நமது கலைஞர்களையும் மதியுங்கள்! - பரதநாட்டிய கலைஞர் பவஜன் குமார்

Published By: Nanthini

29 May, 2023 | 11:01 AM
image

(மா. உஷாநந்தினி)

"பரதம், இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமான கலையல்ல. இந்த மண்ணுக்கும் (இலங்கைக்கும்) சொந்தமான கலையே. நானும் ஓர் இலங்கைத் தமிழர் என்ற  வகையில், பரதத்தை நாம் மிக ஆழமாக புரிந்து பயில வேண்டும் என்றே விரும்புகிறேன். அது மட்டுமன்றி, நமது மக்கள், இந்திய பரத கலைஞர்களுக்கு அளிக்கும் மதிப்பு, மரியாதையை இலங்கையில் உள்ள நமது பரதநாட்டிய கலைஞர்களுக்கும் அளிக்க வேண்டும். இங்குள்ள கலைஞர்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும்" என இளம் பரதநாட்டிய கலைஞர் பவஜன் குமார் தெரிவித்தார்.

அண்மையில் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் நாட்டியப் பயிற்சிப்பட்டறைக்கான அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருந்த அவர் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறினார்.

பவஜன் பிறந்தது கனடாவில் என்றாலும், பூர்விகம் யாழ்ப்பாணம், கோண்டாவில். தனக்கென ஒரு நடனப் பரம்பரை இல்லாதபோதிலும், குருகுல முறையில் பல முன்னணி நடனக் கலைஞர்களிடம் சாஸ்திரிய நடனம் பயின்று, பத்மா சுப்ரமணியம், சித்ரா விஸ்வேஸ்வரன், லக்ஷ்மன் போன்ற நாட்டிய மேதைகளின் ஆசிகளை பெற்று, இன்று நாட்டியப் பாரம்பரியத்தை கட்டிக்காக்கின்ற இளம் பரதநாட்டியக் கலைஞரான பவஜன் மேலும் பகிர்ந்துகொண்டதாவது:

இலக்குவனன் கண்வழியே சொல்லப்பட்ட கதை - உங்களது இந்த புதிய நடன மார்க்கத்தை பற்றி கூறுங்களேன்...

தற்போது இராமாயண கதாபாத்திரமான இலக்குவனன் பற்றிய ஒரு நடன மார்க்கத்துக்கான புதிய முயற்சியை கையிலெடுத்திருக்கிறேன். இன்னும் இது முற்றுப்பெறவில்லை.

இலக்குவனன், நியாயங்கள் நிறைந்த கோபக்காரர். தனக்காக இன்றி, அண்ணன் இராமரை முன்னிறுத்தி அவருக்காகவே எப்போதும் சிந்திப்பவர். ஆனால், இன்றைய சமூகத்தில் பிறரை முன்னிறுத்தி சிந்திக்கும் மனப்பான்மை, பிறர் நலனை மட்டுமே கருதும் குணம் யாருக்கும் இல்லை. அதனால், அதற்கு எதிர்மாறான இலக்குவனனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இலக்குவனனின் மனைவி ஊர்மிளா கணவனிடம், "நீங்கள் வனவாசத்தின்போது காட்டில் 14 ஆண்டுகள் தூங்காமல் இருப்பதற்காக, உங்களுக்கும் சேர்த்து நான் 14 ஆண்டுகள் முழுவதும் தூங்குகிறேன்" என்று சொன்னதாக ஒரு தெலுங்கு மொழிக் குறிப்பை நான் வாசித்திருக்கிறேன்.

அதன்படி, ஊர்மிளா, இலக்குவனன் இருவரதும் தியாகத்தை எனது நடன மார்க்கத்துக்கு கருப்பொருளாக்கியிருக்கிறேன்.

வனவாசம் முடிந்து திரும்பி வரும் இலக்குவனன், 14 ஆண்டுகள் கழித்து தூக்கத்திலிருந்து கண் விழிக்கும் ஊர்மிளா இருவரும் நீண்டகால இடைவேளைக்குப் பின்னர் பேசிக்கொள்கின்றனர். அப்போது இலக்குவனன் தனது கண்வழியாக ஊர்மிளாவுக்கு வனவாசத்தை விவரிக்கிறார்.

இந்த கதையை தெலுங்கு நாட்டுப் பாடல் வடிவில், கர்நாடக சாகித்தியத்தை புகுத்தி நடன மார்க்கமாக அமைத்துள்ளோம்.

உங்கள் பார்வையில் பரதநாட்டியம் என்பது...?

தத்துவங்கள் நிறைந்த கலை. தெய்வாம்சம் பொருந்திய ஒரு சக்தியோடு பேசும் கலை. அந்த சக்திக்கு பெயர் இல்லை, உருவம் இல்லை, மதம் இல்லை. அந்த சக்தியின் நிலையை அடைவது அல்லது இணைவதே ஒரு பரதநாட்டிய கலைஞனின் இலக்கு என நினைக்கிறேன்.

நான் ஆடும்போது நீங்கள் என் உடல் அசைவதை மட்டுமே காண்கிறீர்கள். ஆனால், அந்த உடலசைவை கடந்த ஓர் உணர்வு ஆடுகிறபோது எனக்குள் ஏற்படுகிறது. அந்த உணர்வையும் சேர்த்தே ரசிகர்களுக்கு காண்பிப்பதுதான் எனது பரத தத்துவம்.

மனதில் உள்ள ஈகோ குணங்களையும் மறந்து, ஒருவர் நடனத்தை ரசிக்கிறார் எனில், அது பரதத்தின் ஈர்ப்பினால்தான்.  

என்னால் முருகனாக, துரியோதனனாக... இன்னும் பல்வேறுபட்ட கதாபாத்திரங்களை நடனத்தினூடாக காண்பிக்கவோ, நல்லது - தீயது என குணங்களை மாறி மாறி வெளிப்படுத்தவோ முடியும். ஒரே உடம்புக்குள் எத்தனை விதமான கதாபாத்திரங்களையும் கொண்டுவர முடியும். நிமிடத்துக்கு நிமிடம் தோற்றத்தை மாற்ற முடியும். அத்தருணம் ஆடுபவர் மறைந்து ஆடப்படும் கதாபாத்திரம் மட்டுமே கண்ணெதிரில் நிற்கும். அதுதான் பரதம்!

பவஜனுக்குள் கலையார்வம் துளிர்விட யார் காரணம்? எத்தனை வயதில் நடனம் கற்க ஆரம்பித்தீர்கள்?

ஒரு நடனப் பரம்பரையில் பிறந்ததால்தான் எனக்கு பரதக்கலை மீது இத்தனை ஆர்வம் வந்தது என்று சொல்வதற்கு இடமேயில்லை. ஏனென்றால், குடும்பத்தில் பரதத்தை நோக்கி பயணித்த முதல் நபர் நானே.

எல்லா சிறுவர்களையும் போல சிறு வயதில் பாடல்களை கேட்டு ஆடும் இயல்பு எனக்குள்ளும் இருந்தது. என்னை ஒரு நடனக்கலைஞனாக முதன் முதலில் இனங்கண்டவர் என் அப்பம்மாதான் (பாட்டி).

நான் மிக நளினமாக ஆடுவதாக என் பெற்றோரிடம் வாதாடி, அந்த ஆறேழு வயதிலேயே நான் நடனம் கற்க காரணமானவர் அவரே.  

உங்கள் அரங்கேற்றம்?

12 வயதில் எனது அரங்கேற்றம் கனடாவில்  நடந்தது. அங்கே வாசு மாஸ்டரிடம் நடனம் கற்றுக்கொண்டேன்.

பொதுவாக, அரங்கேற்றத்தை நிகழ்த்தியதோடு, நாட்டியம் முற்றுப்பெற்றுவிட்டதாக கருதி 'போதும்' என்று பலர் ஆடுவதையே நிறுத்திவிடுவார்கள். ஆனால், நானோ நடனத்தில் புது வடிவங்களையும் அதன் விசாலத்தையும் தேடிப் பயில தொடங்கினேன். தற்போதும் நான் பரதக்கலை பயிலும் மாணவனாகவே இருக்கிறேன்.

அனேகமாக, நடனத்துறையில் ஆண்களுக்கு முதல் அனுபவத்தை தருவது பெண் வேடங்களாகத்தான் இருக்கும்... நீங்கள் பெண் வேடமிட்டு ஆடியிருக்கிறீர்களா? 

நான் இதுவரை பெண் வேடம் போட்டுக்கொண்டதில்லை. அதேவேளை ஆண்கள் பெண் வேடத்தில் ஆடுவது குற்றமும் இல்லை.

நான் கல்வி, கலை இரண்டின் பெரும்பகுதியையும் இந்தியாவிலேயே அமைத்துக்கொண்டேன். 2010இலிருந்து தற்போது வரை இந்திய கலைகள், பாரம்பரியத்துடனேயே ஒன்றிப்போய்விட்ட எனது மிகக் குறுகியகால அனுபவத்தைக் கொண்டு சொல்வதானால், ஆண்கள் பெண் வேடமிட்டு நடனமாடும் வழக்கம் தற்போதும் உண்டு.

தமிழ்நாட்டின் மேளத்தூர் பகுதியில் நிகழும் பாகவத மேளாவில், பெண்கள் மேடையேற அனுமதிக்கப்படாத பழங்கால மரபு இன்றைக்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அங்கே மேடைகளில் நிகழ்த்தப்படும் 'பாஞ்சாலி சபதம்', 'பிரகலாதன் சரித்திரம்' போன்ற புராண நாட்டிய நாடகங்களில் வரும் பெண் கதாபாத்திரங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு ஆடுகிறார்கள். அதுவும், அவர்கள் பிராமண குலத்து ஆண்களாகத்தான் இருப்பார்கள். அவர்களை தவிர வேறு எவரும் பெண் வேடம் தரிப்பதில்லை.

நீங்கள் கற்பிக்கக்கூடிய நடனப்பயிற்சியில் உள்ள பிரதான விடயம்...?

அடவு... அடவு என்பது உண்மையில் மனதிலிருந்து வருவது.

எல்லோருக்கும் முத்திரைகள், அடவுகள் தெரியும். இதன்போது கால்களை நீட்டுவது, கைகள், விரல்களை அசைப்பதை பற்றியும் தெரியும். ஆனால், அந்த அசைவுகளுக்குள் இருக்கும் சக்தியை நாம் எப்படி புரிந்துகொள்வது?

5 வயது குழந்தை ஆடுவதற்கும், 50 வயதில் வாழ்க்கையே நடனமாய்க் கொண்ட ஒருவர் தனக்குள் இருக்கும் சக்தியை, வலிமையை ஒன்றுதிரட்டி ஆடுவதற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆகவே, ஒரு பரதநாட்டியக் கலைஞர் தனக்குள்ளிருக்கும் சக்தியின் தன்மையை தானே உணரச்செய்யும் பயிற்சி இது.

கலை கலைக்காக - கலை மக்களுக்காக.... இதில் உங்கள் தெரிவு?

கலை கலைக்காகவா, மக்களுக்காகவா என்பது கலைஞர்களிடையே ஆளுக்காள் மாறுபடும் விடயமாகிறது.

பரதம் மக்களை சென்றடையும் கலையாக இருக்க வேண்டும். அதன் உள்ளடக்கத்தில் சில பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கலாம். எனினும், இது பொழுதுபோக்குக்கான, பொழுதுபோக்குக்கு மட்டுமேயான கலையல்ல.

தாயகத்து சக நடனக்கலைஞர்களை சந்தித்த வேளைகளில் உங்களது மன உணர்வு எப்படியிருந்தது?

கலையோடு ஒன்றித்துப்போகும் தன்மை இலங்கை நடனக் கலைஞர்களுக்குண்டு.

ஒருசில நாடுகளுக்கு நாட்டிய நிகழ்ச்சிகளுக்காக சென்றபோதெல்லாம் நமது கலைஞர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் எங்களது வெவ்வேறு கலைத்திறமைகளும் கலையம்சங்களும் ஒன்றாக சங்கமமாகும். கலைகள் சார்ந்த பல விடயங்களை  பரிமாறியிருக்கிறோம். அது மட்டுமல்ல, கலைக்கு தேவையான நிறைய நுட்பங்களை மேலதிகமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலை­யக பகு­தி­களில் நடத்­தப்­பட்ட நாட­கங்களில் இஸ்­லா­மி­யர்­க­ளது...

2023-09-18 17:26:42
news-image

இன்று விநாயகர் சதுர்த்தி

2023-09-18 10:28:22
news-image

தம்பாட்டி பிரதேசத்தின் அடையாளமான பண்டாரவன்னியன் நாடகக்கூத்து

2023-09-17 20:44:06
news-image

திறக்கிறது இன்னுமொரு அறிவுத் திருக்கதவு

2023-08-26 13:44:38
news-image

கொழும்பு அழகியற் பல்கலைக்கழக மண்டபத்தில் கர்நாடக...

2023-08-24 17:28:58
news-image

பக்தர்களின் நலம் காக்கும் நாச்சியாபுரம் ஸ்ரீ...

2023-08-17 14:31:20
news-image

இறை வழிபாட்டின் முக்கியத்துவம்

2023-08-15 13:01:05
news-image

ஆடி அமாவாசை விரதம் யார் இருக்க...

2023-08-14 18:18:54
news-image

தர்ப்பண பூஜை

2023-08-14 18:20:29
news-image

ஆடி அமாவாசை

2023-08-14 18:28:54
news-image

சித்தர்களின் அருளைப் பெறுவதற்கான சூட்சுமங்கள்

2023-07-28 16:25:07
news-image

பிரபல ஓவியர் மாருதி காலமானார்

2023-07-28 15:06:33