'2020 கிட்ஸ்' : சரோஷ் ஷமீலின் கலாட்டா என்ட்ரி !

Published By: Nanthini

25 May, 2023 | 11:20 AM
image

தற்போது யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புதுவித குட்டி கலாட்டா பாடலாக வலம் வந்துகொண்டிருக்கிறது, '2020 கிட்ஸ்'.

சிறுவர்களுக்கே உள்ள குறும்புகளோடு துள்ளலும் துடிப்பும் ஆட்டமும் பாட்டும் நடிப்புமாக விளையாட்டுக் காதலை வேடிக்கையாக வெளிப்படுத்தும் 6 வயது சிறுவனான சரோஷ் ஷமீல் பிரதான கதாபாத்திரத்தில் பாடல் முழுவதும் தோன்றுகிறார். 

இலங்கையின் பிரபல இளம் இசையமைப்பாளர் ஷமீல்.ஜேயின் மகனான சரோஷ் ஷமீல், 2020 கிட்ஸ் என்கிற புதிய சந்ததியின் இயல்புகள், சிந்தனைகள், செயல்களை இந்த பாடலினூடாக பிரதிபலிக்கிறார். 

ஷமீலின் மனைவியான ஷஸ்னாவின் தயாரிப்பில் உருவான "பீச் ஓரமா பீச் ஓரமா...." என ஆரம்பிக்கும் இந்த பாடலை சரோஷே தனது கொஞ்சும் குரலில் பாட, அவரது தந்தையான ஷமீல் எழுதி, இசையமைத்து, இயக்கியதோடு, காட்சியில் தோன்றியுமிருக்கிறார். 

சரோஷுக்கு அடுத்ததாக துருதிஷா திலீப ராஜா என்கிற சிறுமியும் முக்கிய அங்கமாக பாடலில் இடம்பெற்றுள்ளதோடு,  ஸ்ரீ சங்கர் பவனிஷ், ஜே.பி.கே. சிங்கம் போன்றோரும் சில காட்சிகளில் தலைகாட்டுகின்றனர்.

அத்தோடு, பாடலுக்கான ஒளிப்பதிவினை அர்ஜுன் சண்முகலிங்கமும், காணொளித் தொகுப்பினை விஜியும், கலர் மற்றும் டைட்டிலை கே.எஸ்.கண்ணனும் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையின் கலைத்துறையிலும் திரைத்துறையிலும் சிறுவர்களின் திறமைகள் உள்வாங்கப்படுவது குறைந்துள்ள இக்காலகட்டத்தில், சிறுவர்களிடத்தில் உள்ள கல்வியறிவை மட்டுமன்றி, கலைத்திறமைகளையும் ஊக்குவிக்க வேண்டியது இந்நாட்டு கலையார்வலர்கள் மற்றும் ரசிகர்களின் கடமை என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. 

சரோஷின் தந்தை ஷமீல் இலங்கை கடந்து இந்திய இசைத்துறை‍யிலும் கால்பதித்த ஒருவராக இருக்கிறார். 

இலங்கையின் சம கால அரசியல், பொருளாதார, சமூக, மக்கள் நிலைமையை கருப்பொருளாகக் கொண்ட 'வாழணுமா சாகணுமா சொல்லுங்க', 'விலகிடு வழிவிடு வாழவிடு' ஆகிய பாடல்களை உருவாக்கி, இசையமைத்துள்ளார்.

'வாழணுமா சாகணுமா சொல்லுங்க' என்ற இவரது இசையில் அமைந்த பாடலை தமிழ்நாட்டின்  பாடகரும் நடிகரும் இசையமைப்பாளரும் அரசியல்வாதியுமான டி.ராஜேந்தர் பாடி பட்டி தொட்டியெங்கும் ஒலித்தமை சிறப்பம்சம். 

மேலும், தென்னிந்திய இயக்குநர் இசாக்கின் இயக்கத்தில் உருவான '181' திரைப்படத்துக்கு ஷமீல் இசையமைத்து இந்திய இசைத்தளத்திலும் இடம்பிடித்திருக்கிறார். 

ஷமீலின் இசையில் அமைந்த பல படைப்புகள் இலங்கை கடந்து பெரிதளவில் வரவேற்கப்பட்டதோடு, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல விருதுகளை வென்ற இசைக்கலைஞராகவும் விளங்குகிறார். 

அவரது இசை வாரிசாகவும், லிட்டில் ரொக் ஸ்டாராகவும் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்திருக்கும் சரோஷ், தனது முதல் படைப்பிலேயே இலங்கைக் கலைஞர்களின் ஏகபோக பாராட்டுகளை  வாரிக் குவித்திருப்பதை மிகப் பெரும் வெற்றியாக கருத முடிகிறது.

இந்த '2020 கிட்ஸ்' குழந்தை நட்சத்திரமான சரோஷ் எதிர்காலத்தில் ஈழத்து சினிமாவில் மிகப் பெரும் கலைஞராக ஜொலிப்பார் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right