ஜனாதிபதியாக தனது கடைசி நாளில் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஒபாமா, எதிர்காலத்தில் இந்து சமயத்தவர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக வரலாம் என்று குறிப்பிட்டார்.

ட்ரம்ப்பின் வெற்றியையடுத்து, எதிர்காலத்தில் கறுப்பின ஜனாதிபதிகள் அமெரிக்காவில் உருவாக வாய்ப்பிருக்கிறதா என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஒபாமா இவ்வாறு தெரிவித்தார்.

“வெவ்வெறு சாதி, மத, மொழியைச் சார்ந்த உன்னதமானவர்கள் அமெரிக்காவின் தலைமையை அலங்கரிப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், இந்த வேறுபாடுகள் அனைத்தையும் தாண்டி அனைவருக்கும் சம உரிமைகளை அளிப்பதுதான் அமெரிக்காவின் பலமே! இதன் அடிப்படையில், எதிர்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக லத்தீனைச் சேர்ந்தவரோ, யூதரோ, இந்து சமயத்தவரோ வரக்கூடும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். 

“எதிர்காலத்தில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஜனாதிபதிகள் கூட்டம் ஒன்று அமெரிக்காவில் உருவாகலாம். அப்போது அவர்களை எந்தப் பெயரிட்டு அழைப்பது என்று ஒரு குழப்பம் கூடத் தோன்றலாம்” என்று நகைச்சுவையாகப் பேசினார் ஒபாமா.

பத்திரிகையாளர்களுடன் ட்ரம்ப்புக்கு சுமுக உறவு இல்லாத நிலையை ஒபாமா தனது பேச்சினூடே மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார்.

“பத்திரிகையாளர்களாகிய நீங்கள் இந்தக் கட்டிடத்தினுள் அனுமதிப்பதன் மூலம் எனது வேலையைத் திறம்படச் செய்ய முடிந்தது. நாங்கள் நேர்மையாக நடப்பதற்கு நீங்கள் உதவியாக இருந்தீர்கள். நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி நாம் கடுமையாக உழைப்பதற்கு நீங்கள் உதவி புரிந்திருக்கிறீர்கள்.

“என்னைப் பற்றி நீங்கள் எழுதிய செய்திகள் ஒவ்வொன்றும் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இதுதான் நம் இருவருக்கும் இடையே உள்ள உறவின் பலம். நீங்கள் எனது ஆதரவாளர்களாக இருக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. நீங்கள் என்னைச் சந்தேகப்படுபவராக இருக்கலாம். உங்கள் கேள்விகளால் என்னைத் திக்குமுக்காடச் செய்யலாம். மக்கள் எம்மைத் தெரிவுசெய்யும் அளவுக்கு நாம் தகுதியானவர்கள்தானா என்பதை அடிக்கடி நீங்கள் பரிசோதனை செய்யலாம். என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் அதைச் செய்திருக்கிறீர்கள்” என்றார் ஒபாமா.

ஓய்வுக்குப் பின் என்ன செய்யவிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “ஓரிரு புத்தகங்களை எழுத விரும்புகிறேன். புகழ் வெளிச்சத்தில் இருந்து சற்று ஒதுங்கியிருக்கப் போகிறேன். பேச்சைக் குறைத்து அமைதியாக இருக்க விரும்புகிறேன். இவற்றை விட முக்கியமாக என் மகள்களுடன் நேரத்தைச் செலவிடப் போகிறேன்” என்று கூறினார் ஒபாமா.