விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்று தனது ஆய்வு முயற்சிக்குத் தேவையான பணத்தை பொதுமக்களிடம் இருந்து பெற வித்தியாசமான வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறது. அது, நிலவில் உங்கள் பெயரை எழுதுவதுதான்!

பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனம், இம்மாத இறுதியில் இந்தியா அனுப்பவுள்ள விண்கலத்தில் தாம் உருவாக்கிவரும் ரொபோ ஒன்றை அனுப்பவுள்ளது.

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி - அதாவது, இந்தியாவின் 71வது குடியரசு தினத்தன்று - பிஎஸ்எல்வி ரொக்கெட் மூலம், சந்திரனில் விண்கலம் ஒன்றை அனுப்ப இந்தியா தயாராகிவருகிறது. அதனுடன், மேற்படி நிறுவனம், தான் உருவாக்கிவரும் ரொபோ ஆய்வு இயந்திரம் ஒன்றையும் அனுப்ப எண்ணியுள்ளது.

இதற்குத் தேவையான பணத்தை மக்களிடம் இருந்து பெறுவதற்கு வித்தியாசமான வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி, இலங்கை ரூபா மதிப்பில் சுமார் ஆயிரம் ரூபாவைச் செலுத்தினால், ஒரு சிறு அலுமினியத் துண்டில் உங்கள் பெயரை மிக நுண்ணிய அளவில் செதுக்கி அதை நிலவின் மேற்பரப்பிலேயே விட்டுவருவதாக இந்த நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

‘எதிர்காலத்தில் உங்கள் சந்ததியினர் சந்திரனுக்கு சுற்றுலாச் செல்லும்போது, தங்களது மூதாதையரான உங்களது பெயர் நிலவில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படலாம்’ என்றும் இந்த நிறுவனம் தனது விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.

தற்போது, சுமார் பத்தாயிரம் பேர் தங்களது பெயரை நிலவில் விட்டுவருவதற்காக தம்மைப் பதிவுசெய்திருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.