புதிய வீடு ஒன்றை வாங்கும் உங்கள் கனவு நிறைவா, ஏமாற்றமா ?

Published By: Digital Desk 3

31 May, 2023 | 10:30 AM
image

ஆர். பி. என். 

புதிய வீடு ஒன்றினை   கொள்வனவு செய்ய வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான்  இல்லை. உண்ணாமல் , உறங்காமல்  பணத்தை சேமித்து ஒருவர் வீடு ஒன்றை கொள்வனவு செய்ய படும்பாடு  சொல்லும் தரமன்று. இந்நிலையில் பணத்தை கொடுத்து ஏமாற்றமடைந்தாலோ, அன்றேல் வாங்கிய வீட்டில் எதிர்பார்த்த அளவு எதுவுமே  இல்லை என்றாலோ  அந்த ஏமாற்றங்களைத்   தாங்கிக்கொள்ள முடியாது என்பதே யதார்த்தம். 

மோசடிகள் பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. அந்த வகையில், வீடு கட்டித் தருவதாகவும் அதற்கு கட்டம் கட்டமாக பணம் செலுத்தினால் போதும் எனவும் கூறி கட்டிட ஒப்பந்தக்காரர்கள்  சிலர் வாடிக்கையாளர்களிடம் பெருந்தொகை பணத்தை  அறவிட்டு ஒப்பந்தங்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு வீடமைப்பு நடவடிக்கைகள்  வருடக்கணக்கில் தொடர, வீட்டை வாங்க ஒப்பந்தம் செய்தவர்களும் கேட்கும் தொகையை எப்படியாவது திரட்டி அவ்வப்போது கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்தி வருகின்றனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு சில  கட்டிட ஒப்பந்தக்காரர்கள் பெரும் தொகை பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விடுகின்றனர். இவ்வாறு மோசடிக்குள்ளாகி வருடக்கணக்கில்  பூர்த்தி செய்யப்படாத கட்டிடங்களையும்  கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அதிகமாக காணலாம்.  

கடந்த காலங்களில் கோடிக்கணக்கான பணம்  கட்டிட ஒப்பந்தக்காரர்கள் சிலரால், கனகச்சிதமாக மக்களிடம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. 

அது மாத்திரமின்றி கட்டிக் கொடுக்கப்பட்ட  கட்டிடங்கள் பல,  உரிய அளவு பிரமாணங்கள் இல்லாமலும், தரமற்ற பொருட்களைக்  கொண்டும் காணப்படுவதாக வீடு வாங்கியவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் நீச்சல் தடாகம் அமைப்பதாகக்  கூறி, கட்டப்படும் நீச்சல்  தடாகங்கள்  இறுதியில் முழுக்கட்டிடத்துக்கும் பாதிப்பாகவே அமைந்து விடுகிறது. அதேபோன்றே தொடர்மாடிமனைகள் சிலவற்றில் அமைந்துள்ள மின்தூக்கிகளும், தரமற்றவையாகவும், அடிக்கடி பழுதடையும் ஒன்றாகவும் காணப்படுவதாக பலரும் முறையிடுகின்றனர்.  

தொடர் மாடிக் கட்டிடங்கள் பலவற்றில் நீர் கசிவு காரணமாக குடியிருப்பாளர்கள் பலர்,  பாரிய  துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். நீர் கசிவு  இல்லாத கட்டிடம் ஒன்றை  காண்பது  என்பது மிகவும் அரிது என்று கூறுமளவிலேயே இன்று தொடர் மாடி மனைகள்  காணப்படுகின்றன. இது தொடர்பில்  கட்டிட ஒப்பந்தக்காரர்களிடம் கேட்டால் , கட்டிடத்தை விற்பனை செய்த கையோடு  தமது கடமை முடிந்து விட்டதாக கூறி  கைகழுவி விடுகின்றனர். 

கோடிக்கணக்கான  பணத்தை கொட்டிக் கொடுத்து  தொடர்மாடிகளில்  வீடுகளை கொள்வனவு செய்த பலரும் ஏதோ ஒரு காரணத்தினால்  ஏமாற்றப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். 

மூலதன மோசடி 

கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வாயிலாகவும், கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் கட்டம் கட்டமாக பணம் செலுத்தினால் போதும் எனவும் வங்கி வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் கூறி முதலில் கட்டிட ஒப்பந்தக்காரர்களால் உறுதி மொழிகள் வழங்கப்படுகின்றன. இந்த வார்த்தைகளினால் கவரப்படும் பலரும் தமது கனவு நிறைவேறப் போவதாக எண்ணி, கையில் இருக்கும் பணத்தை முதலில் கொடுத்து தமக்கான குடியிருப்பு அமையும் பகுதியை வரையறுக்கின்றனர். 

அதனைத்  தொடர்ந்து கட்டிடம் நிறைவேறும் வரை பகுதி, பகுதியாக  பணம் பெறப்படுகின்றது. ஆரம்பத்திலேயே அதாவது "பூமி பூஜை"  போடப்படும் போதே  பணத்தை  கட்டினால்  குறைந்த கட்டணத்தில் வீட்டைப்பெறலாம். கட்டிடம்  முடிந்ததும் வீட்டின் பெறுமதி இரண்டு மடங்காகும்  என ஆசை வார்த்தை கூறப்படுவதால், அநேகமானோர் நம்பிக்கை ஒன்றின் அடிப்படையில் முதல் கட்டணத்தை செலுத்துகின்றனர்.  தொடர்ந்து கட்டிடம் பூர்த்தியாகும் வரை  சுமார் 2 தொடக்கம் 3 வருடங்கள் வரை பணத்தை கொடுத்தவர்  காத்திருக்க வேண்டும். 

இதேவேளை, வெளிநாடுகளில் வாழும் புலம்பெர்ந்தோர் பலர்,  இலங்கையில்  ஓர்  தொடர்மாடி மனையை கொள்வனவு செய்யும் நோக்குடனும் மறுபுறம் ஓர் முதலீடாகவும் கருதி வீடுகளை வாங்க பதிவு செய்கின்றனர். பலர்  தமது மனைகளை  நேரில் வந்து பார்த்ததுமில்லை. இவை அனைத்தும் ஒரு சில கட்டிடஒப்பந்தக்காரர்களுக்கு  பெரும் பலமாக அமைந்து விடுகின்றது  என்பதே உண்மை.

ஒரு சில கட்டிட ஒப்பந்தக்காரர்கள்  கூறியவாறு கட்டிடத்தை கட்டி முடித்து  கையளிப்பார்கள். மேலும் சில ஒப்பந்தக்காரர்களோ, பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறையாகி விடுகின்றனர். இந்த பாரிய நம்பிக்கை மோசடிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் பயனளிக்காத நிலைமைகளே காணப்படுகின்றன. கடந்த காலங்களில் இவ்வாறு வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடிசெய்து   தலைமறைவானர்கள் பலர் தொடர்பில்  ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள அதேவேளை, அவர்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குக்குகளும் நிலுவையிலுள்ளன.  

வீட்டுக்கான  உறுதி பத்திரம்

வீட்டுக்கான  உறுதி பத்திரம் பெறுவது சுலபமானதொன்றல்ல. தொடர்மாடி மனைகளை பொறுத்தமட்டில்  கட்டிடம் நிறைவடைந்தவுடன், வீட்டு  உறுதிப்பத்திரம் வழங்கப்படும் என்ற உறுதி மொழிகளையும் கட்டிடங்களை  நிர்மாணிப்பவர்கள்  வழங்குகின்றனர். எனினும் ஒரு சில கட்டிடங்கள் கட்டி   20 வருடங்களுக்கு மேலாகியும்  உறுதி பத்திரம் (Deed) இன்றி  காணப்படுகின்றன. அத்துடன்  அவற்றை பெறமுடியாத நிலைமைகளுமே தொடர்கின்றன.

அதற்கான பிரதான காரணங்களில் முக்கியமானது, குறித்த கட்டிடம்  அரசாங்கத்தின் சட்ட திட்டங்களை  அனுசரித்து கட்டப்படாமல் தன்னிச்சையாக கட்டப்பட்டிருக்கலாம். அல்லது  சில கட்டிடங்களின் காணி  உறுதிப்பத்திரத்தை  கட்டிட ஒப்பந்தக்காரர்  வங்கிகளில் வைத்து வீட்டை கட்டுவதற்கு கோடிக்கணக்கில் கடனாக பணம் பெற்றிருக்கலாம். இவ்வாறான நிலைமைகள்  காரணமாக வீட்டுக்கான  உறுதி பத்திரத்தை, அவர் மீள வங்கிக்கு பணம்  செலுத்தாத வரை பெறமுடியாது.

அதேவேளை, இவற்றை மறைத்து கட்டிட  ஒப்பந்தக்காரர் அல்லது நிர்மாணிப்பாளர்கள் குறித்த கட்டிடத்தை குடியிருப்பாளர்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனர். இவ்வாறான  நிலையில் வீட்டை  வாங்கியவர் தேவைப்படும்போது அதனை  விற்க முடியாதுதடுமாறும் நிலைமைகளே  தொடர்கின்றன. அப்போது தான், தான் மோசடிக்கு ஆளானது அவருக்கே  தெரியவருகிறது. அதுமாத்திரமன்றி குறித்த கட்டிடத்துக்கான காணியை வங்கியில் வைத்து பணம் பெற்றவர் மீள செலுத்தாது போனால் அதன் பொறுப்பையும் வீட்டின் தற்போதைய உரிமையாளர்களே  ஏற்க நேரும். மேலும் இவ்வாறு மோசடியில் சிக்கிய  வீட்டு உரிமையாளர்கள்  சிலர் அவற்றை மீள விற்பனை செய்ய முடியாமலும் உரிமை பாராட்ட முடியாமலும் ஏமாற்றப்பட்ட நிலையில்  உள்ளனர்.  

பதிவு செய்தல், விற்பனை செய்தல்

கட்டிடம் ஒன்றினை முறையாக பதிவு செய்ய வேண்டுமானால் Title Deed of the Apartment, Condominium Declaration, Building Plan, Certificate of Conformity (COC) Approved Plan of the Land, Certificate of Ownership, Non-Vesting Certificate, Street Line Certificate, போன்ற  ஆவணங்கள் அவசியமாகும் . அதேபோன்று கட்டிடத்தை மீள விற்பனை செய்யும் போதிலும் இவை அவசியம். 

தொடர் மாடியிலோ அல்லது காணி ஒன்றிலோ அமைந்துள்ள  வீடு ஒன்றினை வாங்குவது என்பது ஒருவர் தனது  வாழ்நாளில் எடுக்கக்கூடிய மிக முக்கியமான  தீர்மானங்களில் ஒன்றாகும். முதலில், ஒரு வீட்டை வாங்குவதற்கு முன், சிறந்த வீட்டை  எங்கு வாங்குவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பியபடி ஒரு வீட்டைக் கண்டறிந்ததும், வீட்டைப் பற்றிய கூடுதல் தகவலைக் கண்டறிய, சொத்து உரிமையாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சொத்து முகவரைத் தொடர்பு கொள்ளலாம்.

ஒரு முகவர் தொடர்மாடி ஒன்றினை  விற்பனை செய்கிறார்  என்றால், நிறுவனத்தின் நற்பெயரைப் பற்றி ஆராய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

காரணம், புகழ்பெற்ற நிறுவனங்கள் சொத்து பற்றிய துல்லியமான தகவலை வழங்குவதோடு மிகவும் தொழில்முறையாகவும் இருக்கும்.

நீங்கள் விரும்பியவாறு  ஒரு வீட்டைக் கண்டறிந்ததும், வீட்டைப் பற்றிய கூடுதல் தகவலைக் கண்டறிய, சொத்து உரிமையாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சொத்து முகவரைத் தொடர்பு கொள்ளலாம்.

அடுத்து நீங்கள் விரும்பிய உங்களுக்கான வீட்டைப் பார்க்க ஒரு ஆய்வில் ஈடுபடுவது அவசியம். அதாவது சாத்தியமான அளவு  நேரத்தை ஒதுக்கி வீட்டின் குறை நிறைகளை பட்டியலிடுவது அவசியம். வீடு பிடித்து விட்டால்  அதன் அயல் குறித்தும் அது உங்களுக்கு ஏற்றதா? என்பது குறித்தும் ஆராய வேண்டும்.

வீடு அழகானதாக தோன்றுவதால், நீங்கள் வீட்டை உடனடியாக வாங்க வேண்டும் என்று அர்த்தமல்ல. தண்ணீர், மின்சாரம் மற்றும் அருகிலுள்ள நகரத்திற்கு இலகுவாக சென்று வர அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும் அதேவேளை அயல் வீட்டாரின்  நற்பெயரைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

 வழக்கறிஞர்  ஒருவருடன் தொடர்பு கொள்ளுங்கள்

நீங்கள் வீட்டை வாங்க முடிவு செய்திருந்தால், அடுத்த சில படிகளுக்கு நீங்கள் தயாராக இருக்க உதவும் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஒருவரின்  தொழில்முறை சட்ட உதவியை நீங்கள் பெற வேண்டும். அடுத்த முக்கியமான படி, சொத்தின் உரிமை எந்த முறைகேடும் இல்லாமல் தெளிவாக உள்ளதா என்பதைக் கண்டறிவதாகும்.

அதனை தொடர்ந்து வீட்டின் விலையை விற்பனையாளருடன் சிறந்த விலைக்கு பேரம்  பேசி தீர்மானிக்கலாம். சொத்தின் மதிப்பு வீட்டின் அளவு, இருப்பிடம் மற்றும் வழங்கப்படும் வசதிகளின் அளவைப் பொறுத்து அது அமையும். மேலும் பலசந்தர்ப்பங்களில் சொத்தின் விலையைத் தவிர, நீங்கள் கூடுதல் செலவுகளையும் எதிர்நோக்க  வேண்டிநேரும். வரிகள் மற்றும் முத்திரைக் கட்டணம், சட்டத்தரணிக்கான  கட்டணம் என்பவற்றை  நீங்கள் செலுத்த வேண்டி ஏற்படும்.

வீட்டுக் கடன் கோரல் 

பெரும்பாலும் அனைத்து  வங்கிகளும்  வீடு வாங்குபவர்களுக்கு கடன் வழங்க  தயாராக உள்ளன. நீங்கள் பெறக்கூடிய தொகை உங்கள் வருமானம் போன்ற காரணிகளைப் பொறுத்தது. எனவே உங்களுக்கு பொருத்தமான வங்கியை தெரிவு செய்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம்   பெறலாம்.

வங்கி  அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதன் மூலம் , கடன் பெரும் நடவடிக்கைகளை இலகுவாக்க முடியும்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல்

வீடு வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது அனைத்து தரப்பினரும் இருப்பது அவசியம் . இது சொத்தின் உரிமையாளர் (உரிமையாளர்கள்), வாங்குபவர் மற்றும் இரு தரப்பினரின் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்த கட்டத்தில் வாங்குபவர் முழு கட்டணத்தையும் செலுத்தகோரலாம். 

புதிய உரிமையை பதிவு செய்தல்

வீடு கொள்வனவு செய்யப்பட்டதை அடுத்து  உங்கள் தரப்பு வழக்கறிஞர் , சட்டபூர்வமான அனைவரதும் கையெழுத்தையும் பெறுவதுடன் அடுத்தகட்டத்தை  நோக்கி  தமது பணியை முன்னெடுப்பார். புதிய பத்திரம் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சொத்து பரிமாற்றம் முழுமையடையும். அத்துடன் மோசடிகளை தடுக்கும் வகையில் அரசாங்கம் புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22