வட்டிவீதங்களைக் குறைத்தது மத்திய வங்கி

Published By: Digital Desk 3

01 Jun, 2023 | 05:20 PM
image

(நா.தனுஜா)

அண்மையகாலங்களில் பணவீக்கத்தில் மிகவேகமான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டதன் விளைவாக, வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கான வட்டிவீதங்களை முறையே 13 மற்றும் 14 சதவீதமாகக் குறைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார். 

நாணயச்சபையின் இவ்வருடத்துக்கான நான்காவது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு வியாழக்கிழமை (1) மத்திய வங்கியின் கேட்போர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம்முறை நாணயச்சபைக்கூட்டத்தில் துணைநில் வைப்புவசதிவீதம், துணைநில் கடன்வசதிவீதம் ஆகிய கொள்கை வட்டிவீதங்களை 250 அடிப்படைப்புள்ளிகளால் முறையே 13 சதவீதமாகவும், 14 சதவீதமாகவும் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அண்மைய காலங்களில் பணவீக்கமானது எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவேகமாக வீழ்ச்சியடைந்து வருவதனாலும், பொருளாதாரத்தின் ஏனைய கூறுகளின் சாதகமான போக்கின் விளைவாகவுமே நாணயச்சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. 

அதன்படி கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் பெருமளவினால் வீழ்ச்சியடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி, அவசியமான நடவடிக்கைகள் மூலம் இவ்வருட இறுதிக்குள் பணவீக்கத்தை ஓரிலக்கப்பெறுமதிக்குக் கொண்டுவரமுடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

மேலும் வெளிநாட்டுத்துறையின் செயலாற்றத்தைப் பொறுத்தமட்டில் அண்மையகாலங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பாக சுற்றுலாப்பயணிகளின் வருகை, வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள், வெளிநாட்டு முதலீடுகள் போன்றவற்றில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இவற்றின் விளைவாக அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி படிப்படியாக உறுதியடைந்துவருவதாகவும், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலகவங்கி போன்ற சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் உதவிகள் மூலம் வெகுவிரைவில் வெளிநாட்டுக்கையிருப்பு ஸ்திரமடையும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள மத்திய வங்கி, நாணயச்சபையின் வட்டிவீதக்குறைப்புத் தீர்மானத்துக்கு அமைவாக வட்டிவீதங்களைக் குறைத்து அதன் நன்மையை மக்களுக்குப் பெற்றுத்தரவேண்டும் என்று வணிக வங்கிகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் கூறியதாவது:

நாம் எதிர்பார்த்ததை விடவும் மிகவேகமாகப் பணவீக்கம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. அதன்படி இவ்வாண்டின் பின்னரைப்பகுதியில் நாணயக்கொள்கையைத் தளர்த்துவதற்கும், பொருளாதார மீட்சியை அடைந்துகொள்வதை முன்னிறுத்திய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.

மறுபுறம் பணவீக்கம் வீழ்ச்சியடைந்தாலும் உணவுப்பொருட்களின் விலைகளில் பெருமளவுக்கு மாற்றம் ஏற்படவில்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. இது சாதாரணமானதொரு விடயமேயாகும். எந்தவொரு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டாலும் அது பூரணமடைவதற்கும், அதன் முழுமையான பயன் கிட்டுவதற்கும் குறித்தவொரு காலப்பகுதி அவசியமாகின்றது. அது இவ்விடயத்துக்கும் பொருந்தும். 

அதேபோன்று வட்டிவீதங்கள் குறைக்கப்பட்டிருப்பதால் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதா? என்று எழுப்பப்படும் கேள்விக்கு என்னால் பதிலளிக்கமுடியாது. ஏனெனில் நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதென்பது படிப்படியாக இடம்பெறக்கூடிய சீரானதொரு செயன்முறையாகும்.

அடுத்ததாகக் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இது அரசாங்கத்துடன், குறிப்பாக நிதியமைச்சுடன் தொடர்புபட்ட விடயமாகும். இருப்பினும் கடன்மறுசீரமைப்புச்செயன்முறை குறித்து இன்னமும் அரசாங்கம் எதனையும் அறிவிக்கவில்லை. வெகுவிரைவில் அதுபற்றிய அறிவிப்புக்கள் வெளியாகும். 

அதேவேளை பொருளாதார நிலைவரம் குறித்து சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள முதலாவது மீளாய்வின்போது மதிப்பீடுகளை மேற்கொள்வர். இச்செயற்திட்டம் 4 வருடகாலத்துக்குரியதாக இருந்தாலும்கூட, இம்மீளாய்வின்போது ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட நிபந்தனைகள், அவற்றின் அமுலாக்கம் மற்றும் முன்னேற்றம் என்பன தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அவசியம் காணப்படின் மாற்றங்களும் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06