பசுபதி நடிக்கும் 'தண்டட்டி' பட அப்டேட்

Published By: Ponmalar

26 May, 2023 | 06:12 PM
image

தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான பசுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தண்டட்டி' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்படும் திகதியும், படத்தின் வெளியீட்டு திகதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'தண்டட்டி'. இதில் பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான யதார்த்த கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் கிராமத்தில் வாழும் முதிய பெண்மணிகள் அணியும் 'தண்டட்டி' எனும் ஆபரணத்தை மையப்படுத்தியும், பசுபதி காவலராக தோன்றும் தோற்றமும்... ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதியன்று வெளியிடப்படும் என்றும், இப்படம் ஜூன் மாதம் 23ஆம் திகதியன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே 'வெயில்' எனும் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் பசுபதி கதையின் நாயகனாக நடித்திருப்பதால், இந்த 'தண்டட்டி' படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்