எம்முடைய இளைய தலைமுறையினர் தற்போது எதன் காரணம்பொருட்டாவது வாரத்தின் இறுதி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து மது அருந்துவதை பெஷனாக வைத்திருக்கிறார்கள்.இதனால் அவர்களின் ஆரோக்கியம் கெடுகிறது. குறிப்பாக இரத்தத்தை சுத்திக்கரிக்கும் பணியை இடைவிடாமல் செய்து வருதுடன் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்காக பல்வேறு நல பணிகளை செய்து வரும் கல்லீரல் பாதிக்கப்படுகிறது.

ஒரு புள்ளியில் மதுவின் மீதான மோகத்தில் மதுவை தொடர்ந்து அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள். இதனால் கல்லீரல் அதிகமான பணிப்பளுவை செய்ய இயலாமல் திணறி சுருங்கத் தொடங்குகிறது.பின்னர் கல்லீரல் மீது சிறிய அளவிலான கொப்புளங்கள் தோன்றுகிறது. இதன் காரணமாக வயிறு வீக்கமடைகிறது. அதிலும்ஒரு சிலருக்கு அவர்களின் தோற்ற அமைப்பிற்கு மாறாக வயிறு மட்டும் அதிகளவில் வீங்கி இருக்கும். இதன் காரணமாக இரத்தம் சுத்திகரிக்கப்படும் பணிமுற்றிலும் பாதிக்கப்பட்டு, வயிற்றிற்குள் ஆபத்தான கெட்ட நீர் 5 லீற்றர் வரை சேர்ந்துவிடக்கூடிய அபாயம் ஏற்படுகிறது.

இந்தநிலையில் உடனடியாக மருத்துவர்களை சந்தித்தால் அவர்கள் வயிற்றில் உள்ள ஆபத்து விளைவிக்கும் கெட்ட நீரை ஊசி மூலம் அகற்றுவார்கள். ஆனால் இதனையும் அலட்சியப்படுத்திவிட்டு சிகிச்சை பெறவில்லை என்றால் உணவுக்குழாயின் உட்புறச் சுவர்களிலுள்ள இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்துவிடும். இப்படி வீக்கமடையும் நிலையைத்தான் ஈசோப்ஜியல் வெரிசீஸ்  பாதிப்பு (Esophageal Varices)  என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  இந்நிலையில் நோயாளிகள் முதலில் இரத்த வாந்தி எடுப்பார்கள். உடலின் முக்கிய உறுப்புகளான கண், முகம், கை, கால் ஆகியவற்றின் இயல்பான நிறம் மாறி மஞ்சள் வண்ணத்திற்கு மாறிவிடும். ஒரு சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டு, அதனால் அவதியுறுவர். இந்த நிலையிலும் தீவிரமாக சிகிச்சையளிக்கவில்லை என்றால் நோயாளி கடுமையாக பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று மரணத்தை சந்திப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால் இத்தகைய பாதிப்பை வருமுன் காப்பது தான் சிறந்தது. அதாவது மதுவை தவிர்ப்பது தான் இதற்கான பூரணமான சிகிச்சை.

டொக்டர் சஞ்சீவிகுமார்

தொகுப்பு அனுஷா.