ஆகாஷின் 5 விக்கெட் குவியலுடன் லக்னோவை வீழ்த்தி 2ஆவது தகுதிகாணில் நுழைந்தது மும்பை

25 May, 2023 | 06:20 AM
image

(நெவில் அன்தனி)

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) இரவு நடைபெற்ற ஐ.பி.எல். நீக்கல் போட்டியில்  லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸை 81 ஓட்டங்களால் வெற்றிகொண்ட மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஆகாஷ் மத்வால் இந்த வருடம் பதிவுசெய்த சாதனைமிகு 5 விக்கெட் குவியலும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டமும் 3 வீரர்கள் அநாவசியமாக ரன் அவுட் ஆனதும் மும்பைக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

இந்த வெற்றியுடன் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிகாண் (அரை இறுதி) போட்டியில் நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸை மும்பை இண்டியன்ஸ் எதிர்த்தாடும்.

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான கடந்த 3 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த மும்பை இண்டியன்ஸ் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் முதல் தடவையாக புதன்கிழமை வெற்றிபெற்றது.

இதேபோன்ற முடிவே செவ்வாய்க்கிழமையும் பதிவானது.

குஜராத் டைட்டன்ஸிடம் அடைந்த 3 தொடர்ச்சியான தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றிருந்தது.

மும்பை இன்டியன்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 183 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 16.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்து 2023 ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறியது.

4ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது 2ஆவது விக்கெட்டை இழந்த லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

அணித் தலைவர் க்ருணல் பாண்டியாவும் மார்க்ஸ் ஸ்டொய்னிஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சித்தனர்.

ஆனால், க்ருணல் பாண்டியா ஆட்டம் இழந்ததும் (69 - 3 விக்) ஏனைய விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டன.

பொறுப்பற்ற துடுப்பாட்டம், தவறான அடி தெரிவுகள், விக்கெட்களிடையே ஓடுவதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் என்பன லக்னோவின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தன.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 2ஆவது ஓட்டம் ஒன்றை பெற விளைந்து தனது சக வீரருடன் மோதுண்டதால் அநாவசியமாக ரன் அவுட் ஆனார்.

லக்னோ சார்பாக மூவர் மாத்திரமே இரட்டை இலக்கங்களைப் பெற்றனர்.

கிரிஷ்னப்பா கௌதம், தீப்பக் ஹூடா ஆகியோரும் அவசரப்பட்டு ரன் அவுட் ஆனார்கள். கௌதம் இல்லாத ஓட்டத்தை பெற விளைந்து ரன் அவுட் ஆனார். தீப்பக் ஹூடாவும் நவீன் உல் ஹக்கும் ஒரே திக்கை நோக்கி ஓடியதால் ஹூடா ரன் அவுட் ஆனார்.

இதனிடையே மும்பை சார்பாக மிகவும் துல்லியமாக பந்துவீசிய ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்களில் 5 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இந்த பந்துவீச்சுப் பெறுதி இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் பதிவான அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும். அத்துடன் அவரது தனிப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகவும் பதிவானது.

ஐபிஎல் வரலாற்றில் அல்ஸாரி ஜோசப் (12 - 6 விக். மும்பை எதிர் சன்ரைசர்ஸ் 2019), சொஹெய்ல் தன்விர் (14 - 6 விக். ராஜஸ்தான் எதிர் சென்னை 2008), அடம் ஸம்பா (19 - 6 விக். ரைசிங் பூனே எதிர் சன்ரைசர்ஸ் 2016) ஆகியோருக்கு அடுத்ததாக நான்காவது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியை அனில் கும்ப்ளேயுடன் (5 - 5 விக். றோயல் செலஞ்சர்ஸ் எதிர் ராஜஸ்தான்) ஆகாஷ் மத்வால் பகிர்ந்துகொண்டுள்ளார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைக் குவித்தது.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, இஷாந்த் கிஷான் ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (38 - 2 விக்)

எனினும் சூரியகுமார் யாதவ், கெமரன் க்றீன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 38 பந்துகளில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஒரளவு உற்சாகத்தைக் கொடுத்தனர். அப்போது மும்பை 200 ஓட்டங்களுக்குமேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சூரியகுமார் யாதவ், கெமரன் க்றீன் ஆகிய இருவரும் நவீன் உல் ஹக் வீசிய 11ஆவது ஓவரில் முறையே 4ஆவது, 6ஆவது பந்துகளில் ஆட்டம் இழந்தனர். (105 - 4 விக்.)

தொடர்ந்து 15 ஓவர்கள் நிறைவில் மும்பை மேலதிக விக்கெட் இழப்பின்றி 131 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கடைசி 5 ஓவர்களில் 51 ஓட்டங்கள் பெறப்பட்ட அதேவேளை மேலும் 4 விக்கெட்கள் பறிகொடுக்கப்பட்டன.

இதனிடையே திலக் வர்மா, டிம் டேவிட், நிஹால் வதேரா ஆகிய மூவரும் தம்மிடையே 47 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றமை அணிக்கு பலம் சேர்த்தது.

எண்ணிக்கை சுருக்கம்

மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 182 - 8 விக். (கெமரன் க்றீன் 41, சூரியகுமார் யாதவ் 33, திலக் வர்மா 26, நெஹால் வதேரா 23, இஷான் கிஷான் 15, உதிரிகள் 16, நவீன் உல் ஹக் 38 - 4 விக்., யாஷ் தாகூர் 34 - 3 விக்.)

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 16.3 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 101 (மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 40, கய்ல் மேயர்ஸ் 18, தீப்பக் ஹூடா 15, உதிரிகள் 10, ஆகாஷ் மத்வால் 5 - 5 விக்., க்றிஸ் ஜோர்டான் 7 - 1 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரொஹான் டி சில்வா போட்டியின்றி மீண்டும்...

2023-05-31 17:32:53
news-image

நான் அன்றிரவு உறங்கவில்லை - இறுதி...

2023-05-31 15:26:14
news-image

ஜோகோவிச்சுக்கு எதிராக ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு...

2023-05-31 15:06:31
news-image

கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் வத்தளை லைசியம்...

2023-05-31 09:59:37
news-image

ஆசிய கிண்ண கிரிக்கெட் இழுபறி தொடர்கிறது...

2023-05-31 09:39:26
news-image

ஆப்கானிஸ்தானுடனான ஒரு நாள் தொடர்: இலங்கை...

2023-05-30 22:11:44
news-image

மலேஷிய மாஸ்டர்ஸ் பெட்மின்டன் போட்டியில் இந்தியாவின்...

2023-05-30 16:37:29
news-image

உடல் ஒத்துழைத்தால் 2024 ஐ.பி.எல். தொடரில்...

2023-05-30 13:03:57
news-image

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் புதிய பொதுச்...

2023-05-30 13:03:32
news-image

கண்ணுக்கு விருந்து - சாய் சுதர்சனின்...

2023-05-30 11:52:31
news-image

ஓட்டப் போட்டியில் பங்கேற்காமல் இருக்கப்போவதாக யுப்புன்...

2023-05-30 12:29:26
news-image

டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: மத்தியஸ்தர்...

2023-05-30 12:02:42