(நெவில் அன்தனி)
இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டு முன்னேற வேண்டுமானால் கால்பந்தாட்ட பயிற்சியகங்களுக்கு இடையில் வருடாந்தம் பெரிய அளவிலான கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படவேண்டும் என மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் ஸ்தாபகத் தலைவர் ஒகஸ்டின் ஜோர்ஜ் தெரிவித்தார்.
கால்பந்தாட்டம் விளையாடப்படாத பாடசாலைகளிலிருந்து பல மாணவர்கள் கால்பந்தாட்டப் பயிற்சியங்களில் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த மாணவர்களுக்கு கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.
அடிமட்டத்திலிருந்து (Grassroot) கால்பந்தாட்டம் பயிற்றுவிக்கப்பட்டால்தான் அவ் விளையாட்டில் முன்னேற்றம் அடைய முடியும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன அதிகாரிகள் பல தசாப்தங்களாக கூறிவந்தனர். ஆனால், விரல்விட்டு எண்ணக்கூடிய தனிப்பட்டவர்களே கால்பந்தாட்டப் பயிற்சியகங்களை ஆரம்பித்து சிறார்களுக்கு அடிமட்டத்திலிருந்து பயிற்சி வழங்கி சிறப்பாக நடத்தி வருவதை அவதானிக்க முடிகிறது.
அந்த வரிசையில் ஒகஸ்டின் ஜோர்ஜ் என்ற தனிநபர் 2017ஆம் ஆண்டு மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தை ஆரம்பித்து முன்னாள் இலங்கை வீரர்களைக் கொண்டு அடிமட்டப் பயிற்சிகளை சிறார்களுக்கு வழங்கிவருகிறார்.
பயிற்சியகத்தை ஆரம்பித்தபோது சிறுவர்கள் மத்தியில் கால்பந்தாட்ட ஆற்றல்களை இனம் காணும் பொருட்டு 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தேர்வுகளில் ஈடுபடுத்தப்பட்டு 260 சிறுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியகத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தில் 12, 14, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பதிவுசெய்யப்பட்டு வார இறுதி நாட்களில் கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் பயிற்றுவிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
பாதுகாவலர்களின் பராமரிப்பில் வாழ்ந்து வருபவர்கள், பிறமாவட்டங்களிலிருந்து வருகை தந்து பயிற்சி பெறுபவர்கள் என சுமார் 40 பேருக்கு இலவசப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதாக ஜோர்ஜ் மேலும் கூறினார்.
மாலைதீவுகளில் 2018இல் நடைபெற்ற கால்பந்தாட்டப் பயிற்சியக அணிகளுக்கு இடையிலான அழைப்பு சர்வதேச கால்ப்பந்தாட்டப் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் இரண்டு அணிகள் பங்குபற்றின.
அப் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கால்பந்தாட்ட பயிற்சியக அணிகள் பங்குபற்றியதுடன் இறுதிப் போட்டியில் மாலைதீவுகள் பயிற்சியகத்திடம் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக அணி தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்றது.
அதன் பின்னர் கொவிட் - 19 தொற்று நோய் தாக்கம் காரணமாக சில வருடங்களாக பயிற்சியகம் முறையாக இயங்குவதில் தடங்கல் ஏற்பட்டது.
மூன்று வருடங்கள் கழித்து கால்பந்தாட்டப் பயிற்சியகங்கள் முழுமையாக இயங்கத் தொடங்கியபோது 2022இல் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தால் பயிற்சியகங்களுக்கு இடையிலான அழைப்பு கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்பட்டது.
அப் போட்டியில் சோண்டர்ஸ் பயிற்சியகம் சம்பியனானதுடன் கலம்போ எவ்.சி. பயிற்சியகம் 2ஆம் இடத்தைப் பெற்றது. மென்செஸ்டர் பயிற்சியகம் அரை இறுதிவரை முன்னேறியிருந்தது.
இவ்வாறாக சிறுக சிறுக முன்னேற்றம் அடைந்துவந்த மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் இந்த வருடம் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற கால்பந்தாட்டப் பயிற்சியகங்களுக்கு இடையிலான அழைப்பு கால்பந்தாட்டப் போட்டியில் 3 வயதுப் பிரிவுகளில் சம்பியனாகி வரலாறு படைத்திருந்தது.
12 வயதுக்குட்பட்ட பிரிவில் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக அணி தோல்வி அடையாத அணியாக சம்பியனானது விசேட அம்சமாகும். இதில் 6 போட்டிகளில் 5இல் வெற்றியீட்டிய மென்செஸ்டர் பயிற்சியக அணி ஒரு போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டு சம்பியனானது.
இப் பிரிவில் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக வீரர்களான ஒகஸ்டின் மெஸி சுற்றுப் போட்டி நாயகனாகவும் முவாஸ் மிப்தா சிறந்த வீரராகவும் எம்.ஆர். முஹம்மத் சிறந்த கோல்காப்பாளராகவும் தெரிவாகினர்.
14 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்குபற்றிய மென்செஸ்டர் பயிற்சியக அணி 2 வெற்றிகள், 2 தோல்விகள், 2 வெற்றி தோல்வியற்ற முடிவுகள் என்ற பேறுபேறுகளுடன் சம்பியனானது.
இப் பிரவில் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக வீரர் தசீம் அஹ்மத் சிறந்த வீரராகத் தெரிவானார்.
16 வயதுக்குட்பட்ட பிரிவில் 2 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளுடன் மென்செஸ்டர் பயிற்சியகம், பாக்கா பயிற்சியகத்துடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி (0 - 0) முடித்துக்கொண்டு சம்பியனானது.
இப் பிரிவில் சிறந்த வீரராக மென்செஸ்டர் பயிற்சியக வீரர்களான எம்.ஐ.எம். ரிஷார்ட் சிறந்த வீரராகவும் எம். ஷஹில் சிறந்த கோல்காப்பாளராகவும் தெரிவாகினர்.
இந்தியாவில் ஈட்டிய இந்த வெற்றிகளுக்கு வீரர்களின் விடாமுயற்சியும் அர்ப்பணிப்புத்தன்மையும் பெற்றோர்களின் ஊக்குவிப்பும் பயிற்றுநர்கள் அளித்த சிறந்த பயிற்சிகளுமே காரணம் என மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் பணிப்பாளர் ஒகஸ்டின் ஜோர்ஜ் தெரிவித்தார்.
மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தில் வீ. ஒகஸ்டின் ஜோர்ஜ், அன்டன் வம்பேக், ராஜமணி தேவசகாயம், மொஹமத் அஸ்வர், சந்தனம் அன்தனி, மொஹமத் ரிஷான், மொஹமத் முர்ஷெத், தரங்க பெர்னாண்டோ, சின்னவன் ஸ்ரீகாந்த், அனுர சம்பத், மொஹமத் இம்ரான், தம்மிக்க அத்துகோரள, மொஹமத் அல்கா, பஸால் அஹமத் ஆகியோர் பயிற்றுநர்களாக செயல்படுகின்றனர்.
இதேவேளை, கால்பந்தாட்டத்தில் திறமைவாய்ந்த சிறுவர்கள் றினோன், கலம்போ எவ்.சி., சோண்டர்ஸ், பார்சிலோனா உட்பட இன்னும் பல கால்பந்தாட்டப் பயிற்சியகங்களில் பயிற்சிபெற்று வருகின்றனர். கால்பந்தாட்டம் இல்லாத பாடசாலைகளைச் சேர்ந்த சிறுவர்கள் பலர் சில பயிற்சியகங்களில் பயிற்சி பெற்றுவருகின்றனர்.
எனவே பயிற்சியக அணிகளுக்கு இடையில் குறிப்பாக 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளை முழு அளவில் நடத்தினால் இன்னும் சில வருடங்களில் கால்பந்தாட்டத்தில் பெரு முன்னேற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கும் என ஒகஸ்டின் ஜோர்ஜ் குறிப்பிட்டார்.
எனினும் இப் போட்டியை நடத்துவதற்கு பெருநிறுவனங்கள் அனுசரணை வழங்க முன்வருவது வரவேற்கத்தக்கது என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM