(எம். மனோசித்ரா)
"செத்துப்போன என் பிள்ளை திரும்ப வருமா? எனக்கே பாதுகாப்பு இல்லம்மா. எனக்கு அப்புறம் என் பேரப்புள்ளைங்க என்ன செய்யும்?" ஆண்பிள்ளைகள் மூவர் இருந்தும் அவர்களால் கைவிடப்பட்ட 78 வயதான மீனாட்சியின் மனக்குமுறல் இது.
மாத்தளை - உக்குவெல தோட்டத்தை சொந்தமாகக் கொண்ட மீனாட்சி கடந்த சில மாதங்களாக ஹட்டன் பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் யாசகம் பெற்று வருகிறார்.
தனிமையில் அமர்ந்திருக்கும்போது தனக்குத் தானே ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் மீனாட்சி, அவரை கடந்து செல்பவர்களிடம் 'ஐயா... அம்மா...' எனக் கூறி கையேந்தும் அந்த நொடி மனதுக்குள் ஒரு ரணத்தை ஏற்படுத்தியது.
ஏந்திய கைகள் வெறுமையாகவே கீழிறங்கிய போது அந்தக் கரங்களை நான் பற்றியவாறு அவரிடம் உரையாடத் தொடங்கினேன்.
"எனது சொந்த இடம் மாத்தளை - உக்குவெல கிராமம். எனக்கு மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தும், மூவருமே என்னை கைவிட்டுவிட்டனர்.
எனது மகள் வட்டவளையில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்தார். திடீரென ஏற்பட்ட சுகயீனத்தால் அவர் உயிரிழந்தார். அவரது 3 பிள்ளைகளையும் தற்போது நானே பராமரித்து வருகின்றேன்.
எனக்கு பார்வை தெளிவில்லை என்பதால் தொழில் எதையும் செய்ய முடியாது. அதனாலேயே யாசகம் பெற்று அந்த 3 பிள்ளைகளையும் பராமரித்து வருகிறேன்.
எனது மகளின் இறப்புக்குப் பின் மருமகன் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார். அவரை தேடித் திரியும் திறன் என்னுடம்பில் இல்லை.
நான் இருக்கும் வரை யாசகம் பெற்றேனும் எனது பேரப்பிள்ளைகளை பார்த்துக்கொள்வேன். எனக்குப் பின்னர் அவர்களுக்கு பாதுகாவலர்கள் எவரும் இல்லை.
எனக்கு உதவ வேண்டும் என நினைப்பவர்கள் எனது இறப்பின் பின் அந்த பிள்ளைகளின் பாதுகாப்பான எதிர்காலத்துக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்பதே எனது தேவையாக உள்ளது" என்று அவர் தன் வேதனையை என்னுடன் பகிர்ந்துகொண்டார்.
ஆசிய நாடுகள் இன்று அபிவிருத்தியில் உச்சம் தொட்டுக்கொண்டிருக்கின்றன. தமக்கென ஒரு காலத்தை வரையறுத்து இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பயணித்து வருகின்றன.
2048ஆம் ஆண்டுக்குள் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதையே தற்போதைய அரசாங்கம் அதன் இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக வறுமையில் உள்ள மக்களின் பொருளாதார மட்டத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நிதி நிவாரணங்களையும் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், வறுமை நிலையில் உள்ள மக்களுக்காகவே இவ்வாறான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதே தவிர, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்காக அல்ல.
இவர்கள் குறித்து சிந்திக்காமையின் காரணமாகவே இலங்கையில் இன்றும் யாசகர்கள் காணப்படுகின்றனர். இவ்வாறு யாசகம் பெறுபவர்களில் பெருமளவானோர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோராகவே உள்ளனர்.
இவர்களை தவிர கணவனால் கைவிடப்பட்ட அல்லது கணவனை இழந்த அல்லது எந்தவொரு உறவும் அற்ற பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானளவு காணப்படுகிறது.
இவ்வாறானவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் வீதியோரங்களில் யாசகம் பெறுவதையும், இரவில் வீதியிலேயே உறங்கிக்கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
இன்று வீடுகளில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு கூட கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இவ்வாறு வீதிகளில் உறங்கும் பெண்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்விகள் எழுகின்றன. அதேவேளை முதியோரின் பராமரிப்பும் இவ்வாறு கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.
நாட்டில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் யாசகர்கள் கைதுசெய்யப்படுவதுண்டு. எனவே, யாசகர்களுடன் தொடர்புடைய உத்தியோகபூர்வ அதிகாரம் பொலிஸாருக்கு காணப்படுகிறது. இது குறித்து கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் உயர் அதிகாரியொருவரை சந்தித்து வினவியபோது அவர் இவ்வாறு கூறுகிறார்.
"யாசகர்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைதுசெய்யப்படுவர். எனினும், கைதுசெய்து பின்னர் அவர்களை ஒப்படைப்பதற்கென எந்தவோர் இடமும் இல்லை. கைதுசெய்யப்படும் யாசகர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் அவர்களை ஒப்படைப்பதற்கான இடத்தை தேட வேண்டியுள்ளது.
கைதுசெய்யப்படுபவர்கள் தமது உண்மையான விபரங்களை பொலிஸாரிடம் தெரிவிப்பதில்லை. மாறாக, வறுமைக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவுமே யாகசம் பெறுவதாக குறிப்பிடுகின்றனர். எனவே, அவர்களை உறவினர்களிடமோ அல்லது பாதுகாவலர்களிடமோ ஒப்படைப்பதற்கான வாய்ப்புக்களும் இல்லை. இதனால் யாசகர்களை கைதுசெய்ய முடியாத நிலைமையும் தற்போது காணப்படுகிறது.
தற்போது தத்தமது பிள்ளைகளை கைகளில் வைத்துக்கொண்டு யாசகம் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறானவர்கள் குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் வழங்க முடியும்.
அதேபோன்று பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பெண் யாசகர்கள் அல்லது சிறுவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்தால் மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்க முடியும். அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறியத்தருமிடத்து பொலிஸாரினால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ரிதியகம பிரதேசத்தில் யாசகர்களை பராமரிக்கும் நிலையமொன்று காணப்பட்டது. எனினும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே அதில் இடப்பிரச்சினை, பராமரிப்பு பிரச்சினைகள் காணப்பட்டன. தற்போதும் அந்த சிக்கல்கள் உள்ளமையால் அந்நிலையமும் செயலிழந்தே காணப்படுகிறது. எனவே, யாசகர் குறிப்பாக பெண் யாசகர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஸ்திரமான வேலைத்திட்டங்கள் எவையும் இல்லை" என தெரிவித்தார்.
எவரேனும் ஒருவரிடமிருந்து ஏதேனுமோர் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் யாசகர்களுக்கு இந்த சமூகத்தில் தீர்வினை முன்வைக்க எவரும் முன்வருவதாக தோன்றவில்லை. அதனால்தான் தொழில் புரியும் இடத்தில், தகரம் வெட்டி கைகளில் நரம்புகள் பாதிக்கப்பட்ட 80 வயதான மட்டக்களப்பு, செங்கலடி, வேப்பவட்டுவான் பகுதியைச் சேர்ந்த இராமையா விஜயவதி அன்றாட உணவுக்காக யாசகம் பெறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
"1990ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக எனது கணவர் மற்றும் மகன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்துவிட்டனர். வாழ்வாதாரத்தை கொண்டுசெல்ல சமையல் வேலை முதல் கிடைத்த எல்லா தொழிலையும் செய்து வந்தேன்.
எனது மகள் கொழும்பில் வீட்டு வேலைக்காக சென்றுவிட்டார். அவருக்கு நான்கு பிள்ளைகள். கணவன் அவரை விட்டுப் பிரிந்துவிட்டார். இதனால் நான் தனிமையில் தள்ளப்பட்டுள்ளேன்.
தொழில் புரிந்த இடத்தில் தகரத்தைக் கொண்டு வேலி அமைத்துக்கொண்டிருந்தபோது, எனது கையில் தகரம் வெட்டியதால் மூன்று மாதங்களுக்கு மேல் கைகள் செயலிழந்து காணப்பட்டன. நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறினார்கள். இதனால் தொழிலுக்கு செல்ல முடியாமல் போனது. அதனால்தான் அன்றாட உணவுக்காக யாசகம் பெற்றுக்கொண்டிருக்கின்றேன்.
வாரத்தில் மூன்று நாட்கள் யாசகம் பெறச் செல்வேன். நாள் ஒன்றுக்கு 1500 ரூபா முதல் 2000 வரை கிடைக்கும். அந்த பணத்தில் வாழ்வாதாரத்தை கொண்டு செல்கிறேன். அரசாங்கத்தினால் மாதாந்தம் 250 ரூபா முதியோர் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். தற்போது பொருட்களின் விலையேற்றம் காரணமாக கிடைக்கும் பணம் போதாமல் உள்ளது. திருப்தியாக உணவு உண்ண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்" என்கிறார் விஜயவதி.
பராமரிப்பதற்கு இடமில்லை என்பதற்காகவோ, முறையான வேலைத்திட்டங்கள் இல்லை என்பதற்காகவோ இவர்களை அவ்வாறே கைவிட்டுவிட முடியாதல்லவா? யாசகர்களானாலும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். அந்த வகையில், பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பிரபல சமூக செயற்பாட்டாளரும், Search for Common Ground அமைப்பின் சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளருமான நளினி ரட்ணராஜா தெரிவிக்கையில்,
"அரசியல் யாப்பில் யாசகர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அடிப்படை சட்டங்கள் எவையும் இல்லை. அனைவரும் பொருளாதார, சமூக, குடியியல் உரிமையுடன் வாழ வேண்டும் என்றும், அனைவரும் சமன் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், யாசகர்கள் ஏன் உருவாகின்றனர் என்பது குறித்து சிந்திக்க வேண்டுமல்லவா?
எனவே யாசகர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் உள்ளனவா என்பது குறித்து சிந்திக்கும் முன்னர் என்ன பிரச்சினை என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் வறுமை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெண்கள் வறுமைக்குள்ளாகும் வீதம் சடுதியாக அதிகரித்துள்ளது. பெண்களின் முறைசாரா தொழில்கள் அங்கீகரிக்கப்படாமை இதற்கான பிரதான காரணியாகும். அதாவது அரச மற்றும் தனியார் துறைகளில் 70 சதவீதமானோர் ஆண்களாகவே காணப்படுகின்றனர். பெண்கள் 30 சதவீதம் மாத்திரமே காணப்படுகின்றனர்.
இவை தவிர எந்தவொரு துறைக்குள் சென்றாலும், அங்கு அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் காணப்படுகின்றன. எனவே, பெண்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். தேயிலை தொழிற்துறை, ஆடை தொழிற்சாலைகள், வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்குக்குச் செல்லல் உள்ளிட்ட முக்கிய தொழிற்துறைகளில் பெண்களின் பங்களிப்பே அதிகமாகவுள்ளது.
எவ்வாறிருப்பினும், அவற்றுக்கான முறையான அங்கீகாரம் வழங்கப்படாமையின் காரணமாகவே அதிகளவில் பெண்களை வீதிகளில் காணக்கூடியதாகவுள்ளது.
எனவே, இவர்கள் வீதிக்கு வருவதற்கான காரணம் என்னவென அறிந்து, அவர்களுக்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
2030இல் இலங்கையை வறுமையற்ற நாடாக மாற்றும் இலக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசாங்கம் இவ்வாறான பெண்களுக்கு சுயதொழிலுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆனால், அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ இது தொடர்பில் பாராளுமன்றத்தில் எந்த கருத்துக்களையும் முன்வைப்பதில்லை.
குழந்தைகளுடன் வீதிகளில் யாசகம் பெறும் பெண்களையும் அவதானித்திருக்கின்றோம். இதன் பின்னணியில் சில வியாபாராங்களும் உள்ளன. எனவே, அரசாங்கம் இவை தொடர்பில் ஆராய்ந்து உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, குழந்தைகளுடன் பெண்களை யாசகம் பெறச் செய்பவர்களை இனங்கண்டு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவர்களது பாதுகாப்புக்கான சட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
அனைவருக்கும் கௌரவத்துடன் வாழவேண்டிய உரிமை காணப்படுகிறது. அந்த உரிமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதேயளவு 50 சதவீத பொறுப்பு நாட்டு மக்களுக்கும் காணப்படுகிறது. யாசகம் பெறுபவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைவடையும். எனவே, அரசாங்கத்தின் மீது மாத்திரம் நூறு வீதம் குற்றஞ்சுமத்தி எம்மால் தப்ப முடியாது.
அனைவரது ஒத்துழைப்பாலும் யாசகர்கள் இல்லாத இலங்கை உருவாக வேண்டும். இவ்வாறானதொரு சூழல் ஏற்பட்டால் மாத்திரமே அது இலங்கை அபிவிருத்தியடைந்த நாடு என்பதற்கான அடையாளமாகும்.
யாகசம் பெறுபவர்கள் இருக்கும் வரை இலங்கை அபிவிருத்தியடையவில்லை என்பதையே காட்டுகிறது. பெருந்தெருக்களை அமைப்பதும், குளிரூட்டப்பட்ட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதும் மாத்திரம் அபிவிருத்தியின் அடையாளம் இல்லை. மக்கள் அனைவரும் தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு கௌரவமாக வாழும் சூழல் ஏற்பட்டால் மாத்திரமே அது அபிவிருத்தியடைந்த நாடாகும்" என்றார்.
கொழும்பு - ஜம்பட்டா வீதியில் பிறந்து தற்போது கொலன்னாவையில் வசிக்கும் 65 வயதான பாதிமா மேரி, இளம் வயதிலேயே கணவனை இழந்தவர் ஆவார்.
பெண்பிள்ளையொருவருக்கும், இரு ஆண் பிள்ளைகளுக்கும் தாயான இவர் இன்று கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தல வளாகத்தில் யாசகம் பெறுகிறார்.
பெண்பிள்ளையும், மூத்த ஆண் பிள்ளையும் விசேட தேவையுடையவர்களாக உள்ள நிலையில், உடல் நலக் குறைபாடுகள் எவையும் இன்றியிருந்த மூன்றாவது மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார். முதுமையில் எந்தத் தொழிலுக்கும் செல்ல முடியாதென கூறும் அவர், விசேட தேவையுடைய தன் பிள்ளைகளுக்காக யாசகம் பெறுவதாகக் கூறுகின்றார்.
இவ்வாறு முன்வைக்கப்படும் கருத்துக்கள் அங்கீகரிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றன. எனவே, இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதேனும் முயற்சிகளை முன்னெடுப்பதாயின் யாசகர்கள் குறித்த தரவுகள் அவசியமானவையாகும். ஆனால், 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் யாசகர்கள் தொடர்பில் எந்தவொரு தரவு சேகரிப்பும் இடம்பெறவில்லை என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் திருமதி.கே.எம்.டீ.எஸ்.டீ. கருணாரத்ன கூறுகின்றார்.
ஆதரவற்ற மக்கள் தொகை தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் தரவுகள் சேகரிக்கப்படுவதில்லை. 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிபரத் தகவல்கள் மாத்திரமே காணப்படுவதாக திருமதி. கருணாரத்ன குறிப்பிட்டார்.
2012இல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் குறித்து தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுப் பரவல் அலகின் புள்ளிவிபரவியல் அதிகாரி திரு.லசந்த கமகேவிடம் வினவியபோது, யாசகர்கள் தொடர்பாக தரவுகளை வழங்குவதற்கு போதுமான ஆதரங்கள் தம்வசம் இல்லை எனக் குறிப்பிட்டார்.
எனினும், வசிப்பிடமற்ற சனத்தொகை கணக்கெடுப்பில் 3,418 (2012இல்) வீடற்ற நபர்கள் காணப்படுவதாக பதிவாகியுள்ளது. இலங்கையில் தொகை மதிப்புக்காக உள்ளடக்கப்பட்டுள்ள 6 பிரதான தலைப்புக்களின் கீழான 50 உப தலைப்புக்களில் 'யாசகர்கள்' என்ற விடயம் எந்த சந்தர்ப்பத்திலும் உள்வாங்கப்படவில்லை.
யாசகம் பெறும் பெண்கள் மாத்திரமின்றி யாசகர்களை பெற்றோராகக் கொண்ட சிறுமிகளும், ஆண்துணையற்ற பெண் யாசகர்களும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகம். எனவே, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் மாத்திரமின்றி, சர்வதேச சமூகமும் அக்கறை செலுத்த வேண்டும் என்கிறார் சமூக செயற்பாட்டாளர் அஹ்ஸன் அப்தர்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில்,
"யாசகர்களைப் பார்த்து ஏனையோருக்கு ஏற்படும் உணர்வுகளை மூலதனமாகக் கொண்டு பணம் சம்பாதிப்பவர்களும் உள்ளனர். நகர்ப்புறப் பகுதிகளில் குறிப்பாக கண்டி, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் யாசகர்களைப் போன்று தம்மை தயார்ப்படுத்திக்கொண்டு அதை ஒரு தொழிலாக செய்பவர்களும் உள்ளனர். ஆனால், கிராம புறங்களில் உண்மையிலேயே வாழ வழியின்றி யாசகம் பெறுபவர்கள் இருக்கின்றனர். உதாரணமாக, கட்டுகஸ்தோட்டை பாலத்துக்கருகில் ஒரு குடும்பம் காணப்படுகிறது.
அந்தக் குடும்பத்தில் ஒரு பெண், அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் உள்ளனர். இவ்வாறானவர்களுக்கு அரசாங்கத்தின் ஊடாகவோ அல்லது பிரதேச செயலகங்கள் ஊடாகவோ உதவுவதற்கான வழிமுறைகள் இல்லை. காரணம், தேசிய அடையாள அட்டையோ, பிறப்புச் சான்றிதழோ அல்லது தாம் இலங்கை பிரஜைகள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு ஆவணமோ இவர்களிடம் இருக்காது. இவ்வாறான நிலைமையில் இவர்களுக்கு உதவ முடியாது.
யாசகர்களான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு அல்லது துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதற்கான வாய்ப்புக்கள் பல உள்ளன. இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு பொலிஸ் நிலையங்களின் ஊடாகவோ வேறு வழிகளிலோ நியாயம் கிடைக்கப் போவதில்லை. காரணம், பாதிக்கப்பட்ட போதிலும், நியாயத்தை பெற்றுக்கொள்வதற்கு எவ்வாறான நீதிப் பொறிமுறைகளை கையாள்வது என்பதும் இவர்களுக்குத் தெரியாது.
திரைப்படப் பாணியில் யாசகம் ஒரு தொழிலாக்கப்பட்டுள்ளமையே இவ்வாறு உண்மையில் பாதிக்கப்படுபவர்களுக்கு கூட நியாயம் கிடைக்காமல் போனமைக்கான காரணமாகும்.
சிறுவர்களை துன்புறுத்தி யாசகம் பெறச் செய்தல், அதற்காக பயிற்சியை வழங்குதல் என்பன கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போலி ஆவணங்களை தயார்செய்து வீடுகளுக்கு சென்று பணம் சேகரிக்கும் முறைமையும் காணப்படுகிறது.
யாசகம் பெறும் பெற்றோர் தமது பிள்ளைகளையும் அதற்கு பழக்கப்படுத்துகின்றனர். அவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு எவ்வித முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதில்லை. எனவே, இவ்வாறானவர்களுக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதே போன்று சிறுமிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் யுனிசெப், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்கள் கூட இவ்விடயத்தில் ஏன் பாராமுகமாக உள்ளன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது" என்றார்.
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தலைநகர் கொழும்பில் பொது இடங்களில் அல்லது போக்குவரத்துக்களில் யாசகம் பெறுவதற்கு தடை விதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அவ்வாறான எந்த சட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அப்போதைய (2017) பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, 'கொழும்பு நகர எல்லைக்குள் மாத்திரம் சுமார் 600 யாசகர்கள் காணப்படுகின்றனர் என்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அரசாங்கம் நாட்டின் தென்பகுதியில் யாசகர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை அமைத்துள்ளது. யாசகத்துக்கு தடை விதிக்கப்பட்டாலும், ஆதரவற்ற யாசகர்கள் கருணையுடன் கையாளப்படுவர்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
'எவ்வாறாயினும், இதனை தொழிலாகச் செய்பவர்கள் உடனடியாக வேறு வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ள வேண்டும் அல்லது மாநகர சபை கட்டளைச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளை பயன்படுத்தி அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்போம். இதேவேளை யாசகம் பெறும் சிறுவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதற்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் சம்பிக ரணவக்க தெரிவித்திருந்தார். இவற்றிலும் எவையுமே இன்றளவிலும் நடைமுறையில் சாத்தியமாக்கப்பட்டதாக தெரியவில்லை.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிஸ்லியா பூட்டோ பெண் யாசகர்களின் பாதுகாப்பு தொடர்பில் தெரிவிக்கையில்,
"கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்கள், பொருளாதார நெருக்கடிகளால் வறுமைக் கோட்டில் காணப்பட்டவர்கள் குறிப்பாக பெண்கள், அதனை விடவும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்குள் பெண் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண் யாசகர்கள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட கொடுமைகளுக்கு உள்ளாவதோடு மாத்திரமின்றி, பாதுகாப்பான இருப்பிடம் அற்றவர்களாக காணப்படுகின்றமையால் அவர்களது பணமும் சூரையாடப்படுகிறது.
பெண் யாசகர்களுக்கான நிரந்தரமான பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் நிறுவன ரீதியாகவோ அல்லது அரசாங்க மட்டத்திலோ ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவர்கள் குறித்து சிந்தித்து இதுவரையில் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். பெண் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றமை சிறந்ததல்ல. எனவே, அவர்களது பாதுகாப்புக்கான நிலையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்" என்றார்.
இலங்கையில் கொழும்பு, பத்தரமுல்லையில் சமூக சேவைகள் திணைக்களம் அமைந்துள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட பெண் யாசகர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டிய அரச நிறுவனமாக இந்த திணைக்களம் காணப்படுகிறது. அது மாத்திரமின்றி, இது சமூக வலுவூட்டல்கள் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முகாமைத்துவத்துக்கு உட்பட்டதாகும்.
எனவே, யாசகர்கள் தொடர்புடைய பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவதற்கும், குறிப்பாக, பெண் யாசகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சமூக சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய்மார் இருப்பார்களாயின், அவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. மாறாக, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதேவேளை ஆண்துணையற்ற இளம் தாயாக உள்ள குழந்தைகளைக் கொண்ட பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கான வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
எனவே, சமூக வலுவூட்டல்கள் அமைச்சராக நலன்புரி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறான பெண்களுக்கு சுயதொழிலுக்கான வாய்ப்புக்கள் அல்லது தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று பராமரிப்போர் இன்றி யாசகம் பெறும் சிறார்கள் குறிப்பாக சிறுமிகள் குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். இவ்வாறு அநாதரவானவர்களை இனங்கண்டு அவர்களை பாதுகாப்பாக இடங்களில் தங்க வைப்பதோடு, அவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு கல்வியை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM