வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் 7 பில்லியன் நிதி மோசடி : பின்னணியில் வெளியான தகவல்கள்  

Published By: Nanthini

24 May, 2023 | 02:56 PM
image

அஹ்ஸன் அப்தர்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்ற பிரஸீலா என்ற பெண் சுனவீனமுற்ற நிலையில் நாடு திரும்பியுள்ள நிலையில், அவருக்கு அந்நாட்டின் காப்புறுதி நிறுவனம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றில் இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளது.

கணவனால் கைவிடப்பட்ட இந்தப் பெண் பொருளாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்காக பணிப்பெண்ணாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றபோதிலும், நாட்பட்ட வயிற்றுவலி மற்றும் மைக்ரேன் தலைவலியினால் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளார். 

இந்த பெண் வெளிநாடு செல்வதற்காக சுமார் 4 இலட்சம் இலங்கை ரூபாவை செலவுசெய்துள்ளார்.

அமீரகத்தில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அந்நாட்டில் உள்ள காப்புறுதி வழங்கும் கிளையின் ஊடாக 5000 திர்ஹம் (4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா) பெறுமதியான காசோலை வழங்கப்பட்டுள்ள போதிலும், அதனை இலங்கையில் மாற்றுவதற்கான வாய்ப்பின்றி இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பினை நாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, இலங்கையில் இருந்து பணி நிமித்தம் வெளிநாடுகளுக்கு  செல்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெறுகின்ற நிதி மோசடிகள் மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகள் என்பன இலங்கை குடிமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்துவதுடன், மக்களின் நிதியை பெருமளவில் வீணடிக்கிறது.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெறுபவர்களுக்கான காப்புறுதி நிறுவனங்களுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் சுமார் 10 பில்லியன் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

'கல்ஃப் இன்சூரன்ஸ் டூ ரீ இன்சூரன்ஸ்' என்ற காப்புறுதி நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் மாத்திரம் சுமார் 7 பில்லியன் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

கல்ஃப் இன்சூரன்ஸ் டூ ரீ இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒப்பந்தம் செய்துகொண்ட வீட்டுப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்ட முறைகேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்போது, குவைத் ஊழியர்களுக்கு காப்பீட்டுக் கொள்கையை செயற்படுத்த அங்கீகரிக்கப்பட்ட கேள்விப்பத்திர நடவடிக்கையை பின்பற்ற ஏற்பாடு செய்தபோது 90 மற்றும் 100 டொலர்கள் என்ற விலைமனுக்களை புறக்கணித்து, 200 டொலர்கள் என அதிக விலையில் கேள்விப் பத்திரங்களை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இலங்கை காப்புறுதி நிறுவனத்தினால் ஊழியர்களுக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் தலையீடின்றி வேறொரு முகவருக்கு கொடுக்கல் - வாங்கல் நடவடிக்கைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒப்படைத்துள்ளது.

இந்த முறைப்பாடுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள கூட்டத்தொடர் அறிக்கையினூடாக, கல்ஃப் இன்சூரன்ஸ் டூ ரீ இன்சூரன்ஸ் என்ற காப்புறுதி நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் இழப்பீடுகள் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் வழங்குமாறு அக்குழு கேட்டுள்ளது.

குறித்த நிறுவனத்திடம் சுதந்திரமான கணக்காய்வு நடவடிக்கைகளை நிறைவுசெய்த பிறகு, கணக்காய்வு நடவடிக்கைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

குறித்த காப்புறுதி நிறுவனம் குவைத் நாட்டில் இயங்கும் ஒரு காப்புறுதி நிறுவனமாகும். 2017ஆம் ஆண்டில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கும் இந்த காப்புறுதி நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டதன் அடிப்படையில் இந்நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. 

இலங்கை காப்புறுதி நிறுவனத்துக்கும் காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கும் இலாபம் கிடைக்கும் விதமாகவே இந்த ஒப்பந்தம் வரையப்பட்டுள்ளதாக கல்ஃப் இன்சூரன்ஸ் டூ ரீ இன்சூரன்ஸ் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் பங்ஸா ஜயா தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

“வளைகுடாவில் இருந்து ஒரு வீட்டுப் பணிப்பெண் கோரப்படும் முதலாளி காப்பீட்டுக்கு பணம் செலுத்தப்பட வேண்டும். இதில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஒரு கமிஷனை பெறுகிறது. இது எங்கள் அடித்தளத்துக்கு மேலும் உதவும்" என தெரிவித்தார். 

மேலும், "அவசரகால சூழ்நிலையில் தாம் பணம் செலுத்த தயாராக இருப்பதுடன், இலங்கை ஊழியர் வளைகுடாவில் தொடர்ந்து சம்பளம் பெறுவார்" என்றும் அவர் கூறினார்.

அத்துடன், வளைகுடாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த இலங்கை தொழிலாளர்கள் வேலை செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெறுகின்ற இவ்வாறான சிக்கல்களை விசாரிக்க பொலிஸ் புலனாய்வுப் பிரிவொன்றின் தேவை வலுவாக அதிகரித்துள்ளது என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு தெரிவித்துள்ளது.

அமைச்சரவையின் பணிப்புரைக்கு அமைய, விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு ஒன்றினை மீளகட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்குழு தெரிவித்துள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் என்பவற்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளது.

புதிய காப்பீட்டுத் திட்டம் கடந்த ஜனவரி 15ஆம் திகதி முதல் அமலுக்கு வந்திருந்தது. இத்திட்டத்தின் கீழ் இலங்கையர்களை பணியமர்த்தும் முதலாளியொருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துகொள்வதற்கு காப்புறுதிச் சான்றிதழை பெறவேண்டும் மற்றும் காப்புறுதிச் சான்றிதழை ஊழியர் வழங்க வேண்டும்.

இதன் அடிப்படையில் பணியின்போது ஊழியர் மரணமடைந்தாலோ அல்லது விபத்து காரணமாக நிரந்தரமாக ஊனமுற்றாலோ 15,000 அமெரிக்க டொலர்கள் காப்பீட்டு இழப்பீடாக வழங்கப்பட வேண்டும். 

மேலும், விபத்து காரணமாக பகுதியளவு ஊனமுற்றிருந்தால் 10,000 அமெரிக்க டொலர்கள் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் காப்பீட்டுத் திட்டம் அறுவை சிகிச்சைகள் மற்றும் கொவிட் 19 போன்ற தொற்றுநோய்களுக்கான மருத்துவக் காப்பீட்டையும் வழங்கும். அதேவேளை ஒரு தொழிலாளி பெண்ணாக இருக்கும் பட்சத்தில் செலவினங்களுக்காக தினசரி 10 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட வேண்டும்.

இலங்கை குடிமக்களை வேலைக்கு அனுப்புவதற்கு பாதுகாப்பான காப்புறுதி பொறிமுறைகளை பணியகம் தம்வசம் வைத்திருக்கவில்லை என்பதை கடந்த கால செய்திகளை பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிகின்றது.

அண்மைக் காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுச் செல்கின்ற  பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதுடன், பாலியல் தொழிலுக்கு சட்ட விரோதமான முறையில் விற்கப்படுகிறார்கள்.

பல்வேறு பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகியிருந்ததுடன், அவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை சந்தித்திருந்தமை தொடர்பான வழக்குகளை பார்க்க முடிந்தது. இந்த நிலைமைக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பெரியளவில் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வாறான பெரும் சிரமங்களில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு உதவி செய்வதற்கு மாற்றமாக, பணியகத்தில் பதிவு செய்யாத மற்றும் சட்ட விரோதமான வழிகளில் வெளிநாட்டு வேலைகளை தேடும்  புலம்பெயர்ந்த பெண்தொழிலாளர்கள் தூதரகங்களில் உள்ள தங்குமிடங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக இலங்கை தூதரகங்களின் தொழிலாளர் நலப் பிரிவுகளின் கீழ் சுரக்ஷா பாதுகாப்பான இல்லங்கள் நிறுவப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் பணி புரியும் பெண்களுக்குத் தேவையான பல்வேறு சேவைகளைப் பெற தூதரகங்களுக்கு வரும் பெண்களுக்குத் தேவையான நலன்புரி வசதிகளையும் குடியிருப்பு வசதிகளையும் தூதரகங்கள் செய்து கொடுக்கின்றன.

சட்டபூர்வமாக வேலைவாய்ப்புகளை பெற்று வெளிநாடு செல்லும் பெண்களுக்காக மாத்திரம் இந்த தங்குமிடங்கள் நிறுவப்பட்டுள்ள போதிலும், பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடு சென்ற பெண்களுக்கு தேவையான அனைத்து நலன்புரி வசதிகளையும் வழங்குவதற்கு கூட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயற்பட்டு வருகிறது.

பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடு செல்லும் பெண்கள் பாதுகாப்பான இல்லத்துக்கு வரும்போது பல்வேறு மோதல் சூழ்நிலைகளை உருவாக்குவதுடன், இதனால் மோதல்களை கட்டுப்படுத்த பொலிஸாரை வரவழைக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுள்ளன.

இவற்றில் சில சம்பவங்கள் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

எனவே, இந்த நிலைமைகளை கட்டுப்படுத்தும் வகையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி முதல் பணியகத்தில் பதிவு செய்யப்படாத மற்றும் பல்வேறு சட்ட விரோதமான வழிகளின் மூலம் வேலை தேடிச் செல்லும் பெண்களின் வருகையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்