இலங்கை பல்கலைக்கழகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத் தொழிலாளர்கள் 

Published By: Nanthini

01 Jun, 2023 | 02:44 PM
image

(விதுர்ஷா, பேராதனை பல்கலைக்கழகம்)

லங்கையின் சமகாலப் பொருளாதார நெருக்கடியானது அனைத்து துறைகளையும் பாதித்துவருகிறது. ஈஸ்டர் தாக்குதல், கொவிட்-19 தொற்று, அரசியல், பொருளாதார நிலைத்த தன்மையின்மை, அரகலய மக்கள் போராட்டம் போன்றவற்றையடுத்து தோற்றம்பெற்றுள்ள சமூக அதிர்வுகள் குறித்த பொருளாதார நெருக்கடியினை தொடர்ச்சியாக அதிகரிக்கச் செய்தவண்ணமுள்ளன. இதனால், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழில் புரிந்த தொழிலாளர்களை ஒப்பந்தம் முடிவடைந்த காலப்பகுதியில் ஒப்பந்த மீள்நீடிப்பின்றி பணி நீக்கம் செய்கின்ற போக்கு அதிகரித்துவருகிறது. அதிலும் குறிப்பாக, நாள் ஊதிய அடிப்படையில் தற்காலிகமாக பணிக்கமர்த்தப்பட்டவர்கள் முறையான முன்னறிவிப்பின்றி அவர்களது பணிகளில் இருந்து பணி நீக்கப்படுகின்றமை ஒரு முக்கிய பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்த முடியாத பொருளாதார நெருக்கடி காரணமாக பல்கலைக்கழகங்கள் தமது தொழிலாளர்களுக்கான ஊதியத்தினை வழங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. இதன் காரணமாக பல்கலைக்கழகங்கள் பணியாளர் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. இது கல்விசார் மற்றும் கல்விசாரா தற்காலிக ஊழியர்களை பெரிதும் பாதித்துவருகிறது. அத்துடன், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் ஊதிய உயர்வு வழங்கப்படாமையால் பல்கலைக்கழகங்களில் தம் ஊழியர்களை பணிக்கமர்த்தியிருந்த தனியார் நிறுவனங்களும் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களோடு உடன்படிக்கைக்குச் செல்வதில் தயக்கம் காட்டிவருகின்றன. 

இந்நிலையானது பல்கலைக்கழகங்களில் தனியார் நிறுவனங்களின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கமர்த்தப்பட்ட நாள் ஊதியம் பெறும் ஊழியர்களது தொழில்சார் பாதுகாப்பின்மையை அதிகரித்துள்ளது. 

சமகால பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பல்கலைக்கழகங்களில் இவ்வருடத்தில் மாத்திரம் சுகாதாரத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மரங்கள் மற்றும் செடிகள் கத்தரிப்பவர்கள், பாதுகாப்புத் துறையினர், காவலாளர்கள் உள்ளடங்கலாக நடப்பு ஊழியர்களில் இருந்து கிட்டத்தட்ட 5 சதவீதமான ஊழியர்கள் வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 

சுகாதார தொழிலாளர்கள் 

ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகங்கள் தமக்கான சுகாதார தொழிலாளர்களை நாள் ஊதிய ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் கோருகின்றன. 

இந்நிலையில், பேராதனை பல்கலைக்கழகத்தின் பொதுச் சேவைகள் பிரிவின் கீழ், சுத்தம் மற்றும் சுகாதாரத்தினை பேணுவதற்காக பல்கலைக்கழகத்தினது கொள்முதல் காரியாலயத்தினால் சுகாதாரத் தொழிலாளர்களது எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் தீர்மானிக்கப்படுகிறது. 

அதன்படி, தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழகத்தினது இட ஒதுக்கீட்டு கோரிக்கைக்கிணங்க, ஒரு வருடகால ஒப்பந்தத்தின் பேரில் பல்கலைக்கழக சுகாதார நிலைய நிர்வாகத்தின் கீழ் சுகாதாரத் தொழிலாளர்களை பணிக்கமர்த்துகின்றனர். 

இத்தொழிலாளர்களது எண்ணிக்கையானது ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக தேவை மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது.

இவர்களது பிரதான கடமைகளாக லொறி மற்றும் டிரக்டர் மூலம் குப்பைகளை சேகரித்தல், குப்பைகளைத் தரப்படுத்தல், பல்கலைக்கழக பொது இடங்களின் வளாகங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளல், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பிரதான வடிகால் அமைப்பைச் சுத்தம் செய்தல், கழிவு மேலாண்மை நிலையத்துக்குச் கொண்டு செல்லப்படும் கலப்புக் கழிவுகளை பிரித்தெடுத்தல், பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளின்போது துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகியன பல்கலைக்கழக சுகாதார நிலையத்தால் வரையறுக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்படுகிறது. 

இந்த பல்கலைக்கழக சுகாதார தொழிலாளர்களுக்கு பேராதனை பல்கலைக்கழக சுகாதார நிலையமே பொறுப்பாகிறது. 

குறித்த அலகிடம் இருந்து பெறப்பட்ட தரவின் அடிப்படையில், 2023 மார்ச் மாதத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தில் 6 சுகாதாரத் தொழிலாளர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், இன்று 97 சுகாதாரத் தொழிலாளர்கள் மாத்திரமே பணிபுரிகின்றனர். 

இது தொடர்பாக பேராதனை பல்கலைக்கழக பொதுச் சேவைகள் பிரிவின் உதவி முகாமையாளர் எஸ்.பி.எம்.வலன்ஸவிடம்  வினவியபோது,

"2021ஆம் ஆண்டு 101 சுகாதாரத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக 2023 மார்ச் மாதத்துடன் 6 ஊழியர்கள், அவர்களது ஒப்பந்த காலம் முடிவடைந்ததும், மீள ஒப்பந்தம் நீடிக்கப்படாமல் பணியிலிருந்து நிறுத்தப்பட்டனர். 

இவர்கள் தொடர்பான அலுவல்கள் பல்கலைக்கழக சுகாதார நிலையத்தின் கீழ் வருகிறது. அத்துடன், இந்த தொழிலாளர்களை பற்றிய தனிப்பட்ட விடயங்கள் எமக்கு தெரியாது. அவர்களை ஒப்பந்தத்தின் பேரில் பணிக்காக அனுப்பிய தனியார் நிறுவனங்களே அவர்கள் தொடர்பான தரவுகளை பேணுகின்றன. அத்துடன், தனியார் நிறுவனங்களோடு மாத்திரமே பல்கலைக்கழகத்தின் ஒப்பந்தம் இடம்பெறும். 

இதுபோல வேறு சில ஊழியர்களும் அவர்களது ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் நீக்கப்பட்டுள்னர். அவர்களது பணி நீக்கம் தொடர்பாக அவர்களது நிறுவனங்களால் அறிவுறுத்தப்படும்" என குறிப்பிட்டிருந்தார். 

அத்துடன், இவர்கள் அரசாங்க கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில், வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழக பொதுச் சேவைகள் பிரிவில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது.

அந்த வகையில், வருடத்துக்கு ஒரு முறை மீளமைக்கப்படும் ஒப்பந்த அடிப்படையில், மூன்று வருட காலத்துக்கும் அதிகமாக பணிபுரிந்துவந்த மேற்குறிப்பிட்ட 6 ஊழியர்களும், அவர்களது ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர் குறித்த ஒப்பந்தம் மீள நீடிக்கப்படாமல் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 

இத்தொழிலாளர்களுக்கு இவர்களது வேலை நிறுத்தம் தொடர்பாக எந்தவொரு தரப்பினாலும் முறையாக அறிவுறுத்தப்படவில்லை. 

குறித்த ஒரு நாளில் தம் மேற்பார்வையாளரால் அழைக்கப்பட்டு மிகச் சாதாரணமாக "நாளையில் இருந்து உங்களுக்கு வேலை இல்லை; நீங்கள் வேலைக்கு வரவேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தமது பணி நீக்கத்துக்கான காரணத்தினை அறிந்துகொள்வதற்காக தம் மேற்பார்வையாளர் மற்றும் தனியார் நிறுவனங்களை இத்தொழிலாளர்கள் தொடர்புகொண்டு கேட்டபோதும், அவர்களுக்கு தெளிவற்ற பதில்களே கிடைத்துள்ளன. 

இத்தகைய செயற்பாடானது தொழிலாளர் ஒருவர், தான் பணி நீக்கம் பெற்றதற்கான காரணத்தினை அறிந்துகொள்ளும் உரிமை மறுக்கப்படுவதாகவே உள்ளது.

'நிறுவனமொன்றில் பணிபுரியும் தொழிலாளர் ஒருவரது ஒப்பந்த காலம் முடிவடையும் காலப்பகுதியில், ஒப்பந்த நீடிப்பு, பணி நீக்கம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக குறித்த நிறுவனம் சம்பந்தப்பட்ட தொழிலாளருக்கு அறிவுறுத்த வேண்டும்' எனும் அடிப்படை உரிமை பற்றி அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருந்த போதும், நடைமுறையில் அந்த உரிமையை பெறுவதற்கு இயலுமை அற்றவர்களாகவே உள்ளனர். 

இத்தொழிலாளர்கள் வேறுபட்ட தனியார் நிறுவனங்களின் கீழ் தற்காலிகமாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தமையாலும், அவர்கள் அடிக்கடி இடமாற்றங்களை பெற்றதாலும், பெரும்பாலானவர்களால் தமது சக ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்க முடியவில்லை. இதனால் ஒரு ஊழியர் பணிநீக்கம் பெற்றபோதும், அது தொடர்பாக ஏனைய ஊழியர்கள் அறிந்திருக்கவில்லை. அத்துடன், வேலையில் இருந்து இடைவிலக்கப்பட்ட திகதிகள் ஆளுக்காள் வேறுபட்டிருந்தமையால், யாரை எப்போது பணியிலிருந்து நீக்கினார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.  

தற்போது சுகாதார தொழிலாளர்களாக பணி புரிவோரும், வேலையின் நிச்சயமின்மையை கருத்திற்கொண்டு அச்சம் கொள்கின்றனர். 

இந்நிலையில், தற்காலிக தொழிலாளர்களான இவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பின்நிற்கின்றனர்.

அத்துடன், பணி நீக்கம் பெற்றவர்கள் பெரும்பாலும் பேராதனையை அண்மித்துள்ள பெனிதெனியா, மஹாஹந்த, உடபேராதெனிய, கம்பொல பகுதிகளில் வசிக்கும் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட சமூகத்தவர்களாக காணப்படுகின்றனர். 

இவர்கள் சாதி ரீதியாக ஒடுக்குமுறைக்கு உட்பட்டவர்களாகவோ, பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்தவர்களாகவோ, வயதானவர்களாகவோ அல்லது தனித்து வாழ்பவர்களாகவோ இருக்கின்றனர். இதனால் இவர்கள் சமூகத்தில் தம் உரிமைகளுக்காக தனித்தோ குழுவாக இணைந்தோ குரலெழுப்ப முடியாத நிலையே காணப்படுகிறது.

குறித்த சுகாதார தொழிலாளர்கள் முறையான முன்னறிவிப்பின்றி பணியிலிருந்து நீக்கப்படுவதானது அண்மைக் காலமாக அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடிகளுடன் அவர்களது வாழ்க்கை முறையில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

அத்துடன், நிறுவனங்களில் இடம்பெறுகின்ற திடீர் தொழிலாளர்கள் குறைப்பானது நடப்பு நிலையில் வேலை செய்பவர்களுக்கு இரண்டு மூன்று மடங்கு வேலையை அதிகரிக்கவும் செய்கிறது.

கம்பொலயை சேர்ந்த இந்திராணி பல்கலைக்கழக சுகாதாரப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் கூறுகையில்,  

"நான் பணிநீக்கப்படுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் இவ்வாறு திடீரென பணிநீக்கம் செய்யப்படுவேன் என்று நினைத்திருக்கவில்லை. என் இரண்டு பிள்ளைகளையும் பார்த்துக்கொள்வதற்கு நான் நம்பியிருந்தது அந்த தொழிலைத்தான். 

மூத்த மகள் சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு வீட்டில் தான் இருக்கின்றார். தம்பி சின்னவர். அய்யா (கணவன்) எங்களுடன் இல்லை. பிள்ளைகளை வைத்துக்கொண்டு தனியாகத் தான் மாமியோடு வசிக்கிறேன். 

அடுத்த வேளை சாப்பாடு என்ன என்பதை  சிந்திப்பதற்கே பயமாக உள்ளது. நான் தற்போது நாள் கூலி வேலைகளுக்குப் போகிறேன். ஆனாலும், ஊதியம் போதாது" – (சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

இந்திராணி என்பவர் 47 வயதான பெண். தனது இரண்டு பிள்ளைகளுடன் கம்பொல பகுதியில் வசித்துவருகிறார். 

இவர் ஆரம்பத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். கடந்த மூன்று வருடங்களாக பிரபல தனியார் நிறுவனமொன்றின் கீழ் ஒரு சுகாதாரத் தொழிலாளியாக ஒப்பந்த அடிப்படையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் பணிபுரிந்து வந்தார்.  

தினமும் தனது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம் நடந்து, பின்னர், பேருந்தில் ஏறி வேலைக்குச் சென்றுவந்துள்ளார். 

இவருடையது, பெண்தலைமை குடும்பம்.  இவரது குடும்பத்தினர் இந்திராணியின் வருமானத்தினை மட்டுமே நம்பி இயங்கி வருகிறது. 

கடந்த மார்ச் 19ஆம் திகதி அவர் பணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதனால் இவரது குடும்பம் பொருளாதார ரீதியான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. 

குறித்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளபோதும், அவருக்கு எந்தவொரு ஒப்பந்தக் கடிதமும் வழங்கப்படவில்லை.  

தனித்து சம்பளம் பெறும்போது ETF Cardஇல் மட்டுமே தனது கையொப்பத்தினை இட்டு பணிபுரிந்து வந்துள்ளார். அவரது ஒரு நாள் ஊதியம் 700 - 750 ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த ஊதியம் அவரது வேலை நேரத்தினைப் பொறுத்து மாற்றியமைக்கப்படும். கொவிட்-19 தொற்று காலப்பகுதியில் அவருக்கான வேலை நேரமும் குறைவாகவே காணப்பட்டது.

கடந்த தை மாதம் வரை குறித்த பெண்கள் விடுதியில் சுகாதார தொழிலாளராக பணிபுரிந்து வந்த இந்திராணி, கடந்த மார்ச் 8ஆம் திகதி இன்னுமொரு பெண்கள் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த விடுதியில் பணிபுரிந்து வந்த பெண்களுடனான தகராறு காரணமாக அவர் வேலை செய்வதற்கு சிரமப்பட்டுள்ளார். ஆனாலும், குடும்ப சூழ்நிலையால் தொடர்ந்து வேலை செய்துள்ளார். 

நாட்டின் பொருளாதார சூழ்நிலை, குறைந்த சம்பளம் போன்ற காரணங்களால் பல்கலைக்கழகங்கள் பணியாளர்களைக் குறைப்பதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டு வருகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டிருந்தபோதும், அது தன்னையும் பாதிக்கும் என இந்திராணி அறிந்திருக்கவில்லை. 

புதிய விடுதிக்கு துப்புரவுத் தொழிலாளியாக மாற்றப்பட்ட பின்னர், அடுத்த இரண்டு கிழமைகளில் இந்திராணி பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது இடமாற்றங்கள் தொடர்பாகவோ அல்லது பணிநீக்கம் தொடர்பாகவோ அவர் முறையாக அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை. 

மாறாக, அவர் கடந்த மார்ச் 16ஆம் திகதி பணிக்கு வந்தபோது, 19ஆம் திகதிக்குப் பின்னர் பணியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அவரது சக ஊழியர்கள் மூலம் அறிந்துகொண்டார். 

அதனையடுத்து, அவரது மேற்பார்வையாளர் "நீங்கள் பணிநீக்கப்படவுள்ளீர்கள்; இம்மாதம் 19ஆம் திகதிக்குப் பின்னர் வேலைக்கு வரவேண்டாம்" என இந்திராணியிடம்  கூறியுள்ளார். 

இது தொடர்பாக இரண்டு மூன்று தடவை இந்திராணி, தான் பணிபுரிந்து வந்த தனியார் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு காரணம் கேட்டபோது, முறையான பதில்கள் எதுவும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பொறுப்பான அதிகாரியால் வழங்கப்பட்டிருக்கவில்லை. 

தற்போது அவரது இரண்டு பிள்ளைகளது நல்வாழ்வு சார்ந்த விடயங்களில் பாரிய சவால்களை எதிர்நோக்குகிறார்.

உடபேராதனையை சேர்ந்தவரும் வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத் தொழிலாளியுமான சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், 

"எங்களை பார்த்தால் யாரும் வேலை தர முன்வருவதில்லை. நகர்ப்புறங்களுக்குச் சென்றால், கடைத் தெருவில் கூட எங்களை ஒரு மாதிரியாகத்தான் நடத்துகிறார்கள். 

நான்கு வருடங்களாக வேலை செய்தேன். இனி வேறு வேலைகளை தேடிப் பெறுவதென்றாலும், இனிதான் அந்த வேலைகளை பழக வேண்டும். 

நாங்கள் எதைப் பற்றியும் யாரிடமும் கேட்பதில்லை. அதனால்தான் அவர்கள் நினைத்தபோது எங்களை வேலையில் இருந்து நீக்குகிறார்கள். 

எனக்கு பிள்ளைகள் இல்லை. நானும் இவரும்தான் சமாளித்துக்கொள்கிறோம். இதற்கு முன்னர் தோட்ட வேலைக்குத்தான் போய்க்கொண்டிருந்தேன். வெய்யில் உடம்புக்கு ஆகாமல் போனதால் தான் இந்த வேலைக்குப்  போனேன். அவர்கள் வழங்கிய சம்பளம் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. இப்போது வேலை இல்லை. இனி வேறு எங்கேனும் தான் வேலையொன்றை பார்க்க வேண்டும்" என்றார். 

சுமதி (47) உடபேராதனையில் தன் கணவருடன் வசித்து வருகிறார். இவரது வம்சாவளி இந்தியாவை பூர்வீகமாக கொண்டிருப்பினும், இவர் இலங்கையில் பிறந்த பெண். 

இவரது கணவர் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார். திருமணத்துக்குப் பின்னர் அவர் இலங்கைப் பிரஜையாக வாழ்ந்து வருகிறார். மிகுந்த வறுமையிலும் பிள்ளைகளற்ற போதும், ஒருவருக்கு ஒருவர் அன்பினை பகிர்ந்து வாழ்ந்து வருகின்றனர். 

சுமதி கடந்த நான்கு வருடங்களாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் எந்த திகதியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் அவருக்கே தெரியவில்லை. 

ஒரு சனிக்கிழமை நாளில் அவர் வேலைக்குச் சென்றபோது, அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்கிற விடயம் தெரியவந்துள்ளது. அத்துடன், வழமையான ஊதியத்தை விட அந்த இறுதி மாத ஊதியத்தை குறைவாகவே பெற்றுள்ளார். 

அவரது பணிநீக்கம் தொடர்பாக அவ்விடுதியில் இருந்த சுகாதார தொழிலாளர்களுக்கான மேற்பார்வையாளரிடம் இருந்தோ அல்லது தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம் இருந்தோ முறையான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை.   

அத்துடன், அவரிடம் கைத்தொலைபேசி இன்மையால் அவர் பணிபுரிந்து வந்த இடத்தில் யாருடனும் பழக்கம் இருந்திருக்கவில்லை. அதனால், பணிநீக்கம் பற்றிய மேலதிக தகவல் எதையும், யார் மூலமாகவும் பெறவோ, இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவோ அவரால் முடியவில்லை என்பதாக சுமதி சொன்ன விடயங்களிலிருந்து சிலவற்றை அறிய முடிகிறது. 

அத்துடன், சமகால பொருட்களது விலையேற்றம், அந்த ஊழியர்களது கொள்முதல் திறனை முழுமையாக தடைசெய்துள்ளது. 

மேலும், தமது வீட்டில் உள்ள சிறு நிலப்பரப்பில் சிறிய தோட்டமொன்றை அமைத்து, அதனூடாக கிடைக்கும் மரக்கறிகளை தாம் உட்கொண்டு நாட்களை கடத்துவதாகவும், கணவர் கூலி வேலைக்குச் செல்கிறபோதும் அவரது ஊதியம் போதுமானதாக இல்லை எனவும் சுமதி தெரிவித்தார். 

அத்துடன், இந்த தம்பதி அன்றாட வாழ்க்கைச் செலவுகளை முகாமை செய்வதில் இயலுமை அற்றவர்களாகவே இருப்பது, இவர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலான விடயமாகிறது. 

அடுத்து, உடபேராதெனியவை சேர்ந்தவரும் பணிநீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத் தொழிலாளியுமான ராசையா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரிவிக்கையில், 

 "என்னை சென்ற வருடமே வேலையில் இருந்து நிறுத்திவிட்டார்கள். நான் தற்போது கூலி வேலை செய்கிறேன். வயது போய்விட்டது என்பதற்காக என்னை வேலையில் இருந்து நிறுத்தியிருப்பார்கள் போலும். எங்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் நிறைய தூர இடைவெளி இருக்கிறது" என்கிறார்.

ராசையா 63 வயது சுகாதாரத் தொழிலாளி. அவர் தன் சாதியின் நிமித்தம் பொது இடம் மற்றும் தான் தொழில் புரியும் இடங்களில் பாகுபடுத்தலுக்கும் புறக்கணிப்புகளுக்கும் உட்பட்டுள்ளார். 

இவர் பேராதனை பல்கலைக்கழக பீடமொன்றின் தூப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். 

இவர் வாடிகான்களை துப்புரவு செய்வது, உணவுக் கழிவுகளை தரம் பிரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இருந்தும் மேலதிகமான சிறு சிறு வேலைகளை செய்வதற்கும் பணிக்கப்பட்டுள்ளார். 

கடந்த வருடம் மே மாதமளவில் பணியில் இருந்து இவர் நீக்கப்பட்டபோது முறையான காரணங்களை இவரால் பெற முடிந்திருக்கவில்லை. 

அவரது ஒரு மகளும், மகளின் இரண்டு பிள்ளைகளும் ராசையாவின் ஊதியத்திலேயே வாழ்ந்து வந்தனர். 

இவர் வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், தோட்ட வேலைகளுக்குச் சென்று வந்தபோதும், குடும்பத்தினரது பொருளாதார செலவுகளை ஈடுசெய்வது பெரும் சவாலானது என்கிறார்.

இந்நிலையில், பேராதனை பல்கலைக்கழகத்தில் தற்போது சுகாதார தொழிலாளியாக பணிபுரியும் விமலாதேவி கூறுகையில், 

"நிறைய பேரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார்கள். அதனால் தற்போது எமக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. இரண்டு, மூன்று பேர் செய்யும் வேலைகளை நாங்களே செய்ய வேண்டியுள்ளது. ஆனாலும், ஊதியம் அதிகரிக்கப்படவில்லை. 

குப்பைத் தொட்டிகளில் உணவை தரம் பிரித்து  போடுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியும், குப்பைத் தொட்டிகளில் உரியவாறு கழிவுகளை மாணவர்கள் போடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ள போதும், அவற்றை மாணவர்கள் உரிய முறையில் பின்பற்றுவதில்லை. 

அத்துடன், மண், சேற்றினை காலணிகளில் அப்பியவாறு கழிப்பறைகளுக்குள் நடந்து வருகின்றனர். ஒரு நாளில் இரண்டு முறை கழிப்பறைகளை சுத்தம் செய்கிறபோதும் அதனை தூய்மையாக வைத்திருக்க முடிவதில்லை. மிகவும் சிரமமாக உள்ளது. எங்களை பற்றியும் யோசிக்க வேண்டுமல்லவா!" என்கிறார்.

விமலாதேவி 40 வயதான சுகாதாரத் தொழிலாளி ஆவார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவில் கட்டங்களுக்குப் பொறுப்பான சுகாதாரத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பது, உணவுக் கழிவுகளை தரம் பிரிப்பது, சூழலை தூய்மையாக பேணுவது (கூட்டுதல் மற்றும் கழுவுதல்) போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

அவர் அண்மைக் காலமாக இடம்பெற்ற தூய்மைத் தொழிலாளர்களது எண்ணிக்கை குறைப்பால் தமக்கு ஏற்பட்டுள்ள வேலைச்சுமை தொடர்பாக பகிர்ந்துகொண்டதுடன், சக பணியாளர்கள் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டமையாலும், பணிநீக்கம் பெற்றவர்களது தொடர்பு இல்லாததாலும் யார் யார் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பதை பற்றி தனக்கு தெரியாது என குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட தரவின் அடிப்படையில், சுகாதார தொழிலாளர்களது பணிநீக்கம் காரணமாக மாணவர்கள் தமது விடுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து குப்பைத் தொட்டிகளில் இடுவதற்கும், ஏனைய சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த சுகாதார ஒழுங்கு நடைமுறைகள் மாணவர்களால் சரிவர பின்பற்றப்படுவதில்லை. இவ்வாறான சூழ்நிலையில், தற்போதுள்ள குறைந்தளவான ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்திருப்பது முக்கிய பிரச்சினையாக காணப்படுகிறது.

வேலை நிறுத்தம் தொடர்பான சில தனியார் நிறுவனங்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில், Ultrakleen தனியார் நிறுவனத்தின் பணியாளர் ஒருவரிடம் சுகாதார தொழிலாளர்களின் பணி இடைநிறுத்தம் குறித்து வினவியதற்கு அவர் பதிலளிக்கையில், 

"ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒவ்வொரு வருடமும் தமக்கு வேண்டிய தொழிலாளர் எண்ணிக்கையினை ஏல அடிப்படையில் எமக்கு கொடுப்பது வழக்கம். அதன்போது வரையறுக்கப்படும் எண்ணிக்கைக்கேற்ப, எமது தொழிலாளர்களை அனுப்பிவைப்போம்.

இந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையானது கடந்த வருடத்தில் இருந்து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சிலவேளை காணப்படலாம். அவ்வாறானதொரு  கணிப்பின்படியே, இவ்வருடம் பேராதனை பல்கலைக்கழகத்தின் விடுதியில் பணிபுரிந்து வந்த 6 சுகாதாரப் பணியாளர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். (நடப்பு ஊழியர்களில்  ஒப்பந்தக் காலம் முடிவடைந்த 6 தொழிலாளர்களே ஒப்பந்த நீடிப்பின்றி நீக்கப்பட்டனர்) இதில் சில பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையை அதிகரித்தும் உள்ளன" என குறிப்பிட்டார்.

பெரும்பாலான சுகாதாரத் தொழிலாளர்கள் சமூகத்தின் ஓரங்கட்டலுக்கு உட்படுகின்றனர். அவர்களது பொருளாதாரம் அவர்களது நாளாந்த சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. 

சம காலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமின்மை, அதிகரித்த பொருட்களின் விலை, தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்கள் போன்றன அவர்களது வேலை நேரத்தையும் குறைத்துள்ளது. 

மேற்குறிப்பிட்ட சுகாதார தொழிலாளர்களது ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள போதும், அவர்கள் அது தொடர்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை. 

அந்த தொழிலாளர்கள் தமது ஒப்பந்த காலம் மீள நீட்டிக்கப்படுமா, இல்லையா? அல்லது எப்போது இரத்து செய்யப்படும் போன்ற தகவல்களை தெரிந்துகொண்டிருக்கவில்லை. குறிப்பாக, அவர்கள் இந்த ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர், தாம் பணிநீக்கம் செய்யப்படுவதை எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்நிலையில், முன்னறிவித்தல் இன்றிய வேலைநிறுத்தமானது தம் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களை முகாமை செய்வதில் பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டனர். 

அதுமட்டுமன்றி, தொழிலை இழந்த இத்தொழிலாளர்கள் சில சமூக காரணிகளால் உடனடியாக இன்னொரு வேலையில் இணைந்துகொள்ளவும் முடியாதவர்களாக காணப்படுகின்றனர். 

சாதி பாகுபாடு, சுகாதாரத் தொழிலாளர்கள் மீதான சமூகத்தினது பாரபட்சம், அரசின் முறையான வளப் பங்கீடின்மை போன்றன பொருளாதார ரீதியில் மேலும் அவர்களை வீழ்த்தியுள்ளது. 

அவர்கள் நாள் ஊதியம் பெறுவதனால் முறையான தொழிற்சங்க உரிமைகளை கோருவது என்பது சாத்தியமற்றதாக உள்ளது. அத்துடன், அவர்கள் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்த ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சாத்தியத்துக்கான அறிமுகமும் விடயத் தெளிவும் இல்லாமல் தொழில் புரிவதற்கான சூழலே உள்ளது. 

இலங்கையில் சுகாதார பணியாளர்கள் உட்பட நாள் ஊதியத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் தொழில் புரிபவர்களது உரிமைகள் தொடர்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான ஆர்.கே.எம். ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், 

"தனியார் நிறுவனங்களின் கீழ் நாள் ஊதிய அடிப்படையில் ஒப்பந்த வேலை செய்பவர்களுக்கு தொழிற்சங்கங்களை அமைப்பதற்கு உரிமையுண்டு. ஆனாலும், அதன் நடைமுறைச் சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

நாள் ஊதிய ஒப்பந்த வேலையாட்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சர்வதேச சமூகங்கள் கூட ஊக்குவிப்பதில்லை. இது முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கான ஒரு வடிவமாக செயற்படுகிறது" என்றார். 

அத்துடன், "இலங்கையிலும் நாள் ஊதிய வேலை செய்பவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சாத்தியமற்ற நிலையே காணப்படுகிறது. சுகாதாரத் தொழிலாளர்களை பொறுத்தவரையில், அவர்கள் சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தவர்களாகவே காணப்படுகின்றனர். இந்நிலையில் அவர்கள் தொழில் புரியும் இடங்களிலும் பொது இடங்களிலும் பாகுபாட்டுக்கும் அடக்குமுறைகளுக்கும் உட்படுகின்றனர். 

இலங்கையை பொறுத்தவரையில், சுகாதாரத் தொழில் என்பது சாதி மற்றும் இன ரீதியான முகங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. பரம்பரை பரம்பரையாக அத்தொழிலாளர்கள் குறித்த சுகாதாரத் தொழிலைச் செய்வதற்கு பல்வேறுபட்ட புலனாகாத காரணங்களால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். 

குறித்த தொழிலாளர்கள் தாம் வேலையில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பாக அறிவுறுத்தப்பட வேண்டும். அதாவது அவர்களது ஒப்பந்த காலம் முடியும் தருணத்தில் ஒரு மாத காலத்துக்கு முன்பாக அவர்களது ஒப்பந்த காலம் நீடிக்கப்படவுள்ளதா அல்லது முடிவடைந்துள்ளதா என்பது தொடர்பாக அறிவிக்கப்பட வேண்டும். ஆனாலும், அது இலங்கை போன்ற நாடுகளில் இடம்பெறுவதில்லை. குறிப்பாக, ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட சமூகம் என்ற அடிப்படையில் அவர்களது உரிமைகள் தொழில் இடங்களில் அதிகமாகவே மீறப்படுகின்றன. 

மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுதல், அதிகமான வேலை நேரம், வசவுச் சொற்களுக்கு ஆளாகுதல், துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுதல், சுரண்டல் என பல அநீதிகளுக்கு முகங்கொடுக்கின்றனர். 

இந்நிலையில், அவர்கள் தொழிற்சங்கமாக ஒருங்கிணைந்தாலோ அல்லது தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்தாலோ அல்லது குறித்த நிறுவனத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தாலோ, அச்சந்தர்ப்பத்தில் அவர்கள் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு, பணியில் இருந்து இடைநிறுத்தப்படுவார்கள். 

இவ்வாறான சம்பவங்களே நடைமுறையில் இடம்பெறுகின்றன. இந்நிலையில், இவர்களது தொழிற்சங்க உரிமைகள் தொடர்பான உரையாடல் இன்னமும் பேசுபொருளாகக் கூட இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். 

எனவே, அவர்கள் தம் உரிமைக்காக போராடுவது சாத்தியமற்றதாக உள்ளது.

பொதுவாக, தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழில் புரியும் சுகாதார ஊழியர்கள் எந்தவொரு முறையான முன்னறிவிப்பும் இன்றி பணிகளிலிருந்து நீக்கப்படுகின்றனர். 

பொருளாதார நிலை, அடையாளம், கல்வி அறிவு போன்றவற்றின் அடிப்படையில் அந்த தொழிலாளர்கள் தனியார் நிறுவனங்களில் தங்கி வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் தமது உரிமைகள் மறுக்கப்படும்போதோ மீறப்படும்போதோ குரல் எழுப்ப முடியாதவர்களாகவே உள்ளனர். 

குறித்த சுகாதார ஊழியர்களது பணிநீக்கம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஆளுக்காள், நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபட்டு காணப்படுகிறது. இது, சுகாதாரத் தொழிலாளர்கள் சார்ந்து காணப்படுகின்ற அலட்சியப்போக்கினையே எடுத்துக்காட்டுகிறது. 

ஆனால், இத்தகைய பணிநீக்கமானது அவர்களது கொள்முதல் திறனில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், அவர்களது அன்றாட வாழ்க்கை தொடர்பான அச்சுறுத்தலை அதிகரிக்கச் செய்துள்ளது. அத்தோடு, மிகக் குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் அன்றாட வேலைகளை செய்யத் தூண்டியுள்ளது. இது அவர்களது தொழில்சார் பாதுகாப்பின்மையை  புலப்படுத்துகிறது.

இவற்றை தொகுத்து நோக்கும்போது, ஒப்பந்த அடிப்படையில் நாள் ஊதியம் பெறும் தொழிலாளர்களது உரிமை என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாகும். 

எனவே, இப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கிலான தேசிய மற்றும் சர்வதேச மட்ட உரையாடல்கள், தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை காணப்படுகிறது. 

மேலும், தொழிற்சங்க ரீதியாக இவர்களை வலுவூட்டுவதும், இவர்களது உரிமைகள் மீறப்படும்போது அதனை ஒரு தொழிலாளர் பிரச்சினையாக முன்வைத்து செயற்படுவதும் ஒப்பந்த அடிப்படையிலான நாள் ஊதிய தொழிலாளர்களது நீடித்த நலவாழ்வுக்கான தொழில்சார் உறுதிப்படுத்தலை ஏற்படுத்தும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் Protect Union போன்ற அமைப்புக்கள் நாள் ஊதிய அடிப்படையில் வேலை செய்பவர்களது உரிமை சார்ந்த உரையாடல்களை முன்னெடுக்க வேண்டும். அவற்றினூடாக தீர்வுகளை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனாலும், முதலாளித்துவ கட்டமைப்பினுள் அது சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது. 

அத்துடன், சமகால பொருளாதார நெருக்கடி நிலையில், இவ்வாறு தொழில்களை இழந்த தொழிலாளர்களுக்கு அரசு உடனடியாக மாற்று தொழில்சார் வழிகளை இனங்காட்டுவதுடன், அவர்களுக்கான புதிய தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு, ஆரோக்கியமான கல்வி அணுகல் ஊடான பல்கலைக்கழக இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு, பரம்பரை ரீதியாக சுகாதார தொழிலாளர்களாக்கப்படும் நிலை  மாற்றியமைக்கப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48
news-image

மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம்...

2023-09-25 11:43:22
news-image

பசும்பால் விற்க இடையூறு : மதுபானசாலைகளுக்கு...

2023-09-25 11:02:40
news-image

மறுக்க முடி­யாத உரிமை

2023-09-24 19:45:52
news-image

ஜனா­தி­ப­தியின் அதிகப் பிர­சங்­கித்­தனம்

2023-09-24 19:46:10
news-image

தனி வழி செல்­வ­தற்கு கள­ம­மைக்கும் பஷில்

2023-09-24 19:46:51
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒத்துழைப்பை வலியுறுத்தும் ஆசிய...

2023-09-24 19:47:49
news-image

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் பண ...

2023-09-24 19:48:27
news-image

வளர்ந்து வரும் ஆப்பிரிக்க சக்திகளின் எழுச்சி

2023-09-24 19:53:55
news-image

ஒஸ்லோ உடன்படிக்கையும் மரணித்துவிட்டது

2023-09-24 19:54:17
news-image

இந்­திய - கனே­டிய இரா­ஜ­தந்­திர முறுகல்...

2023-09-24 15:36:36