விளம்பரம் தேடும் நடிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று விஜய் சேதுபதியை எதிர்த்து திண்டுக்கல்லில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காந்திகிராம பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக் கழகம் நுழைவு வாசலில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது அங்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு

அவர் பேசிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த சில மாணவர்கள், நடிகர்கள் யாரும் இங்கு வந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டாம். உடனே திரும்பி போங்கள் என்று கோ‌ஷம் போட்டனர்.

மாணவர்கள் கூறியதாவது:- காந்தி கிராம பல்கலைக்கழகம் அருகே கருப்பன் என்ற சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சிங்கம் புலி ஆகியோர் நடித்து வருகின்றனர். நாங்கள் போராட்டம் செய்த போது மாணவர்கள் சிலர் கருப்பன் என்ற சினிமா ஜல்லிக்கட்டு சம்மந்தமான கதை என்பதால் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து பேச சொல்லலாம் என்று அவரிடம் கேட்டனர்.

ஆனால், படப்பிடிப்பு இருக்கிறது வர வாய்பில்லை என்று கூறிவிட்டு படப்பிடிப்பு முடிந்த பின்னர் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார். தற்போது படப்பிடிப்பு குழுவினர் எங்களிடம் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து வருகிறோம் என்றனர் சரி என்றோம்.

ஆனால் பின்னர் படப்பிடிப்பு இருக்கிறது. அதனால் படப்பிடிப்பின் இடைவேளையின் போது வந்து கலந்து கொள்வதாக விஜய் சேதுபதி 

கூறுவதாக கூறி சென்றனர். அதே போல் படப்பிடிப்பு முடிந்து சாப்பிட்டுவிட்டு வந்துள்ளார்கள்.

விளம்பரம் தேட வேண்டாம்

உண்மையிலேயே ஜல்லிக்கட்டுக்கும், அதற்காக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தருபவராக இருந்திருந்தால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு எங்களுக்கு ஆதரவு தந்திருக்க வேண்டும். விளம்பரத்திற்காக மட்டுமே வரும் நடிகர்கள் எங்களது போராட்டத்திற்கு தேவையில்லை என்று கூறினர். மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் போட்டதால் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சிங்கம்புலி மற்றும் அவரது குழுவினர் 5 நிமிடத்தில் அங்கிருந்து புறப்பட்டு வெள்ளோட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றனர்.

மாணவர்கள் நடிகர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது