தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக நாளை கொழும்பு காலி முகத்திடலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தியாவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. 

இந்நிலையில், தமிழ் மரபினை காக்க உலகளாவிய ரீதியில் வீதிகளில் இறங்கி போராடும் தமிழக உறவுகளுக்காக சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து, நடத்தவுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.