(நெவில் அன்தனி)
விராத் கோஹ்லி குவித்த சாதனைமிகு சதத்துக்கு ஷுப்மான் கில் உரிய பதிலடி கொடுத்து அபார சதம் குவிக்க, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரை கடைசி ஐ.பி.எல். லீக் போட்டியில் 4 விக்கெட்களால் நடப்பு சம்பியன் குஜராத் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது.
இந்தப் போட்டி முடிவுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ப்ளே ஓவ் கனவு தகர்க்கப்பட்டதுடன், ஐந்து தடவைகள் சம்பியனான மும்பை இண்டியன்ஸ் கடைசி அணியாக ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
மும்பை இண்டியன்ஸ் முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டிருந்தது.
பெங்களூர் எம். சின்னசுவாமி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (21) இரவு நடைபெற்ற போட்டியில் விராத் கோஹ்லி தனது 7ஆவது சதத்தைக் குவித்து ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக சதங்கள் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். க்றிஸ் கேல் 6 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
விராத் கோஹ்லியும் ஷுப்மான் கில்லும் ஐ.பி.எல். வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் சதங்கள் குவித்த 2ஆவது மற்றும் 3ஆவது வீரர்கள் ஆனார்கள்.
ஷிக்கர் தவான் 2020இல் முதலாவது வீரராக அடுத்தடுத்த ஐ.பி.எல். போட்டிகளில் சதங்களை குவித்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் மும்பை சார்பாக கெமரன் க்றீன் குவித்த சதத்தைத் தொடர்ந்து பெங்களூர் சார்பாக கோஹ்லியும் குஜராத் சார்பாக கில்லும் சதங்களைக் குவித்தனர்.
விராத் கோஹ்லி 61 பந்துகளில் 13 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் சதம் குவிக்க, ஷுப்மான் கில் 52 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் சதம் விளாசினார்.
அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது.
பவ் டு ப்ளெசிஸுடன் 67 ஓட்டங்களை விராத் கோஹ்லி ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்தார். இதன் மூலம் ஆரம்ப விக்கெட்டில் இவர்கள் இருவரும் ஒரே பருவ காலத்தில் 14 போட்டிகளில் ஜோடியாக 936 ஓட்டங்களை மொத்தமாக பகிர்ந்துள்ளனர்.
விராத் கோஹ்லி இதற்கு முன்னர் 2016இல் ஏ.பி.டி வில்லியர்ஸுடனும் இதே மொத்த ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தார்.
பவ் டு ப்ளெசிஸ் இந்த வருடம் 14 போட்டிகளில் 730 ஓட்டங்களைப் பெற்று, அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவரை முந்துவதற்கு 680 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸின் ஷுப்மான் கில்லுக்கு 51 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.
ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க மறுபக்கத்தில் விராத் கோஹ்லி தனி ஒருவராக ஆற்றலை வெளிப்படுத்தி, 101 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
15ஆவது ஓவரில் பெங்களூர் 5ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 133 ஓட்டங்களாக இருந்தது.
இந்நிலையில், விராத் கோஹ்லியும் அனுஜ் ராவத்தும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் கௌரவமான மொத்த எண்ணிக்கையை பெற உதவினர்.
198 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து, 198 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி அணிகள் நிலையில் 20 புள்ளிகளுடன் முதலாம் இடத்தை தக்கவைத்துக்கொண்டது.
ஆரம்ப வீரர் ரிதிமான் சஹா குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ஷுப்மான் கில்லுடன் 2ஆவது விக்கெட்டில் இணைந்த விஜய் ஷன்கர் அரைச் சதம் குவித்ததுடன் 123 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் இலங்கை அணித் தலைவர் தசுன் (0), டேவிட் மில்லர் (6) ஆகியோர் ஆட்டம் இழந்தபோதிலும் ஷுப்மான் கில் தனது சதத்தைப் பூர்த்தி செய்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
எண்ணிக்கை சுருக்கம்
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 197 - 6 விக். (விராத் கோஹ்லி 101 ஆ.இ., பவ் டு ப்ளெசிஸ் 28, மைக்கல் ப்றேஸ்வெல் 26, அனுஜ் ராவத் 23 ஆ.இ., நூர் அஹ்மத் 39 - 2 விக்.)
குஜராத் டைட்டன்ஸ் 19.1 ஓவர்களில் 198 - 4 விக். (ஷுப்மான் கில் 104 ஆ.இ., விஜய் ஷன்கர் 53, ரிதிமான் சஹா 12, மொஹமத் சிராஜ் 32 - 2 விக்.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM