கோஹ்லியின் விக்கெட் அவுஸ்திரேலியர்களுக்கு பரிசு விக்கெட்டாக அமையும் - ரிக்கி பொன்டிங்

Published By: Nanthini

20 May, 2023 | 10:00 AM
image

(நெவில் அன்தனி) 

துடுப்பாட்டத்தில் விராத் கோஹ்லி தனது முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தும் நிலைக்கு திரும்பியுள்ளதாக உணர்கிறார் என்பதை அறிய முடிகிறது என அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவரது விக்கெட்டே அவுஸ்திரேலியர்களினால் வீழ்த்தப்படவேண்டிய மிக முக்கிய பரிசு விக்கெட்டாக அமையவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

புது டில்லியில் வெள்ளிக்கிழமை (19) காலை நடைபெற்ற விசேட வைபவம் ஒன்றின்போது டெஸ்ட் வெற்றி கோலை (Test Mace) ரிக்கி பொன்டிங்  திரைநீக்கம் செய்துவைத்தார். அதனைத் தொடர்ந்து பேசியபோதே ரிக்கி பொன்டிங் இந்த விடயத்தை வெளியிட்டார்.

இந்த வருட ஐ.பி.எல். போட்டிகளின் ஆரம்பத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிய விராத் கோஹ்லி மிகவும் அவசியமான வேளையில் சதம் குவித்து துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்த தொடங்கியுள்ளார்.

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு டெஸ்ட் வெற்றி கோல் வழங்கப்படவுள்ளது.

வெற்றி கோலை திரை நீக்கம் செய்த பின்னர் ஐ.சி.சி.யினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உள்ளூர் பயிற்சியக பிள்ளைகள் மற்றும் ஊடகங்களுடன் ரிக்கி பொன்டிங் உரையாடினார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சனிக்கிழமை (20) நடைபெறவுள்ள டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியின் கடைசிப் போட்டிக்குப் பின்னர் ரிக்கி பொன்டிங் சொந்த நாட்டுக்கு திரும்பவுள்ளார்.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வர்ணனையாளராக செயற்படவுள்ளதால் இந்தியாவில் தங்கியிருக்க முடியாது என அவர் கூறினார். 

இரண்டு பலம் வாய்ந்த அணிகள் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் மோதவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியை, குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதி சிறந்தவர்களின் ஆற்றல்களை நேரில் பார்க்க வேண்டும் என்பதில் 48 வயதான ரிக்கி பொன்டிங் மிகவும் ஆர்வமாக உள்ளார்.

அவர்களில் ஒருவர் இந்தியாவின் 4ஆம் இலக்க வீரர் கோஹ்லி ஆவார். 34 வயதான அவர் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த தொடங்கியதிலிருந்து நிலைத்து நிற்கக்கூடியவராகிவிட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக வியாழக்கிழமை (18) அவர் தனது ஆறாவது ஐ.பி.எல். சதத்தை அடித்ததோடு மட்டுமல்லாமல், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இலகுவான வெற்றியையும் ஈட்டிக்கொடுத்தார். இது அவுஸ்திரேலியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என ரிக்கி பொன்டிங் கருதுகிறார்.

"ஒரு மாதத்துக்கு முன்னர் பெங்களூரில் எமது இரண்டு அணிகளும் மோதிக்கொண்டபோது கோஹ்லியுடன் உரையாடினேன். அவரது கிரிக்கெட் வாழ்க்கை, சொந்த வாழ்க்கை உட்பட பல விடயங்களை கேட்டறிந்தேன். அவர் தனது முழுமையான சிறந்த நிலைக்குத் திரும்பியதைப் போல உண்மையில் உணர்வதாக என்னிடம்  நேற்று கூறினார்.

நேற்று (18) இரவு அவரது ஆற்றலை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் அசத்தி வருகிறார். எனவே, விராத் கோஹ்லியின் விக்கெட் அவுஸ்திரேலியர்களால் பெரிதும் விரும்பப்படும் பரிசு விக்கெட்டாக அமையும்" என ரிக்கி பொன்டிங் கூறினார்.

உலக டெஸ்ட் சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சில முக்கிய வீரர்கள் இடம்பெறமாட்டார்கள் என்பது சகலரும் அறிந்த விடயம். கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷாப் பன்ட் சில காலமாக கிரிக்கெட் அரங்கிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். ஐ.பி.எல். போட்டியில் காயமடைந்த கே.எல். ராகுல் டெஸ்ட் இறுதிப் போட்டிக்கான இந்திய குழாத்திலிருந்து நீக்கப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா முதுகுப் பிரச்சினையில் இருந்து மறுவாழ்வைத் தொடர்கிறார்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பேசிய ரிக்கி பொன்டிங், "இறுதிப் போட்டி இந்தியாவின் முன்வரிசை ஆட்டக்காரர்களுக்கும் அவுஸ்திரேலியாவின் வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் இடையிலானதாக அமையும்" என்றார்.

"பொதுவாக, இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர்களுக்கும் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர்களுக்கும் இடையிலான போட்டியை பற்றி நாங்கள் சிந்திக்கிறோம். ஆனால், ஓவல் ஆடுகளத்தில் அது சாத்தியப்படுமா என்று கேட்கத் தோன்றுகிறது. பொதுவாக நான் ஓவலில் விளையாடிய ஆடுகளங்கள் ஆரம்பத்தில் துடுப்பாட்டத்துக்கு சாதகமானவையாக இருந்தன. 

டெஸ்ட் போட்டி தொடரும்போது சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சிறிது வாய்ப்பு ஏற்படுகிறது. நான்காம் நாள், ஐந்தாம் நாள் அல்லது ஆறாவது நாள் கூட, இந்த ஆடுகளம் எவ்வாறு அமையப்போகிறது என்பதை நான் பார்க்க விரும்புகிறேன்."

"இந்தியாவின் WTC குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலானவர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து பேசப்படுகிறது. ஆனால், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்கு பேரே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள். அது அவர்களது டெஸ்ட் போட்டிக்கான தயாரிப்புகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி பேசப்படுகிறது. இது டெஸ்ட் இறுதிப் போட்டியின்போது தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையக்கூடும்" என பொன்டிங் கருதுகிறார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய வீரர்கள் ஐ.பி.எல். பற்றி மாத்திரம் சிந்திக்காமல் டெஸ்ட் போட்டியில் எப்படி விளையாட வேண்டும், எப்படி பந்து வீச வேண்டும், அதற்கு எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மானுஸ் லபுஸ்சேன் ஆகிய இருவரும் இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடி வருவதால் அவர்கள் அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்வார்கள். மைக்கல் நெஸர், சீன் அபோட் ஆகியோர் அங்கு பந்து வீசி வருவதால் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களில் எவருக்கும் காயம் ஏற்பட்டால் அவர்கள் அணியில் இணையத் தயாராகவே இருக்கின்றனர். எனவே, இறுதி டெஸ்ட் போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா இரண்டாவது தடவையாக விளையாடுவதுடன் அவுஸ்திரேலியா முதல் தடவையாக பங்குபற்றுகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் சௌத்ஹாம்ப்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்திருந்தது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதி லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் ஆரம்பமாகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11