பொருளாதார சிக்கல்களிலும் அதனை சார்ந்த பிரச்சினைகளிலும் நெருக்கடிக்குள்ளான குஞ்சாங்கல் குளம் கிராமத்தின் கரையோர வேடுவர்களின் கதை
“என்ன பிரச்சனை என்று எங்களுக்கும் தெரியா. அந்த பிரச்சனைக்கு பிறகு தம்பானை பகுதில இருந்து ஒரு பெரிய கூட்டம் ஒன்று அப்பிடியே இந்த மகாவலி கங்கை கரையோரமா நடந்து இந்த பக்கம் வந்ததா எங்கட வரலாறு சொல்லுது. அதுக்கு பிறகு கிழக்கு கரையோரமா காட்டுகுள்ள வாழ்ந்துட்டு வந்த எங்கட மூதாதையர்கள இந்த ப்ரீட்டிஸ் காரன் கண்டு கடற்கரை பக்கமா குடியேத்தி இருக்கான். அதும் என்னதுக்கு அந்த காலத்துல இன்னொரு வெளிநாட்டு காரனோட அவனுக்கு சண்ட. அதுக்கு காவலுக்கு எங்கட சனத்த கடற்கர பக்கமா போட்டு இருக்கான், அதுல தொடங்கி எங்கட சனம் கொஞ்சம் கொஞ்சம் கிராமங்கள்ல குடியேறி இருக்குதுகள்”
என தங்களது வரலாற்றை சில வரிகளில் கூறி முடித்தார் கரையோர வேடுவர்களின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் அவர்கள்.
இலங்கையை பொறுத்த வரை ஆதிக்குடிகளாக கருதப்படுபவர்கள் வேடுவ இன மக்கள் ஆவர். இவர்கள் இலங்கையின் அரசாட்சி காலங்களுக்கு முற்பட்ட காலங்களில் இருந்து அறியப்படும் சுதேச இனமாக உள்ளனர். தற்போது இலங்கையின் மத்திய பகுதிகளில் தம்பானை , மகியங்கனை ஆகிய பகுதிகளிலும் ( கல்வேடர்கள்) கிழக்கு கடற்கரை பகுதிகளிலும் (கரையோர வேடர்கள்) ஆங்காங்கு வாழ்ந்து வருகின்றனர். உண்மையில் இலங்கையில் வாழும் அதிகமான மக்கள் கிழக்கு கடற்கரையோரமாக வாழ்ந்து வரும் கரையோர வேடுவர்கள் பற்றி அறிந்திருப்பார்களா என்பதே கேள்விக்குறியான விடயமாகும்.
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் கரையோரத்தை அண்டிய கிராமங்களில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் திராய்மடு வரையிலான பிரதேசம் வரை இவர்களது குடியிருப்புகள் தற்போது அறிய படுகின்றது. அந்த வகையில் மூதூர் , வெருகல், வாகரை , இலங்கைத்துறை, மாங்கேணி, வாகனேரி, குஞ்சாங்கல்குளம், கதிரவெளி, காயங்கேணி, மதுரங்குளம், பனிச்சங்கேணி, கட்டுமுறிவு, நாசிவன் தீவு, இறால் ஓடை, பொண்டுகள்சேனை, களுவங்கேணி, பால்சேனை, திராய்மடு, கொக்கட்டிசோலை ஆகிய பிரதேசங்களில் தற்போது குறுகிய ஒரு வட்டத்தினுள் வாழ்ந்து வருகின்றனர். அந்நிய காலணித்துவம் தொடக்கம் உள்நாட்டு யுத்தம், இன ஆக்கிரமிப்பு, புவியில் ரீதியிலான மாற்றம் , சுனாமி , காடழிப்பு , நில ஆக்கிரமிப்பு மற்றும் காலநிலை மாற்றம் என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட இம்மக்கள் தற்போது நாட்டின் பொருளாதார சிக்கலின் காரணமாக, வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி நிற்கும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.
பொருளாதார சிக்கலும் அவர்களது வாழ்வாதாரமும்
கரையோர வேடுவ மக்கள் தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக பிரதானமாக விவசாயம் , மீன்பிடி , தேன் விற்பனை, கால்நடை வளர்ப்பு என்பவற்றை செய்து வருகின்றனர். தங்களது நிலங்கள் மட்டுபடுத்தபட்டமையாலும் , அவர்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள காடுகள் வன பரிபாலன சபையினால் பாதுகாக்கபடுகின்றதாலும் காடுகள் மூலம் தாங்கள் பெற்று கொள்ளும் வளங்கள் மற்றும் வருவாய்கள் தற்போது முற்றாக தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் தங்களது பாரம்பரிய காடு சார் தொழில்களில் இருந்து விடுபட்டு விவசாயம் மீன்பிடி மூலம் ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயத்தின் போக்கு
“ எனக்கு தெரிஞ்சி நாங்க விவசாயம் செஞ்சு லாபம் பார்த்தது கடைசியா 2020லான். அப்ப அந்த லாபத்துல பைக் ஒண்டு வாங்குனன். இப்ப கடன எல்லாம் கட்டுறதுக்காக பைக்க விக்க ஓடி திரிறன். இது தான் எங்கட தற்போதைய நிலை. இத விட எப்படி சொல்லுற எண்டு எனக்கு தெரியல” என தொடர்கிறார் கரையோர வேடுவ சமூகத்தில் பிரதானமாக விவசாயம் செய்யும் லிங்கரத்னம் அவர்கள்.
மேலும் தொடர்ந்த லிங்கரத்னம் “ சொல்ல போனா..நாட்டுல இந்த பொருளாதார நெருக்கடிக்கு முன்னுக்கும் எங்களுக்கு விவசாயத்துல பெருசா காசு வாரது இல்ல. நாங்க பெரிய அளவுல விவசாயம் செய்றவங்க இல்ல. ஒரு குறிப்பிட்ட அளவு நிலப்பரப்புல தான் செய்றது. முதலாவதா எங்களுக்கு விவசாய காணி என்று ஒன்று ஒழுங்கா இல்ல. அப்படி ஒரு நிலைமைலான எங்கட விவசாய செயற்பாடு இருந்து வந்தது.
லிங்கரத்னம் ( விவசாயி –குஞ்சாங்கல் குளம் வேடுவ சமூகம்)
ஆனா எங்கட தேவைகளுக்காகவும் பாதிய விற்கிறதாலயும் கொஞ்சம் லாபம் எங்களுக்கு விவசாயத்தால இருந்தது என்று சொல்லலாம். ஆனா எப்ப இந்த யூரியா சாமானுக்கெல்லாம் விலை கூடுனதோ அப்பயே எங்கட விவசாய நடவடிக்கை எல்லாம் தலைகீழா போய்ட்டு. எங்கட கடனுகளும் கூடி போய்ட்டு. மத்த சனம் போல பெரிய அளவுல நாங்க வேளாண்மை செய்தாலும் பார்த்து சமாளிச்சிரலாம். இங்க நாங்க செய்றதுக்கு பசளைக்கே எல்லா காசும் போய்ட்டு எண்டா அறுவடை காலம் வரைக்கும் தாக்கு பிடிக்க ஏலாம போது. கடனுக்கு மேல கடன் தான் கூடுது” என தற்போதைய தங்களது விவசாய நிலைமையை கூறுகின்றார்.
கரையோர வேடுவ சமூகத்தை பொறுத்த வரையில் தங்களது பூர்விக தொழிலாக காடு சார்ந்த வாழ்வாதரங்களை கொண்டவர்களாக இருந்தாலும் விவசாயத்தையும் பிரதானமாக கொண்டு இயங்கி வந்த ஒரு வேடுவ பிரிவினரும் அவர்களுள் இருந்தே வந்துள்ளனர். நாட்டில் இடம்பெற்ற உள் நாட்டு யுத்தம் காரணமாக காட்டு பகுதிகளில் இருந்து அவர்கள் தற்போது இருக்கும் பிரதேசத்துக்கு குடியேறியதுடன், அவர்களது பூர்வீக விவசாய காணிகள் அதன் பிறகு காடுகளாகவும் மாறிப்போயின. அதன் பிறகான கால கட்டங்களில் வன பரிபால சபைக்கு அந்த காட்டு பகுதிகள் சொந்தமானதின் விளைவு கரையோர வேடுவர்கள் தங்களது பூர்வீக விவசாய காணிகளை முற்றாக இழக்க நேரிட்டது. தற்போது தங்களது குடியேற்ற பகுதிகளில் அவர்களுக்கு கிடைக்கபெற்ற குறுகிய ஒரு விவசாய காணிக்குள்ளேயே அவர்களது வேளான்மை அடங்கியிருக்கின்றது. இவ்வாறான ஒரு நிலைமையில் நாட்டின் பொருளாதர சிக்கலானது அவர்களது விவசாய நடவடிக்கைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
மீன்பிடியும் நாங்களும்
“ என்னுடைய கணவர் மீன்பிடியை பிரதானமாக செய்து வருகின்றார். முன்பு, நாங்கள் திருமணம் செய்து கொண்ட காலத்தில் அவர் கடலில் மீன்பிடிப்பதற்காக மாங்கேணி கடலுக்கு செல்வது வழமை. அப்போதெல்லாம் தோணி மூலமான மீன்பிடி தான். அதன் பிறகான கால கட்டத்தில் எஞ்சின் படகுகள் அறிமுகமாகின. அது வாங்குவதற்கான வசதி எங்களுக்கு இருக்கவும் இல்லை. பின்னர் நாங்கள் குஞ்சாங்கல்குளம் பகுதிக்கு வந்தாகினோம். இங்கு இருந்த குளத்தில் தான் அதன் பிறகான அவரது மீன்பிடி நடவடிக்கை இருந்தது. இப்போது வரை இந்த குளம் தான் எங்களுக்கு பசியாற்றுகின்றது. என்று தங்களது மீன்பிடி வாழ்வாதரத்தை கூற ஆரம்பித்த மசோலா தற்போது எவ்வாறு மீன்பிடி மூலம் கிடைக்கும் வருமானம் குறைய ஆரம்பித்துள்ளது என்பதையும் பின்வருமாறு கூறுகின்றார்.
மசோலா - கரையோர வேடுவ சமூக பெண்மணி
“ இந்த குஞ்சாங்கல்குளத்து மீனுக்கு எண்டு ஒரு மவுசு இருக்கு மனே, முந்தி எல்லாம் வியாபாரிமார் வந்தா நல்ல விலைக்கு வாங்கித்து போவாங்க. காலைல ஒருக்கா பின்னேரம் ஒருக்கா எண்டு ரெண்டு தடவ எல்லாம் வியாபாரிமார் மீன் வாங்க வாரவங்க. ஆனா இப்ப அதெல்லாம் இல்ல. காலைல மட்டும் அது எப்பயாச்சும் ஒருக்கா தான் ஆக்கள காணலாம். அதும் வந்தாங்க எண்டா கடும் சின்ன விலைக்கு மீன கேக்குறவங்க. எப்பிடி என்றா ஒரு கிலோ மீன் வித்தா அரை கொத்து அரிசி கூட வாங்க ஏலா. குளத்து மீன் ஒரு நாளைக்கு ஒரு கொஞ்சம் தான் பிடிக்கலாம் மனே. குஞ்சு மீன் எல்லாம் பிடிக்க ஏலா அல்லோ. அப்ப பிடிக்கிற மீனெல்லாம் வியாபாரி மாருக்கு கொடுத்து வார காசு அண்டைக்கு சாப்பாட முடிக்கயே காணாம தான் போகுது. இங்க இப்ப 200 ரூபாய்க்கு வாங்கித்து போய் அவங்கட சந்தை வழியே 700 ரூபாய்க்கு எல்லாம் விக்கிறத பார்த்து இருக்கம் மனே. நாங்களும் விலை கூட்டி கேக்குறது தான் அவங்க கிட்ட. அவங்க சொல்லுறது இங்க காட்டுகுள்ள இத்தன தூரம் வந்து வாங்கித்து போறம் , பெற்றோல் சாமான் அடிச்சி வாரதுக்கே காசு காணா அப்பிடி எண்டு சொல்லுறாங்க. எங்களுக்கும் வாகனம் ஒன்னும் இல்ல. அதால கேக்குற விலைக்கு தான் கொடுக்குற. எல்லாம் இந்த பெற்றோல் , டீசல் சாமாண்ட விலை” என்று தங்களது துயரங்களை பகிர்கின்றார் மசோலா.
குஞ்சாங்கல் குளம்
உலகம் முழுவதும் அடித்தட்டு மக்களுக்கும் சரி, சிறிய அளவிலான உற்பத்தியாளர்களுக்கும் சரி தங்களது உற்பத்தி மற்றும் உழைப்பிற்கான சரியான விலை நிர்ணயிப்பது என்பது இந்த காலம் வரையிலும் எட்டாக்கனியாக தான் இருக்கின்றது எனலாம். அவர்களது தொடர் வறுமைக்கான காரணங்களுக்கு பிரதானமாக விலை நிர்ணயம் அவர்களுக்கு சாதகமாக இல்லாதது தான் என்பது உண்மை. அது கரையோர வேடுவ சமூகத்திற்கும் பொருந்தி போகின்றது.
நல்லதம்பி வேலாயுதம் (கரையோர வேடுவ தலைவர்)
நீங்க சொல்லுற பொருளாதார தடை எல்லாம் மத்த சனங்களுக்கு எப்படி என்று தெரியல மனே. அரசாங்க உத்த்யோகத்தர், கம்பெனி வேலை மாச சம்பளம் எண்டு எல்லாரும் வாழ்க்கைய ஓட்டிகொண்டு போவாங்க. ஆனா எங்கட சமூகத்துல அதுக்கெல்லாம் வாய்பில்லையே. நாங்க விக்கிற பொருட்களுக்கு விலை இல்ல. ஆனா அந்த பக்கம் இருந்து வார பொருட்களுக்கு சரியான விலை. அப்ப நாங்க இத வித்துட்டு அத எப்படி வாங்க ஏலும். இந்த தேனுக்கெல்லாம் இப்ப விலை குறைஞ்சிட்டு. யாரு இதெல்லாம் குறைக்கிறா?
எப்படி குறையுது ஒண்டும் எங்களுக்கு தெரியுது இல்ல. வாங்குற ஆக்கள் சொல்றாங்க எல்லா பக்கமும் இப்ப தேன் கிடைக்குது. அதால விலை குறைங்கோ என்று. உண்மையா வன வள திணைக்களம் இப்ப காட்டு பக்கம் எங்கள போக கூடா என்று கல் போட்டுடாங்க. அதால நாங்களே காட்டுக்கு போறது இப்ப குறைய. அப்படி இருக்கும்போது, மத்த சனம் எப்பிடி காட்டுக்கு போய் தேன் எடுக்குது என்று எங்களுக்கு சந்தேகமா கிடக்கு” என்று தங்களது தேன் விற்பனை குறைந்ததை பற்றி கூறுகின்றார் கரையோ வேடுவர்களின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் அவர்கள்.
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 48 கிராமங்களில் கரையோர வேடுவர்கள் பரந்து காணப்படுகின்றனர் எனவும், அவர்கள் எல்லோரும் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குஞ்சாங்கல் குளம் கிராமத்தில் மொத்தமாக 70 ஆதிவாசி இன குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் அனைவரும் ஜூவனோபாயத்திற்காக விவசாயத்தையும் மீன்பிடியையுமே நம்பி வாழ்கின்றனர். இந்த குஞ்சாங்கல் குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட குளமானது தேசிய நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் 1960ம் ஆண்டு காலப்பகுதிகளில் அரசாங்கத்தினால் அமைத்து கொடுக்கப்பட்டது. அப்போது இருந்து இங்கு மீன்பிடி மேற்கொள்ளபட்டாலும் உள் நாட்டு யுத்த காலப்பகுதிகளில் தான் இவர்களில் பெரும்பாலோனோர் காட்டு பகுதிகளில் இருந்து கிராமப்புறங்களுக்கு இடம்பெயர்ந்தனர். அதன் பின்னான காலத்தில் மீன்பிடி பிரதானமாக மேற்கொள்ளபடுகின்ற ஒன்றாக மாறிவிட்டது.
எங்களின் அனுபவங்களில் பஞ்சமும் பட்டினியும்
“ இது என்ன பஞ்சம் ? என்ட வயசுக்கு நான் நிறைய பஞ்ச காலத்த எல்லாம் தாண்டி வந்து இருக்கேன். ஆனா அப்ப கூட எங்கட காடு எங்களுக்கு சாப்பாடு போட்டது . வானம் எங்கட தாகத்த தீர்த்தது. இப்ப இருக்க இந்த பஞ்சத்துல எங்களுக்கு காடும் சாப்பாடு போடல, அந்த வானமும் எங்கட தாகத்த தீர்க்கல” இது மாங்கேணி பிரதேசத்தில் வாழும் கரையோர வேடுவ சமூகத்தின் வயது மூத்த பெண்மணியான கணபதி நேசம்மாவின் குரலாகும்.
அவருடைய 85 வருட அனுபவத்தில் அவர் பல பஞ்சங்களை கடந்து வந்திருந்தாலும் கூட இன்றைய பொருளாதார நெருக்கடி போன்ற ஒன்றை அவர் இதுவரையில் பார்த்ததில்லை என்கிறார். அவர்கள் காடுகளோடு ஒன்றித்து வாழ்ந்த காலத்தில் தங்களுக்கான தேவைகளை அதன் மூலம் பெற்று கொள்ள முடிந்ததுடன், பரந்து பட்ட விவசாய காணிகளை கொண்டு சிறந்த அறுவடையையும் தங்களால் பெற முடிந்தது என்கிறார்.
“இப்பான் இந்த யூரியா அது இது விலை கூடிட்டு என்று சொல்லுறாங்கள், அந்த காலத்துல நாங்க காசு கொடுத்து எந்த சாமானும் வாங்கி விவசாயம் செய்யல. எங்கட ஆம்பிளை ஆக்கள் எல்லாம் முழுக்க விவசாயமும் காட்டு தொழிலும் எண்டு இருப்பாங்க. நாங்க எங்கட வீட்டு வளவுகுள்ளயே மரக்கறி, கிழங்கு , கீரை என்று எல்லாத்தாதையும் போட்டு வளக்குறனாங்க. மழையும் காலா காலத்துக்கு வந்து மண்ண குளிர வைக்கும். இப்ப எங்க ? மழைத்தண்ணிக்கும் காசு கூடிட்டோ தெரியா”
கணபதி நேசம்மா
உண்மையில் பஞ்சம் , வரட்சி என எல்லாவற்றிற்கும் அவர்களது மரபுவழி நுட்பங்களை கொண்டு தங்களது வாழ்க்கை முறையை கட்டமைத்து கொண்ட பழங்குடி மக்கள் தற்போதைய பொருளாதார சிக்கலில் அதிகமாக பாதிக்கபட்டுவரும் சமூகமாக மாறியது எவ்வாறு என்ற எண்ணம் எமக்கும் தோன்றியது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட களப்பயணங்கள் மூலம் அவர்களது சமூகவியல் சார் பிரச்சினைகளையும் எங்களால் அறிய முடிந்தது.
கரையோர வேடுவ மக்கள் ஆதிகாலத்திலயே விவசாயம் மற்றும் சேனைச்செய்கைக்காக கிழக்கின் கரையோர பகுதி முழுவதும் ஆங்காங்கு பரவி காணப்பட்டனர். காட்டு நிலங்களை பயன்படுத்தி சேனைப்பயிர்செய்கையை மேற்கொண்ட பின் மீண்டும் அந்த நிலங்களில் காடுகள் வளர அனுமதிப்பர். இவ்வாறான சுழற்சி முறையான நிலப்பயன்பாடு மூலம் காடுகளை அவர்கள் பாதுகாத்ததோடு அவர்களது வாழிடங்களும் இடமாறிகொண்டு இருக்கலாயின. அதன் காரணமாகவும் நிலம்சார் உரிமைகளை பற்றிய அறியாமையின் காரணமாகவும் இந்த மக்கள் தங்களது நிலங்களுக்கான ஆவணங்களோ அல்லது உரிமைபத்திரங்களோ இல்லாதவர்களாகவே காணப்பட்டனர். அதுவே அவர்களுக்கு பிரச்சினைகளாக மாறத்தொடங்கின. உள்நாட்டு யுத்தத்திற்கு பிறகான காலக்கட்டங்களில் காடுகள் யாவும் வனவள திணைக்களத்தினால் நேரடியாக பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றப்பட்டன. காடுகளில் குடியேற்றங்கள் அமைத்தல் , வளங்களை பெற்றுக்கொள்ளல் யாவும் தடை செய்யபட்டதன் பின்பு இவர்கள் தங்களது பூர்வீக நிலங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நேரடியாக சொல்வதாயின் வாழிடங்கள், வாழ்வாதர நிலங்கள் என்பன யாவும் இழக்கப்பட்டவர்களாக மாறினர்.
அதன் பிறகு அரசாங்கத்தின் வழியாக அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் குடியேற்றபட்டதுடன், அப்போது இருந்த குடும்பங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே காணிகள் வழங்கப்பட்டு இருந்தன. அப்போது கூட சில குடும்பங்களுக்கு காணிகள் கிடைக்காமால் வேறு இடங்களுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டது.
“ எங்கட வேட சமூகம் பாரம்பரியமாக கூட்டு குடும்பமா இருக்கிறது இல்ல. இரண்டு பேருக்கு கல்யாணம் நடக்க முதல்லே அவங்களுக்கு என்று குடிசை போட்டு கொடுத்துடுவோம். இப்படி தான் கால காலமா நாங்க செய்றது. ஆனா இப்ப எங்கட பிள்ள குட்டிகள் கல்யாணம் முடிச்சி தங்க வீடு வாசல் இல்லாம அப்பா அம்மா ஆக்களோட இருக்கிற நிலைமை தான் இருக்குது. அரசாங்கத்தால வீட்டு திட்டம் கொடுக்குற என்று சொல்லி திட்டங்கள் வந்தாலும் வளவு இருந்தா தான் வீட்டு திட்டம் கிடைக்கும். இப்ப கல்யாணம் கட்டி இருக்குற பிள்ளைகளுக்கு வளவு ஒண்டும் இல்ல. அரசாங்கம் எங்கள இங்கால பக்கம் குடியேற்றுன காலத்துல அப்ப இருந்த குடும்ப கணக்குளான் காணி கொடுத்தவங்க. அப்ப அதுக்கு பிறகு வார சந்ததிகள்ட நிலமை கேள்விக்குறியாதான் இருக்குது” என்கிறார் கரையோர வேடுவ தலைவர் வேலாயுதம்.
எங்களிடம் பெற்றுகொண்ட காணிகள் பாதுகாக்கப்படும் பட்சத்தில் அதற்காக ஆதிக்குடிகள் என்ற வகையில் தாங்கள் சந்தோசப்பட தயாராக தான் இருக்கின்றோம் எனவும் ஆனால் வெவ்வேறு இனங்களினால் காடுகள் அழிக்கபட்டு அவர்களுக்கு சொந்தமாகின்றதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார். தாங்கள் கால காலமாக காடுகளில் இருந்த காலங்களில் கூட காட்டு விலங்குகளின் நெருக்கடி தங்களுக்கு இருந்ததில்லை எனவும் ஆனால் தற்போது காட்டு யானைகள் தங்களது குடியிருப்புகளில் ஊடுறுவது அதிகரித்து விட்டது எனவும் வேலாயுதம் தெரிவிக்கின்றார்.
உண்மையில் நாடு முழுவதும் இடம்பெற்று வரும் காடழிப்பு செயற்பாடனது மனித- காட்டு விலங்கு மோதல்களை அதிகரித்துள்ளது என்பது நாம் அறிந்தே உண்மையே.
உலகம் முழுவதும் கால நிலை மாற்றத்தின் விளைவு அனைத்து மக்கள் குழுக்களையும் பாதித்தாலும் பெரும்பாலும் நேரடியான காலநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு உள்ளாவது பழங்குடி மக்களாக தான் இருக்கின்றனர். பழங்குடி மக்களின் வாழ்வாதரங்கள் சூழலுடன் இணைந்தவையாக இருப்பதே இதற்கான காரணங்களாகும். சீரற்ற மழைவீழ்ச்சி, வரட்சி, மாறுபடுகின்ற சூழலியல் காரணிகள் என்பன அவர்களது வாழ்வாதரங்களை பாதிக்கின்றது. அவர்கள் நில முகாமைத்துவம் பல்லுயிர் பாதுகாப்புக்கான பாரம்பரிய பாதுகாப்பு முறைமைகளை கொண்டு இயங்குகின்றனர். காலநிலை மாற்றமானது தீர்மானிக்க முடியாத நிகழ்வுகளை தொடர்ச்சியாக அரங்கேற்றுவதால் இவர்களது பாரம்பரிய முறைகள் கூட தோற்று போகின்றன.
“ மழை பெய்யிற நாட்கள் நெருங்குனா வானத்துல நட்சத்திரங்கள்ட எண்ணிக்கை அதிகமா இருக்கும். அதோட மழை நெருங்குது என்றா எங்கட உடம்புல ஏற்படுற மாற்றங்கள வைச்சும் நாங்க கண்டுபிடிப்பம். இது தான் எங்கட பாரம்பரிய முறையா இருந்தது. அதுக்கு ஏற்ற போல நாங்க சேனை செய்றதுக்காக காடுகள் கழிச்சி சுத்தம் செய்ய தொடங்குவோம்.கணக்கா நாங்க இதெல்லாம் செஞ்சு முடிக்க மழை ஒன்று வரும். மண்ணுக்கும் அந்த இலை , மரத்துட பட்டை சாமான்கள் எல்லாம் பசளையா போகும். இப்படி தான் நாங்க சேனை செய்றது. ஆனா இப்ப பாருங்கோ அடுத்து மழைய வெயிலா என்று கணிக்கவே ஏலாம கிடக்கு” என்கிறார் வேலாயுதம் அவர்கள்.
உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்கு காலநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாப்பு வழங்குவதும் உரிமைகளை உறுதி செய்வதும் தொடர்பான பல்வேறு உடன்படிக்கைகள் நிறைவேறிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற COP 15 மாநாடு அதற்கு சிறந்த இலக்குகளை முன்வைத்ததோடு இலங்கையும் அம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டு பழங்குடி மக்களின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் பிரகடனம் பழங்குடி மக்களின் உரிமைகள் பற்றிய வரையறை கட்டமைப்பு ஒன்றை வழங்கியது. அந்த பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இது பழங்குடி மக்களின் நிலங்கள், பிரதேசங்கள் மற்றும் இயற்கை வளங்களுடனான உறவு அவர்களின் அடையாளம், நல்வாழ்வு மற்றும் கலாச்சாரத்தினை மையமாக கொண்டு அமைந்த ஒரு பிரகடனமாகும்
பழங்குடியின மக்களின் உரிமைகள் பற்றிய பிரகடனத்தின் 26 வது பிரிவு பின்வருமாறு குறிப்பிடுகிறது:
1. பழங்குடி மக்களுக்கு அவர்கள் பாரம்பரியமாக வசித்து வந்த நிலங்கள் மற்றும் பயன்படுத்திய நிலங்கள் அல்லது கையகப்படுத்திய நிலங்கள், பிரதேசங்களை பெற்றுகொள்வதற்கான உரிமை உண்டு.
2. பழங்குடியின மக்களுக்கு பாரம்பரிய உடைமை அல்லது பிற பாரம்பரிய தொழில் மற்றும் அவர்கள் வேறுவிதமாக கையகப்படுத்திய நிலங்கள், பிரதேசங்கள் மற்றும் வளங்களை சொந்தமாக வைத்திருக்கவும், பயன்படுத்தவும், மேம்படுத்தவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உரிமை உண்டு.
3. இந்த நிலங்கள், பிரதேசங்கள் மற்றும் வளங்களுக்கு மாநிலங்கள் சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டும். இத்தகைய அங்கீகாரம் பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் நில உரிமை முறைகள் ஆகியவற்றின் காரணமாக நடத்தப்படும்.
இந்த பிரகடனம் பழங்குடி சமூகங்களைப் பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் ஒரு பரந்த சட்ட கட்டமைப்பை வழங்குகிறது. நாடு பூராகவும் அத்தகைய பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பு தேவைப்படுகிறது. இலங்கையில் இன்னும் அத்தகைய கட்டமைப்பு இல்லை. இதன் விளைவாகவே, வளர்ச்சித் திட்டங்களுக்காக வேடுவர்களின் பூர்வீக நிலத்தை அரசுத் துறைகளும் முகமைகளும் தொடர்ந்து கையகப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
குறிப்பிட்ட கிராமத்தில வாழும் கரையோர வேடுவர்களின் பொருளாதார சிக்கல்கள் பற்றி பிரதேச செயலகத்தில் விசாரித்த போது, அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் உதவிப்பணங்கள் இச்சமூக மக்களுக்கும் வேறுபாடு இன்றி கிடைப்பதாகவும், சமூர்த்தி உதவிப்பணம் , முதியோர் உதவிபணம் என்பனவும் ஒழுங்கான முறையில் வழங்கப்படுவதாகும் குறிப்பிட்டு இருந்தனர்.
நாகேந்திரன் (கால் நடை வளர்ப்பு)
உண்மையில், குஞ்சாங்கல்குளம் கிராமத்தை சேர்ந்த கரையோர வேடுவ மக்களுக்கான பொருளாதார சிக்கலானது நாட்டின் பொருளாதார நெருக்கடியுடன் இணைந்து பாரிய பிரச்சினையாகவே மாறிவிட்டது. அதற்கு அவர்களது புவியியல் மற்றும் அபிவிருத்தியற்ற குடியேற்றங்களும் காரணமாக அமைகின்றன. அவர்களது உற்பத்திகளுக்கான திருப்திகரமான விலை கிடைக்காமல் இருப்பதற்கு, சரியான போக்குவரத்து வசதிகள் இன்மை முதன்மை காரணமாக இருக்கின்றது. அந்த கிராமத்திற்கான பொதுபோக்குவரத்து சேவை மற்றும் பாதை நிர்மாணிப்புகள் மூலம் அவர்களது விலை நிர்ணயங்கள் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
விளையாட்டுத் திடல்
மேலும் அவர்களால் நகர புறங்களுக்கு சென்று தங்களது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான வசதியும் இதன் மூலம் கிடைக்கப்பெறும். அக்கிராமத்து மக்களின் முதல் தேவையாக அவர்கள் முன்வைப்பதும் போக்குவரத்து சேவையை தான் என்பது இங்கு குறிப்பிடக்கூடிய விடயமாகும். மேலும் அவர்களுக்கான காணித்தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களால் சேனை பயிர்செய்கை நடவடிக்கைகளையும் சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியும் என்பது அவர்களது கருத்துகளில் இருந்து புலனாகின்றது. பழங்குடி மக்களின் நில உரிமை சட்டத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டதின் படி அவர்களுக்கான காணிகளை உறுதி செய்வதற்கான பொறுப்பும் அரசாங்கம் கொண்டிருக்கின்றது. மேலும் ஒரு நாட்டின் பழங்குடி மக்களின் நிலைத்திருப்பை பேணுவதில் அந்நாட்டு பிரஜைகளுக்கும் பொறுப்புள்ளது என்பதை நாமும் உணர்வதும் முக்கியாமாகும்.
முன்பள்ளி பாடசாலை
பொருளாதார சிக்கலோடு நில ஆக்கிரமிப்பு, காலநிலை மாற்றம் என பல்வேறு நெருக்கடிகளுடன் அன்றாட வாழ்க்கையை நடாத்தி செல்லும் இம்மக்களின் குரல் எந்த அளவிற்கு ஏனைய சமூகங்கள், அரசாங்கம் என்பற்றுக்கு கேட்கும் என்பதே கேள்விக்குறிதான். கரையோர வேடுவர்கள் மட்டுமல்ல உலகத்தின் எந்த மூலையிலும் வாழும் விளிம்பு நிலை மக்களின் நிலை இதுவாக தான் இருக்கும் என்பது எம்மால் உணரக்கூடியாதான் ஒன்று. இன ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை, நில ஆக்கிரமிப்பு, காலனித்துவம் , காடழிப்பு என அனைத்து வகையாலும் பாதிக்கப்பட்ட இத்தீவின் பழங்குடி மக்கள் இனத்திற்கு பொருளாதார சிக்கலும் தன்னுடைய நெருக்கடியை வழங்குவதும் ஒன்றும் புதிதல்ல. -டினேஸ் பாலசிறி-
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM