இந்தோனேசியாவின் மிருகக் காட்சி சாலை ஒன்றில், கரடிகள் கூட்டம் ஒன்று போதிய ஆகாரமின்றி மெலிந்த உடலுடன் உணவுக்காகக் கையேந்தும் காட்சிகள் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் பாந்துங் மிருகக் காட்சி சாலையிலேயே இந்த அவல நிலை ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழுகொழுவென்று இருக்கும் கரடிகளையே பார்த்துப் பழகிப்போனவர்களுக்கு, இந்தக் காட்சியில் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் விலங்குகள் உண்மையில் கரடிகள்தானா என்ற கேள்வி எழுகிறது. 

உணவுக்காகப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மட்டுமன்றி, போதிய வசதியில்லாத அந்த மிருகக் காட்சி சாலை அமைந்துள்ள அந்தப் பகுதியில் அடிக்கடி பெய்துவரும் மழையால்  மிருகங்களின் வாழ்விடங்கள் அடிக்கடி வெள்ளக்காடாகியும் வருவதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், கொங்கிரீற்றால் அமைக்கப்பட்டுள்ள தரைத்தளத்தால் கரடிகளின் பாதங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

விலங்குகளைப் பராமரிக்க முடியாத நிலையில் உள்ளதால் மிருகக் காட்சி சாலையை மூடிவிடும்படி விலங்கு நல ஆர்வலர்கள் பலரும் அழுத்தம் கொடுத்தும் நிர்வாகம் அதை அலட்சியம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.