எரியும் விளக்கை தூண்டும் முறை...

Published By: Ponmalar

25 May, 2023 | 05:24 PM
image

விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த தீபத்துக்குள் சூரிய தேவதை ஆவாஹனமாகி விடுவாள். ஆகையால் எரியும் விளக்குத் திரியின் கசடைத் தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. இதனால் தோஷங்கள் ஏற்படும். 

எனவே திரியைப் பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம். மேலும் நேரம் ஆக ஆக விளக்கின் ஒளி மங்கிக் கொண்டே வந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியின் அருகே புது திரி ஒன்றை ஏற்றிப் பின்னர் பழைய திரியை எடுத்து விட வேண்டும். இதுவே சிறந்த முறை ஆகும். 

தீபத்தைக் குளிரவைக்கும் முறை 


பொதுவாக மக்கள் தீபமேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே அணையும் வரை விட்டு விடுகின்றனர். இது தவறு! தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தைக் குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். 

மேலும் விளக்கை அணை எனக்கூற கூடாது, விளக்கை குளிரவை எனக் கூற வேண்டும். விளக்கை ஆண்கள், ஏற்றுவதோ, குளிர வைப்பதோ செய்யக்கூடாது. பெண்களே செய்ய வேண்டும். 

தீபத்தை வாயினால் ஊதியோ, வெறுங்கையினாலோ அணைக்க கூடாது, தீபத்தைக் குளிர வைக்க திரியின் அடிப்பகுதியை (எண்ணெயில் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்வலரூபிணே நம என்று சொல்லிப் பின்புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடர் சிறிது சிறிதாகக் குறைந்து, திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும். 

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் 


வார தினங்களில் ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில்தான் விளக்கு துலக்க வேண்டும். மற்ற நாட்களாகிய செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்க கூடாது. 

ஞாயிறு விளக்கு துலக்க கண் சம்பந்தமான நோய்கள் தீரும், திங்கள் விளக்கு துலக்க அலைபாயும் மனம் அடங்கி அமைதிபெறும், வியாழன் விளக்கு துலக்க மனக்கவலை தீரும், குரு அருள் கிட்டும். சனிக்கிழமை விளக்கு துலக்க, வாகன விபத்துக்கள் ஏற்படாமல் நம்மைக் காக்கும். 

விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை 

* விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது. 

* விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது. 

* விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது. 

* விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது. 

* விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது. 

* விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது. 

* விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது. 

* விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது. 

* வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூடாது. 

திருவிளக்குப் பூஜையில் கவனிக்க வேண்டியவை 

இரு விளக்குகளை வைத்து வணங்கக் கூடாது. ஒன்று அல்லது மூன்று விளக்குகளை வைத்துத்தான் வணங்க வேண்டும். 

காலையில் லட்சுமிக்கு விளக்கேற்றி தினமும் வணங்கினால் செல்வம் பெருகும். 

காலையிலும், மாலையிலும், குறித்த நேரத்தில் விளக்கேற்றி வணங்கினால் செல்வம் வற்றாது பெருகுவதுடன், நம் பாவமும் விலகும். 

விளக்கை கிழக்கு திசை நோக்கி வைப்பதுதான் சிறப்பு. 

எண்ணெய்யில்லாமல் தானாக விளக்கை அணையவிடக் கூடாது. பூஜை முடிந்து பத்து நிமிடம் கழித்து விளக்கைக் குளிர வைக்க வேண்டும். 

அன்றாடம் மாலையில் ஒரு முக விளக்காகிய காமாட்சியம்மன் திருவிளக்கின் திருவடியில் தாமரை மலரை வைத்து பாராயணம் செய்வது சிறப்பு ஆகும். 

திருவிளக்குப் பூஜையில், விளக்கிற்கு அர்ச்சித்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும், தலை உச்சி வடுகிலும் வைத்து வர, அவர்களுடைய கணவர்கள் நலமுடன் வாழ்வார்கள். திருவிளக்கு பூஜை செய்யும் குத்து விளக்கை தலை வாழை இலை மீது வைத்து பூஜை செய்ய வேண்டும். அதனால் அந்தக் குடும்பம் வாழையடி வாழையாக வையகத்தில் தழைத்தோங்கி, வாழ்வு பசுமையானதாக அமையும். 

நாள் தோறும் திருவிளக்கு வழிபாடு செய்து வர, 108 நாட்களில் இல்லத்தில் மங்கல காரியங்கள் நடக்கும். 

தினசரி வீட்டில் திருவிளக்கு ஏற்றும் போது, திருவிளக்கு அகவல் படித்துவர நன்மை உண்டாகும். 

திருவிளக்குப் பூஜையின் போது இடது கையால் எந்த மங்கல காரியங்களையும் செய்யக் கூடாது. 

தீபம் ஏற்றும் போது ஒரே முயற்சியில் எரிவது நல்லது. 

தீபச்சுடர் நின்று நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது. புகையக் கூடாது, மெல்லத்தணிந்து அடங்கக் கூடாது. 

மிகச் சிறியதாக அல்லது மிகப் பெரியதாகச் சுடர் எரியாமல் திருவிளக்கின் அமைப்பிற்கும், அளவிற்கும் தகுந்தபடி எரிய வேண்டும். 

சுடரில் புகை தோன்றினாலும், திரி கருகினாலும் அவற்றிற்குக் காரணமான திரியையோ அல்லது எண்ணெயையோ உடனே மாற்றிவிட வேண்டும். 

பொதுவாக காமாட்சியம்மன் விளக்கின் திருச்சுடரைக் கொண்டு மற்றொரு விளக்கின் சுடரை ஏற்றமாட்டார்கள். 

பல அகல் விளக்குகளை அல்லது திருவிளக்குகளை ஏற்ற வேண்டியிருந்தால் முதலில் ஒரு விளக்கின் சுடரை ஏற்றி, அதன் மூலம் அனைத்து விளக்கின் சுடர்களையும் ஏற்றலாம். 

திருவிளக்கு தொடர்ந்து எரிய வேண்டிய சூழ்நிலையில், விளக்கின் குழியில் எண்ணெயைத் தொடர்ந்து வார்த்துக் கொண்டிருப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். 

விளக்கில் குளம் போல் எண்ணெயை ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டும். 

திருவிளக்கு பூஜையில் குத்து விளக்கிற்கு சிகப்பு வண்ண மலர்களைச் சாற்றலாம், லட்சுமி பூஜைக்கு செவ்வந்தி மலர் சாற்றலாம். 

விளக்கு பூஜையில் விளக்கு ஏற்றியவுடனே சந்தனம், குங்குமம் வைத்து விட வேண்டும். விளக்கை ஏற்றிவிட்டு மெதுவாக மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு பொட்டு வைக்கக் கூடாது. 

திருச்சுடர் எதிர்பாராத காரணத்தால் தானே அணைவதும், எண்ணெய் இல்லாமல் அணைவதும் குற்றம் ஏற்படுத்தும், பூஜை நடைபெறும் போதும், மங்கலக் காரியங்கள் நடக்கின்ற போதும் லட்சுமிகரமாக எரிகின்ற திரிச்சுடரானது சட்டென்று அணைவது அமங்கலம் ஆகும். 

திருச்சுடரில் மகாலட்சுமி நிறைந்து, நிலைத்து நிற்கின்ற காரணத்தால் அச்சுடரைக் கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிர வைப்பது பெரிய குற்றமாகும். 

அன்புக் காணிக்கையாக ஒரு அரிசியை தீபத்தட்டில் வைத்து, எப்பொழுதும் எம் உள்ளளி பெருக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து திரியை மெதுவாக உள்ளே இழுத்து ஒளியை நெய்யில் மறையச் செய்ய வேண்டும், அல்லது பூக்களால் அணைக்கலாம். அல்லது பால் துளிகளைக் தெளித்தும் திருச்சுடரைக் குளிர வைப்பது (அணைப்பது) மிகவும் பொருத்தமானது ஆகும். 

அதிகாலையில் எழுந்ததும் பூஜை அறையில் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு இவற்றில் ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். 

விளக்கைத் திரியால் தூண்டி விட வேண்டும். 

தீபம் லட்சுமி வாசம் செய்யும் இடம். மங்கலச் சின்னம். இல்லறம் பிரகாசமாக இருக்க, எப்போதும் தீபமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். 

தீபம் வைத்த உடன் முகம் கழுவுதல், தயிர் கடைதல், காய்கறி நறுக்குதல், அரிசி களைதல் போன்றவைகளை செய்யக்கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right