கட்டிடம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்ற எண்ணக்கரு உதயமானதாலும்  2012 ஆம் ஆண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது . அந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய பழைய கட்டிடத்திற்கு அருகிலேயே புதிய கட்டிடத்தை கட்டுவது என்று முடிவானது. அத்துடன் துணை ஜனாதிபதி , பிரதமர் ஆகியோருக்கான இல்லங்களையும் பாதுகாப்பு கருதி அதே வளாகத்தில் கட்ட முடிவானது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டிட நிர்மாண பணியை பொறுப்பேற்ற டாட்டா நிறுவனம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை  இரவு பகல் சேவைக்கு அமர்த்தி  மிகக்குறுகிய காலத்தில் தனது கட்டுமானப்  பணியை நிறைவேற்றி முடித்தது.  

நவீன வசதிகள் கொண்ட இந்த புதிய பாராளுமன்றம் மற்றும் அதனை சுற்றிய வளாகம் பார்ப்பவரைக்   கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடம்  64 ஆயிரம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், பூமி அதிர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

ஒரு நூற்றாண்டை கடந்தும் நீடிக்கும் வகையில் இதன் கட்டுமானப் பணிகள் அமைந்துள்ளன. நான்கு மாடிகளைக் கொண்ட 39.6 மீற்றர் உயரமான, முக்கோண வடிவில் அமைந்த இந்த கட்டிடத்தில் 888 இருக்கைகளை கொண்ட மக்களவை கூடம் , மற்றும் 384 இருக்கைகளை கொண்ட மாநிலங்களவை கூடம் அமைச்சர்களுக்கான அலுவலகம், பாராளுமன்ற குழுக்களின் அலுவலக அறை, நூலகம் என்பவை  அடங்குவதுடன் , அனைத்து வசதிகளையும் உள்ளேயே பெறக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது.

இதில் அடங்கியுள்ள முக்கிய அம்சம் என்னவென்றால், மக்களவை இந்திய தேசிய பறவையான மயில்  போன்றும் , மாநிலங்களவை தேசிய மலரான  தாமரை போன்றும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான நிர்மாண  பணிகளுக்கு  சுமார் ஆயிரம் கோடிக்கும் அதிகமான இந்திய ரூபாய்கள் செலவிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மேலும் பாரம்பரிய கட்டிடங்களின் கலையம்சங்களை  பிரதிபலிக்கும் வகையிலும்  கட்டிடம் முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்ற கட்டிடம் மிகவும் கோலாகலமாகவும் சமய அனுஷ்டானங்களின்  அடிப்படையிலும் திறந்து வைக்கப் பட்ட போதிலும், எதிர்க்கட்சினர்  நிகழ்வுகளில் பங்கு கொள்ளவில்லை. ஜனாதிபதி திரௌபதி  முர்மு  திறப்பு விழாவுக்கு அழைக்கப்படவில்லை என்றும் அவரே கட்டிடத்தை திறந்து வைத்திருக்க வேண்டும் எனவும் , பி.ஜே.பி யின் சின்னமான தாமரையை நினைவுபடுத்தும் வகையிலேயே மாநிலங்களவை தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும்    எதிர்க்கட்சியினர்  குற்றம் சுமத்தியே  இந்த பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

எவ்வாறு   இருந்த போதிலும் இந்தியாவின் வளர்ச்சியானது வேற்றுமையிலும் ஒற்றுமையான செயல்பாட்டிலேயே முன்னேற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில் இந்திய புதிய பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் செங்கோலுக்கு மதிப்பளிக்கும் வகையிலேனும் , இந்திய ஜனநாயக மக்களாட்சி,   புதிய சிந்தனையுடன் நீதி வழுவாததாகவும் அனைத்து  மக்களையும் அரவணைத்து செல்வதாகவும் அமைவது இன்றியமையாதது. இன்றேல் பாரம்பரியமாகப்  போற்றப்படும் செங்கோலுக்கான  கௌரவம் இல்லாமல்  போய்விடும் என்பதை மறந்து போகக் கூடாது.

படங்கள் ; டுவிட்டர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22