logo

தீராக் காதல் - விமர்சனம்

Published By: Ponmalar

26 May, 2023 | 06:17 PM
image

தயாரிப்பு: லைக்கா புரொடக்சன்ஸ்

நடிகர்கள்: ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, அம்ஜத் கான், அப்துல் லீ,  பேபி வ்ருத்தி மற்றும் பலர்.

இயக்கம்: ரோகின் வெங்கடேசன்

மதிப்பீடு: 3 / 5

தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றும் ஜெய்- தன் மனைவி ஷிவதா மற்றும் குழந்தை வ்ருத்தியுடன் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்தி வருகிறார். அலுவலக பணி நிமித்தம் அவர் சென்னையிலிருந்து மங்களூரூவிற்கு புகையிரத பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின் போது நள்ளிரவு 2 மணி அளவில் ஒரு பாலக்காடு புகையிரத சந்திப்பில் எதிர்பாராதவிதமாக முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேஷை சந்திக்கிறார். இருவரும் மங்களூருவில் இரண்டு வார காலம் தங்கி, தங்களது காதலை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.

இருவரும் தங்களுக்குத் திருமணமான விடயத்தையும், மகிழ்ச்சியுடன் இல்லை என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்கள். பிறகு ஜெய், நண்பனின் ஆலோசனையை கேட்டு, ஐஸ்வர்யா ராஜேஷின் காதலை துண்டித்து கொள்வது என்றும், சென்னையில் தொடர வேண்டாம் என்றும் தீர்மானிக்கிறார்.

ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர்- அவரை சின்ன சின்ன விடயங்களுக்காகவும்.. பொதுவெளி என்றும் பாராமல் அடித்து துன்புறுத்துகிறார். இதனால் மனதளவில் காயம்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், தனது கணவரிடமிருந்து விவாகரத்துக் கேட்கிறார்.

அவரும் விவாகரத்து கொடுத்துவிட, ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னை காதலித்த ஜெய்யை கரம்பிடிக்க தீர்மானிக்கிறார். அவரது எண்ணம் ஈடேறியதா? இல்லையா? என்பதுதான் ‘தீராக் காதல்' படத்தின் திரைக்கதை.

ஜெய் - ஷிவதா-வ்ருத்தி கதாபாத்திரம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரமும் அவருடைய கோணத்திலிருந்து பார்த்தால் நேர்மையாகவே  உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக வரும் பிரகாஷ் கதாபாத்திரம், முற்றிலும் சினிமாத்தனமாக வலிந்து புகுத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு அனுதாபம் வரும் என நினைத்து எழுதப்பட்டிருப்பது தான் பலவீனம்.

படத்தின் முதல் பாதியில் யதார்த்தம் என்ற பெயரில் இயல்பான சம்பவங்கள்.. நிகழ்வுகள்.. இடம் பெற்றாலும், பொழுதுபோக்கு அம்சம் இல்லாததால் சோர்வு ஏற்படுகிறது. இரண்டாவது பாதியில் ஜெய் கதாபாத்திரத்தின் தடுமாற்றம் ரசனை. உச்சகட்ட காட்சி எளிதில் யூகிக்க முடிந்தாலும், அதில் ஜெய் தன் முன்னாள் காதலை அனைவர் முன்னிலையும் ஒப்புக் கொள்வது நச் டச்.

ஜெய் -ஐஸ்வர்யா ராஜேஷ் -ஷிவதா இவர்களின் நடிப்பில் ஷிவதாவிற்கு முதலிடம். ஜெய் எப்போதும் போல் இயக்குநர் எதிர்பார்த்ததை கச்சிதமாக வழங்கியிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தோற்ற பொலிவில் ஆங்காங்கே வித்தியாசம் காட்டி, கஷ்டப்பட்டு நடித்து சபாஷ் வாங்குகிறார். ஜெய்க்கு நண்பனாக வரும் அப்துல் லீ, ஒன் லைன் பஞ்சில் அசரடிக்கிறார்.

பாடலை விட, பின்னணி இசை கவிதை. வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் உச்சகட்ட காட்சியில், தன் காதலை குழந்தையின் பேச்சு சமாதி கட்டி விட்டதாக பேசும் வசனம் சுப்பர்.

தீராக் காதல்- கிளறி விடப்பட்ட சுகமான சுமைகள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right