உலகில் முன்னணி இணைய பரிவர்த்தனை நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.

இணையவழி ஊடாக பொருட்களையும், சேவைகளையும் வழங்குவதில் முன்ணனியில் திகழும் சீன நிறுவனமான அலிபாபா இலங்கையில் முதலீடு செய்வதற்காக, நிறுவனத்தின் ஸ்தாபகரும், சமகால தலைவருமான ஜெக் மேவுக்கும், நிதியமைச்சர்  ரவி கருணாநாயக்கவுக்குமிடையே கலந்துரையாடல் ஒன்று  சுவிஸ்சர்லாந்தின் டேவோஸ் நகரில்  இடம்பெற்றுள்ளது.

உலக பொருளாதார மாநாட்டுடன் இணைந்ததாக இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது இலங்கையில் விரைவில் மேற்கொள்ளவிருக்கும் முதலீட்டின் மூலம் நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வேலை வாய்ப்புக்கள் உருவாக வழி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1991ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அலிபாபா நிறுவனம், தற்போது வருட வருமானமாக சுமார் 1000 கோடி அமெரிக்க டொலர்களை பெறுகிறது. அத்தோடு உலகின் அதிகம் செல்வம் படைத்தவர்கள் வரிசையில் ஜெக் மே 33ஆவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.