நடப்பு சம்பியன் குஜராத்தை வீழ்த்தி 5ஆவது தடவையாக சம்பியனானது சென்னை

30 May, 2023 | 11:04 AM
image

(நெவில் அன்தனி)

இண்டியன் பிறீமியர் லீக் 16ஆவது அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் கடைசிப் பந்தில் 5 விக்கெட்களால்  வெற்றி ஈட்டிய சென்னை சுப்பர் கிங்ஸ் 5ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இதன் மூலம் மும்பை இண்டியன்ஸின் 5 சம்பியன் பட்டங்களை சென்னை சுப்பர் கிங்ஸ் சமப்படுத்தியது. மேலும் தோனியின் தலைமையில் சென்னை ஈட்டிய 5ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். அத்துடன் தோனி விளையாடிய 250ஆவது ஐபிஎல் போட்டி இதுவாகும்.

இம்முறை 10ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடிய சென்னை இதற்கு முன்னர் 2010, 2011, 2018, 2021 ஆகிய வருடங்களில் சம்பியனாகியிருந்தது.

அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் சென்னை ஈட்டிய இந்த வெற்றியை ஆயிரக்கணக்கான சென்னை இரசிகர்கள் நேரடியாக கண்டுகளித்து  கொண்டாடி மகிழ்ந்ததுடன் கோடிக்கணக்கான இரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாக கண்டுகளித்தனர்.

சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் வெற்றிக் கிண்ணத்துடன் இந்திய நாணயப்படி சுமார் 20 கோடி ரூபாவும் 2ஆம் இடத்தைப் பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இந்திய நாணயப்படி 12.5 கோடி ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டது,

திங்கட்கிழமை (29) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகி செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை 1.35 மணி அளவில் 16ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டி நிறைவுக்கு வந்தது.

15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 15  ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெறவேண்டிய இந்த இறுதிப் போட்டி அன்றைய தினம் பெய்த கடும் மழை காரணமாக ஒதுக்கப்பட்ட மறுநாளான திங்கட்கிழமை நடைபெற்றது.

கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மோஹித் ஷர்மா முதல் 4 பந்துகளில் 3 ஓட்டங்களை மாத்திரமே கொடுக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், அனுபவம் வாய்ந்த ரவிந்த்ர ஜடேஜா அடுத்த 2 பந்துகளில் சிக்ஸையும் பவுண்டறியையும் விளாசி சென்னை சுப்பர் கிங்ஸ் சம்பியனாவதை உறுதிசெய்தார்.          

215 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் முதலாவது ஒவரில் 3 பந்துகளில் 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் இரவு 9.50 மணியளவில் ஆட்டம் தடைப்பட்டது.

மழை ஓய்ந்த பின்னர் மைதானத்தின் பல பகுதிகளில் நீர் இருந்ததால் இயந்திரம் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு மைதானம் உலரவைக்கப்பட்டது. மைதானத்தை உலரவைக்க சுமார் 2 மணிநேரம் செலவிடப்பட்டது.

இப் போட்டி நள்ளிரவுக்குப் பின்னர் 12.10 மணியளவில் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அணிக்கு 15 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு திருத்தப்பட்ட வெற்றி இலக்கு 171 ஓட்டங்களாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது டெவன் கொன்வேயும் ருத்துராஜ் கய்க்வாடும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தவண்ணம் இருந்தனர்.

அவர்கள் இருவரும் 37 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ருத்துராஜ் கய்க்வாட் 26 ஓட்டங்களைப் பெற்று ஆப்கானிஸ்தான் ஜோடியினரான நூர் அஹ்மத் பந்துவீச்சில் ராஷித் கானிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 4 ஓட்டங்கள் சேர்ந்தபோது அதே ஓவரில் நூர் அஹ்மதின் பந்துவீச்சில் மோஹித் ஷர்மாவிடம் பிடிகொடுத்து டெவன் கொன்வே 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அஜின்கியா ரஹானேயும் ஷிவம் டுபேயும் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து ஓட்ட வேகத்தை அதிகரித்த வண்ணம் இருந்தனர். ஆனால், மோஹித் ஷர்மாவின் மந்தகதியிலான பந்தை ரஹானே அரை குறை மனதுடன் உயர்த்தி அடிக்க விஜய் ஷன்கர் நிதானமாக பிடியை எடுத்தார். (117 - 3 விக்.) ரஹானே 13 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 149 ஓட்டங்களாக இருந்தபோது ஷர்மாவின் பந்து வீச்சில் அவரிடமே இலகுவான பிடியைக் கொடுத்த அம்பாட்டி ராயுடு 19 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

அடுத்த பந்தில் தோனி வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார். மோஹித் ஷர்மாவின் பந்தை தோனி வீசுக்கி அடிக்க, பந்து நேராக டேவிட் மில்லரின் கைகளில் தஞ்சம் புகுந்தது.

எனினும் ஷிவம் டுபேயும் ரவிந்த்ர ஜடேஜாவும் கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவைப்பட்ட 13 ஓட்டங்களை பரபரப்புக்கு மத்தியில் பெற்றுக்கொடுத்து குஜராத்தை வெற்றிகொள்ள சென்னைக்கு உதவினர்.

ஷிவம் டுபே 32 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

குஜராத் பந்துவீச்சில் மொஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நூர் அஹ்மத் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

இறுதிப் போட்டியில் மொஹமத் ஷமி விக்கெட் எதனையும் வீழ்த்தாத போதிலும் 28 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றி 2023 ஐபிஎல் சுற்றுப் போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்தியதற்கான ஊதா நிறத் தொப்பியை தனதாக்கிக்கொண்டார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது.

ஐபிஎல் வரலாற்றில் இறுதிப் போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

போட்டியின் 2ஆவது ஓவரில் துஷார் தேஷ்பாண்டேயின் பந்துவீச்சில் ஷுப்மான் கில் கொடுத்த சற்று இலகுவான பிடியை தவறவிட்ட தீப்பக் சஹார் 5ஆவது ஓவரில் ரிதிமான் சஹா கொடுத்த கடினமான பிடியை தனது சொந்த பந்து வீச்சில் தவறவிட்டார்.

ரிதிமான் சஹா, ஷுப்மான் கில் ஆகிய இருவரும் 7 ஓவர்களில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

குஜராத் டைட்டன்ஸின் அதிரடி நாயகன் ஷுப்மான் கில் 39 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ரவீந்த்ர ஜடேஜாவின் பந்துவீச்சில் தோனியினால் மின்னல் வேகத்தில் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் விக்கெட் காப்பாளராக 300ஆவது ஆட்டமிழப்பில் தோனி பங்களிப்பு செய்திருந்தார்.

இந்த வருடம் 17 போட்டிகளில் விளையாடிய ஷுப்மான் கில் 3 சதங்கள், 4 அரைச் சதங்களுடன் மொத்தமாக 890 ஓட்டங்களைப் பெற்று செம்மஞ்சள் (ஒரேஞ்) தொப்பியை தனதாக்கிக்கொண்டார்.  

தொடர்ந்து ரிதிமான் சஹாவுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் 42 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தார். சஹா 39 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்று சஹாரின் பந்துவீச்சில் தோனியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அதன் பின்னர் சாய் சுதர்ஷுனும் அணித் தலைவர் ஹார்திக் பாண்டியாவும் 3ஆவது விக்கெட்டில் 33 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 96 ஓட்டங்களைப் பெற்றார். அவர் கடைசி ஓவரில் மதீஷ பத்தரணவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் களம் விட்டகன்றார்.

அதே ஓவரின் கடைசிப் பந்தில் ராஷித் கான் சிக்ஸ் அடிக்க முயற்சித்து கய்க்வாடிடம் பிடிகொடுத்து ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

ஹார்திக் பாண்டியா 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பந்துவீச்சில் மதீஷ பத்திரண 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்பக் சஹார், ரவீந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் தலா 38 ஓட்டங்களுக்கு தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இலங்கை வீரர் மதீஷ பத்திரண 12 போட்டிகளில் மொத்தமாக 19 விக்கெட்களை வீழ்த்தி சென்னை இரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றார்.

IPL winners list with captains' names

2008 - Rajasthan Royals (Skipper Shane Warne)

2009 - Deccan Chargers (now defunct - skipper Adam Gilchrist)

2010 - Chennai Super Kings (Skipper M.S. Dhoni)

2011 - Chennai Super Kings (Skipper M.S. Dhoni)

2012 - Kolkata Knight Riders (Skipper Gautam Gambhir)

2013 - Mumbai Indians (Skipper Rohit Sharma)

2014 - Kolkata Knight Riders (Skipper Gautam Gambhir)

2015 - Mumbai Indians (Skipper Rohit Sharma)

2016 - Sunrisers Hyderabad (Skipper David Warner)

2017 - Mumbai Indians (Skipper Rohit Sharma)

2018 - Chennai Super Kings (Skipper M.S. Dhoni)

2019 - Mumbai Indians (Skipper Rohit Sharma)

2020 - Mumbai Indians (Skipper Rohit Sharma)

2021 - Chennai Super Kings (Skipper M.S. Dhoni)

2022 - Gujarat Titans (Skipper Hardik Pandya)

2023 - Chennai Super Kings (Skipper M.S. Dhoni)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59
news-image

ஆசிய விளையாட்டு விழாவை சீன ஜனாதிபதி...

2023-09-24 06:49:46
news-image

ஷமி 5 விக்கெட் குவியல், நால்வர்...

2023-09-23 10:53:17
news-image

19ஆவது ஆசிய விளையாட்டு விழா சினாவின்...

2023-09-23 10:25:11
news-image

அருணாச்சலப் பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா விசா...

2023-09-23 09:42:09
news-image

ஐ.சி.சி. உலகக் கிண்ண சம்பியனுக்கு பணப்பரிசு...

2023-09-23 09:41:43