‘மலையகம் 200’ அமைச்சரவை பத்திரத்துக்கு என்ன நடந்தது?

Published By: Nanthini

26 May, 2023 | 09:32 PM
image

(நிவேதா அரிச்சந்திரன்)

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சமூக கட்டமைப்பு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. அரசியல், பொருளாதாரம், கலாசாரம் என்பதற்கு அப்பால் சமூக அபிவிருத்தி என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் மிகப்பெரிய சக்தியாக காணப்படுகிறது.  

ஆனால், இலங்கையை பொருத்தமட்டில் 200 வருடங்களாக எந்தவித அபிவிருத்தியுமின்றி ஓரங்கட்டப்பட்டுள்ள ஒரு சமூகத்தை பற்றி அரசாங்கம்  அக்கறை கொள்ள தவறியுள்ளமை வருத்தமளிக்கிறது.

'மலையகம் 200' எனும் ஒற்றை வார்த்தைக்குள் ஒட்டுமொத்த மலையகத்தின் தலையெழுத்தும் மாறுமா என்பதே இந்திய வம்சாவளியினரான பெருந்தோட்ட குடிகளின் இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது. 200 வருடகாலம் என்பது மிகப்பெரிய வரலாற்றுத் தடம்.  

வடக்கு, கிழக்கில் நிலவிய 30 ஆண்டுகால யுத்தத்தின்போது பெரும்பாலான மக்கள் தமது அடையாளங்களை இழந்தார்கள். பலர் தமது உறவுகளையே பலிகொடுத்தார்கள். இன்னும் பலர் இலங்கையிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். நிலைமை இவ்வாறிருக்க யுத்தம் நிறைவடைந்த கையோடு அங்கு வாழும் மக்கள் தமது நில உரிமைக்காக இராணுவத்தோடு போராடி வெற்றியும் கண்டு வருகின்றனர். 

தற்போது மீள்குடியேற்றங்கள் அங்கு முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், 200 வருடங்களாக யுத்தமின்றி சத்தமின்றி ஓரங்கட்டப்பட்டுள்ள மலையக சமூகத்தை பற்றி ஏனையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக, முகவரியே இல்லாமல் நாடோடிகளை போல வாழும் மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் வட்டம் இன்றும் மிகமிக குறுகியதாகவே உள்ளது. 

ஆரம்ப காலங்களில் தென்னிந்தியாவிலிருந்து கோப்பி பயிர்ச்செய்கைக்காக எப்படி அழைத்து வரப்பட்டார்களோ, அப்படியே இன்றையளவிலும் தோட்ட முகாமைத்துவத்தின் இயற்றப்படாத சட்ட வரையறைகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்கள். 

இதில் வேதனை என்னவெனில், 200 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், இந்த மக்களுக்கு 6 அடி நிலம் கூட சொந்தமில்லை.   

வசிப்பதற்கு ஒரு சொந்த வீடே இல்லை என்றபோது அவர்களின் ஏனைய அடிப்படை வசதிகளை போராடி பெற்றுக்கொள்ள திராணியற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். இவ்வாறு ஆரம்ப காலங்களிலிருந்தே திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ள இந்த பெருந்தோட்ட சமூகம் இன்று நாட்டின் கல்வி, அரசியல், மருத்துவம், சட்டம் மற்றும் ஊடகம் என சகல துறைகளிலும் வளர்ந்துவிட்டபோதிலும், இன்று வரை முகவரியற்ற சமூகமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

நிலைமை இவ்வாறிருக்க, இந்த 200ஆவது வருடத்தை நினைவுகூரும் முகமாக பல்வேறு கொண்டாட்டங்களும் கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் வெறுமனே ஏற்பாட்டுக் குழுவினரின் ஒன்றுகூடலாக அமையுமே தவிர ஒருபோதும் இந்த மக்களின் நிரந்தர தாகத்துக்கு தண்ணீராக அமையபோவதில்லை. இதற்கு வலு சேர்த்தாற்போன்று அரசாங்கத்தினால் மலையகம் 200ஐ நினைவுகூரும் வகையில் முத்திரையொன்று வெளியிட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

200 வருட வரலாற்றுத் தடத்துக்கு அரசாங்க தரப்பிலிருந்து கிடைத்துள்ள அங்கீகாரம் இந்த ஒற்றை முத்திரைதானா என்பதே ஒட்டுமொத்த மலையகத்தாரினதும் கேள்வியாக அமைந்துள்ளது. 'முத்திரை வேண்டாம் முகவரியே வேண்டும்' என்பதே பெருந்தோட்ட சமூகத்தின் கோரிக்கையாக உள்ளது. 

ஆனால், இந்த கோரிக்கையை ஏற்று பெருந்தோட்ட  சமூகத்துக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் மெளனம் காத்து வருகின்றதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 

கடந்த வரவு - செலவுத் திட்ட உரையின்போதும் கூட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களின் 200 வருட வரலாற்றை கருத்திற்கொண்டு மலையக அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்படும் என உறுதியளித்திருந்தார். 

இந்நிலையில், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் மலையக அபிவிருத்தி தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டின் ஐந்து மாதகாலப் பகுதியில் இடம்பெற்ற எந்தவொரு பாராளுமன்ற அமர்விலும் மலையக அபிவிருத்தி தொடர்பான அமைச்சரவை பத்திரம் குறித்து மலையக அரசியல்வாதிகள் எவரும் வாய் திறந்ததாக இல்லை. 

இந்நிலை தொடருமானால், மலையகத்தின் 200 வருடகால வரலாறு வெறும் முத்திரை வெளியீட்டோடு முடிந்துவிடும் என்பதை மலையகத்தை பிரதிபலித்து பாராளுமன்றம் சென்றுள்ள அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

இன்று உலக நாடுகள் மத்தியில் இலங்கையின் தேயிலை தொடர்பில் பேசப்படுவதற்கு மலையகத்தின் அமைவிடம் எந்தளவு முக்கியமோ, அந்தளவுக்கு ஆளணி வளமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பெருந்தோட்ட சமூகத்தினர் தேயிலை உற்பத்திக்காக வாழ்நாளையே அர்ப்பணித்து வாழ்கின்றார்கள். இந்த ஆளணி வளத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டதால்தான் இன்றையளவிலும் கூட பெருந்தோட்ட கம்பனிகள் தேயிலை பறிப்பதற்கு இயந்திரங்களின் உதவியை நாடாமல் உள்ளனர். 

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கில் இனப்பிரச்சினை வெளியானதையடுத்து அங்குள்ள அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து பாராளுமன்றில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து மக்களோடு மக்களாக போராட்டம் நடத்தியதை நாம் நன்கறிவோம். 

ஜனாதிபதிக்கு பகிரங்க அழைப்பு விடுத்ததையடுத்து வடக்கு, கிழக்கு தமிழ் பிரதிநிதிகளை சந்திக்க ஜனாதிபதி முன்வந்துள்ளதுடன், ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்திலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

ஆக, 30 ஆண்டுகால யுத்தத்தால் மனதளவில் சோர்வடைந்த மக்களும் அரசியல் தலைமைகளும் யுத்தம் நிறைவடைந்த பின்னர், அப்படியே தணித்து நின்றுவிடவில்லை. அவர்களுக்கான தனி அடையாளத்தை தொடர்ந்து தக்கவைக்க ஒற்றுமையாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இலங்கையில் 200 வருடங்களாக ஓரங்கட்டப்பட்டுள்ள ஒரு சமூகத்தின் அவலக்குரல்களை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்ல முடியாத ஒரு நிலையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.  

சர்வதேசத்திடம் எடுத்துச் செல்லும் முன்னர் இலங்கை அரசாங்கத்திடம் இந்த சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலாவது ஆராயலாம் என்பதே சமூக ஆய்வாளர்களது அங்கலாய்ப்பாக உள்ளது. 

மலையக அரசியல் தலைவர்களின் நகர்வு இப்படியும் அமையலாம்

மலையகம் 200 எனும் தொனிப்பொருளில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிப்பது தொடர்பில் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் தலைவர்களின் ஒன்றுகூடல் தற்போது அவசியமாக உள்ளது. 

இந்த 200ஆவது வருடத்தை நினைவுகூரும் முகமாக எவ்வாறான திட்டங்களை முன்வைக்கலாம். அவற்றில் எந்தெந்த திட்டங்களை இந்த வருடத்திலேயே முன்னெடுக்க முடியும், எவ்வாறான மாற்றங்களை பெருந்தோட்டத்துறையில் ஏற்படுத்தலாம் என்பது தொடர்பில் மலையக அரசியல் கட்சிகள் முன்வந்து தொழிற்சங்கங்கள், மலையக புத்திஜீவிகள், சிவில் சமூகங்கள் ஆகியோருடன் இணைந்து மாநாடு ஒன்றை  நடத்தலாம். 

இந்த திட்டமிடல் கட்டமைப்புக்குள் பெருந்தோட்ட கம்பனிகளையும் உள்வாங்குவதன் ஊடாக எதிர்காலங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழில்முறை மாற்றம் அல்லது நவீனமயப்படுத்தல் தொடர்பில் தெளிவான தீர்மானங்களை பெறக்கூடியதாக இருக்கும். 

இதற்கிடையில் சிவில் சமூகத்துடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணி தயாரித்துள்ள மலையக தேசிய அரசியல் அபிலாஷைகள் எனும் ஆவணம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் மனோ கணேசன் கேசரியிடம் தெரிவித்திருந்தார். 

இது உண்மையில் வரவேற்கத்தக்கது என்றாலும் கூட காலம் கடந்த சூரிய நமஸ்காரமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் இந்த முக்கிய தரப்புக்கள் தெளிவாக இருக்க வேண்டும். அதேநேரம் இந்த முயற்சிகள் யாவும் வெறும் பேச்சுவார்த்தையோடு நின்றுவிடாமல், 200ஆவது வருடத்தை மையப்படுத்தி அத்தியாவசியமான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

கொவிட் பரவலுக்கு பின்னர் இலங்கையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும்முகமாக தற்போது நுவரெலியா மீது அரசாங்கம் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்வதன் ஊடாக மலையகத்தின் பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி தொடர்பான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கக்கூடியதாக இருக்கும். 

200 வருடங்களேனும் மிகப்பெரிய வரலாற்றுத் தடத்தை பதிவாக மாற்ற எண்ணும் அதேவேளை இந்த 200ஆவது வருடத்திலாவது பெருந்தோட்ட சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட தலைவர்கள் இனியாவது ஒன்றிணைய வேண்டும். 

மலையகம் 200 எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்களை தவிர்த்து அனைத்து மலையக அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்துடன் போர் தொடுத்தாவது இந்த சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளான சொந்த நிலத்தில் தனி வீடு மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியம் என்பனவற்றை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.  

 இலங்கையின் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்காளியான தேயிலை உற்பத்திக்கு பரம்பரை பரம்பரையாக தம்மை அர்ப்பணித்து வாழும் பெருந்தோட்ட சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் செய்யப்போகும் நன்றிக்கடன் என்னவென்பதை உலக நாடுகள் நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. 

பெருந்தோட்ட சமூகத்தின் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய இறுதி தருணம் இதுவென்றே சொல்லலாம். எனவே, பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவர்கள் என்ற ரீதியில் மலையகத்தின் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க ஒன்றிணைய வேண்டும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50