logo

கில் அபார சதம், மோஹித் 5 விக்கெட் குவியல்; முன்னாள் சம்பியன் மும்பையை வெளியேற்றியது குஜராத்

27 May, 2023 | 06:06 AM
image

(நெவில் அன்தனி)

அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (27) இரவு நடைபெற்ற 2ஆவது தகுதிகாண் (அரை இறுதி) ஐபிஎல் போட்டியில் 5 தடவைகள் சம்பியனான மும்பை இண்டியன்ஸை 62 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் 2ஆவது தொடர்ச்சியான தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஷுப்மான் கில் குவித்த அற்புதமான சதம், மோஹித் ஷர்மாவின் துல்லியமான பந்துவீச்சுடனான 5 விக்கெட் குவியல் என்பன குஜராத் டைட்டன்ஸின் வெற்றியை இலகுவாக்கின.

மேலும் களத்தடுப்பில் விட்ட தவறுகள், இஷான் கிஷான் எதிர்பாராதவிதமாக உபாதைக்குள்ளானமை என்பன மும்பையின் தோல்விக்கு காரணமாகின.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 233 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 3ஆவது சதத்துடன் தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கையை ஷுப்மான் கில் விளாச, குஜராத் டைட்டன்ஸ் பெரிய மொத்த எண்ணிக்கையைக் குவித்தது.

19 பந்துகளில் 30 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது கிறிஸ் ஜோர்டானின் பந்துவீச்சில் டிம் டேவிட் விட்ட சற்று கடினமான பிடியை சாதகமாக்கிக்கொண்ட கில், 60 பந்துகளை எதிர்கொண்டு 10 சிக்ஸ்கள், 7 பவுண்டறிகளுடன் 129 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் தனி ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான போட்டியில் யஷஷ்வி ஜய்ஸ்வால் 62 பந்துகளில் விளாசிய 124 ஓட்டங்களே இதற்கு முன்னர் இந்த வருடம் தனிநபரால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.

முதலாவது விக்கெட்டில் ரிதிமான் சஹாவுடன் 34 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்த கில், 2ஆவது விக்கெட்டில் சாய் சுதர்ஷனுடன் 63 பந்துகளில் 138 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஆக்காஷ் மத்வாலின் பந்துவீச்சில் டிம் டேவிட்டிடம் பிடிகொடுத்து கில் ஆட்டம் இழந்தார்.

இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தனது 3ஆவது சதத்தைப் பூர்த்தி செய்த ஷுப்மான் கில் 16 போட்டிகளில் மொத்தமாக 851 ஓட்டங்களைக் குவித்து அதிக மொத்த ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கிறார். இதில் 4 அரைச் சதங்களும் அடங்குகின்றன.

இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவின் மைக்கல் கிளிங்கருக்கு பின்னர் ஷுப்மான் கில் 4 இன்னிங்ஸ்களில் 3 சதங்களை குவித்த வீரர் ஆனார். 

சாய் சுதர்ஷன் 31 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 19ஆவது ஓவர் நிறைவில் சுயமாக ஆட்டம் இழந்து களத்தை விட்டு வெளியேறினார். 

கடைசி ஓவரில் ராஷித் கானுக்கு அதிரடியாக ஓட்டங்களைக் குவிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையிலேயே சாய் சுதர்ஷன் சுயமாக ஓய்வுபெற்றார். ஆனால், அது வாய்க்கவில்லை.

அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 28 ஓட்டங்களுடனும் ராஷித் கான் 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இதேவேளை, லக்னோ சுப்பர் ஜய்ன்ட்ஸ் துடுப்பாட்ட வீரர்களை பிரமிக்கச்செய்து 5 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றிய ஆக்காஷ் மத்வால், இந்தப் போட்டியில் நையப்புடைக்கப்பட்டார்.

அவர் 4 ஓவர்களில் 52 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.  

குஜராத் டைட்டன்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 234 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

களத்தடுப்பின்போது கண் பகுதியில் உபாதைக்குள்ளானதால் இஷான் கிஷானுக்குப் பதிலாக நிஹால் வதேரா ஆரம்ப வீரராக களம் இறக்கப்பட்டார். ஆனால், அவர் முதல் ஓவரிலேயே 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

 மும்பை இண்டியன்ஸ் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது 16ஆவது ஓவர் நிறைவில் இஷான் கிஷானின் கண்ணில் கிறிஸ் ஜோர்டனின் முழங்கை எதிர்பாராதவிதமாக பட்டதால் வலி தாங்க முடியாமல் அவர் களம் விட்டகன்றிருந்தார்.

2ஆவது ஓவரில் ஹார்திக் பாண்டியா வீசிய பந்து கெமரன் க்றீனின் இடது முழங்கையை பதம் பார்க்க அவர் கடும் உபாதையுடன் தற்காலிக ஓய்வுபெற்றார். இவை அனைத்தும் மும்பைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

3ஆவது ஓவரில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை மொஹமத் ஷமி கைப்பற்ற மும்பை 2 விக்கெட்களை இழந்து 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தொடர்ந்து திலக் வர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஓரளவு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

திலக் வர்மா 43 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் மீண்டும் களம் புகுந்த கெமரன் க்றீன் 4ஆவது விக்கெட்டில் சூரியகுமார் யாதவ்வுடன் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (124 - 4 விக்.)

இந்நிலையில் சூரியகுமார் யாதவ் தனது வழமையான அதிரடி மூலம் ஓட்டங்களைக் குவித்த வண்ணம் இருந்தார்.

ஆனால், 5ஆவது பந்துவீச்சாளராக 15ஆவது ஓவரில் அறிமுகமான மோஹித் ஷர்மா தனது 3ஆவது பந்தில் அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ்வின் விக்கெட்டை நேரடியாகப் பதம் பார்க்க மும்பையன் இறுதி ஆட்டக் கனவு சிறுக சிறுக கலையத் தொடங்கியது. சூரியகுமார் யாதவ் 38 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டம் இழந்த அதே ஓவரில் திலக் வர்மாவும் (5) களம் விட்டகன்றார்.

அடுத்த ஓவரில் டிம் டேவிடை (2) எல்பிடபிள்யூ முறையில் ராஷித் கான்  ஆட்டம் இழக்கச் செய்ய, 17ஆவது ஓவரில் கிறஸ் ஜோர்டன் (2), பியூஷ் சவ்லா (0) ஆகியோரது விக்கெட்களையும் 19ஆவது ஓவரில் குமார் கார்த்திகேயாவின் விக்கெட்டையும் கைப்பற்றி 5 விக்கெட் குவியலை மோஹித் ஷர்மா பூர்த்திசெய்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14இன் கீழ் சமபோஷ பாடசாலைகள் கால்பந்தாட்டம்...

2023-06-10 10:56:20
news-image

டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் -...

2023-06-09 20:36:53
news-image

இந்தியா 296 ஓட்டங்களுடன் சுருண்டது; ரஹானே,...

2023-06-09 20:15:07
news-image

சுப்மன் கில்லை ஆட்டமிழக்கச்செய்த ஸ்கொட்பொலன்டின் பந்து...

2023-06-09 14:29:31
news-image

அவுஸ்திரேலியாவுடனான உலக டெஸ்ட் இறுதிப் போட்டியில்...

2023-06-09 07:39:23
news-image

உலகக் கிண்ண தகுதிகாண் இலங்கை குழாத்தில்...

2023-06-08 20:15:49
news-image

கிரிக்கெட் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி...

2023-06-08 20:15:31
news-image

எமது பயணம், எமது நம்பிக்கை கருப்பொருளில்...

2023-06-08 15:48:55
news-image

அமெரிக்காவின் இன்டர் மியாமி கழகத்தில் இணைவதாக...

2023-06-08 09:40:54
news-image

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதியில் ஹெட்,...

2023-06-08 06:20:32
news-image

ரிட்ஸ்பறி விதுதய நீச்சல் சம்பியன்ஷிப்: புனித...

2023-06-07 21:18:13
news-image

ஊக்கமருந்து பாவனையை எதிர்க்கும் ஆசிய சமுத்திரவலய...

2023-06-07 21:19:45