எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பார்கள். அந்த சிரசில் பிரதானமானவை காது, மூக்கு, தொண்டை. பல்வேறு காரணங்களால் இந்த மூன்று உறுப்பும் பாதிக்கப்படுகின்றன.
இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்பதால் இதற்கான வைத்தியமும் அதற்கு ஏற்பவே இருக்கும். காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பொதுவான சிக்கல்கள் என்னென்ன? அதை எப்படிச் சரியாக்குவது என்பதை இந்தப் பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.
சளி: வைரஸ், பக்டீரியா மற்றும் சில உறுத்தல் ஏற்படுத்தும் பொருட்களால் மூக்கின் உட்பகுதியில் உள்ள மெல்லிய சவ்வில் வீக்கம் மற்றும் எரிவு (inflammation) ஏற்பட்டு, நீர் சுரக்கும். இதனுடன் தொண்டையில் சளி மற்றும் மூக்கடைப்பு ஏற்படும். கண், தொண்டை மற்றும் காதையும் பாதித்து அங்கேயும் அதிகநீர் சுரக்கச் செய்யும். தவிர, சிலருக்கு மூச்சிரைப்பு, வாசனை தெரியாமை, காதடைப்பு, சைனஸ் பிரச்னை ஏற்படும்.
வைரஸ்களினால் ஏற்படும் சளி தானாகவே ஒரு வாரத்துக்குள் சரியாகிவிடும். ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்குமானால், மருத்துவரை அணுகவும். ஒவ்வாமையால் சளி பிடித்தால், கண், மூக்கு, தொண்டைப் பகுதிகளில் அரிப்பு ஏற்படும். இவை பொதுவாக தூசி, மகரந்தத் துகள்களால் ஏற்படும்.
மகரந்தத்தைத் தவிர வேறு எந்த பொருட்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்று கண்டறியவும். இதைப் பல வகையான சோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். தேர்ந்த மருத்துவரிடம் அத்தகைய சோதனைகளைச் செய்யவும். ஏனெனில், இச்சோதனையே ஆபத்தாகலாம். இவற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்று பார்க்கலாம்.
பொதுவாக, பூ பூக்கும் மாதங்களில் மகரந்தங்களினால் இது ஏற்படும். இது அதிகமாக இருக்கும் காலை மற்றும் மாலை வேளைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம். வெளியே செல்வதனால் மூடிய வண்டிகளில் செல்லவும். வீட்டிலும் அலுவலகத்திலும் இந்த மகரந்தத் துகள்கள் வராத வண்ணம் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவைத்திருக்கவும். வெளியே சென்றுவிட்டு வந்த பிறகு, குளித்து வேறு ஆடைகளுக்கு மாறவும். ஏனெனில், மகரந்தம், தூசி போன்றவை ஆடை, உடல், முடி இவற்றில் படிந்து உபாதை அளிக்கக்கூடும்.
வீட்டையும் நன்கு கூட்டி, துடைத்து, சுத்தமாக வைத்துக்கொள்ளவும். தூங்கும் மெத்தை, தலையணை, திரைச்சீலை, சோபா, கம்பளம் போன்றவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
மூக்கடைப்பு: சுவாசம், மூக்கின் ஒரு துவாரம் வழியாகவோ அல்லது இரண்டு துவாரங்கள் வழியாகவோ செல்ல முடியாமல் தடை ஏற்படுவதை மூக்கடைப்பு என்கிறோம்.
காரணங்கள்
1.மூக்குச்சவ்வு வீங்குதல்
2.மூக்கின் சில்லு தள்ளியிருத்தல்
3.மூக்கின் வால்வுகள் சுருங்கிவிடுதல்
4.மூக்கு, தொண்டைப்பகுதியில் அடைப்பு ஏற்படுதல்.
இது அசௌகரியமாக, குறிப்பாக மூச்சுப் பயிற்சி செய்பவர்களுக்கு பெரும் தடையாக இருக்கும். தொடர்ந்து இருந்து வந்தால், காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகவும். மருந்துக்கடைகளில் கிடைக்கும் சொட்டுமருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தினால் பெரும் பாதிப்பு ஏற்படலாம்.
மூக்கிலிருந்து ரத்தம் வருதல்
இது பலருக்கு ஏற்படும். சிறிது நேரத்தில் தானாகவே சரியாகிவிடும். ரத்தம் வரும்பொழுது மூக்கின் கீழ்ப் பாகத்தை அழுத்திப் பிடித்தால், 15 நிமிடங்களுக்குள் நின்றுவிடும். இல்லையென்றால், மருத்துவரை உடனே அணுகவும்.
தொண்டை கட்டுதல்: தொண்டையில் வலி, வறட்சி போன்ற அசௌகரியங்கள் ஏற்படுவதை, தொண்டை கட்டுதல் என்கிறோம். 70 சதவிகித நேரங்களில் இது வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு வரும் தொண்டை வலி பொதுவாக சளி மற்றும் இருமலுடன் இருக்கும். பெரியவர்களுக்கு தொண்டை வலி பொதுவாக பனிக்காலங்களில் ஏற்படும். இதனுடன் சளி, இருமல், தும்மல், குரல் கரகரத்தல், வறட்சி போன்றவையும் ஏற்படும். இது சிறிது நாட்களிலேயே சரியாகிவிடும். இருப்பினும் அசௌகரியத்தைச் சரிசெய்ய கீழ்கண்டவற்றைச் செய்யலாம். நிறைய ஓய்வு எடுக்க வேண்டும்.
நிறைய நீராகாரங்கள் அருந்த வேண்டும்.
வலி மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனை பேரில் உட்கொள்ளலாம்.
உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம்.
தேன் மற்றும் எலுமிச்சைச் சாறுகள் உதவும்.
அறிகுறிகள் தொடர்ந்து இருந்தாலோ, தொண்டைவலி அடிக்கடி ஏற்பட்டாலோ, மருத்துவரை அணுகவும்.
தொண்டைக் கரகரப்பு: சளி பிடித்தாலோ, ஏதேனும் வளர்ச்சியோ, கட்டியோ ஏற்பட்டாலோ, வயிற்றில் சுரக்கும் அமிலத்தாலோ, குரல்வளையின் அமைப்பில் மாறுபாடுகள் ஏற்பட்டு, குரலில் மாற்றம் தோன்றுகிறது. இந்தக் குரல் மாற்றத்தை தொண்டைக் கரகரப்பு என்கிறோம். இதனால் பேசுவதற்குச் சிரமமாக இருக்கும். நம்முடைய குரல்வளை சரிவர இயங்காததால்தான் இது ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவை பொதுவாக சில நாட்களிலேயே சரியாகிவிடும்.
இருப்பினும் நம்முடைய குரலுக்கு ஓய்வு கொடுத்தல், நிறைய நீர்ப்பானங்கள் சாப்பிடுதல், ஓய்வு எடுத்தல், வயிற்று அமிலப் பிரச்னை இருந்தால் அதைச் சரிசெய்தல், மது மற்றும் புகைபிடித்தலைத் தவிர்த்தல் போன்றவை மூலம் விரைவாக நிவாரணம் அடையலாம்.
நான்கு வாரங்களுக்கு மேல் தொடர் கரகரப்பு: அடிக்கடி தொண்டைக் கரகரப்பு மற்றும் வைரஸ் நோய் அல்லது ப்ளூ அறிகுறி தோன்றுவது.இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர் கரகரப்பு மற்றும் விழுங்குவதற்கு சிரமமாய் இருத்தல். குரலில் அதிக மாற்றம் ஏற்பட்டு சரியாகாமல் இருத்தல்.
வாய் நாற்றம்: இது நம்மில் பலருக்கும் ஏற்படுகிறது. மற்றவர்கள் சுட்டிக்காண்பிக்கும்போதுதான் இது தெரிகிறது. உணவுத் துகள்கள் பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்டு இருப்பது பொதுவான காரணம்.தவிர, வாய் உலர்ந்துபோவது, புகை பிடித்தல், பூண்டு போன்ற உணவுகள், மது அருந்துதல், சைனஸ், தொண்டை அல்லது டான்சில்களில் தொற்று ஏற்படுதல், நாக்கில் கிருமிகள் சேர்வது, மாவுச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்தல், வயிற்றில் ஏற்படும் உபாதைகள் போன்றவற்றாலும் வாய் நாற்றம் ஏற்படும்.
இதைத் தவிர்க்க, வாய்ப்பகுதியைச் சுத்தமாகப் பராமரித்தல், சரியான முறையில் பல் துலக்குதல், பல்லிடுக்குகளைச் சுத்தம்செய்தல், நாக்கு சுத்திகரிப்பானைக்கொண்டு நாக்கைச் சுத்தம் செய்தல், கிருமிநாசினியைக் கொண்டு வாயைக் கழுவுதல், வாய் உலரா வண்ணம் அடிக்கடி நீர் பருகுதல், புகை மற்றும் மதுப்பழக்கத்தை விடுதல் ஆகியவை உதவும். வாய், மூக்கு, தொண்டை, சைனஸ், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகிச் சரிசெய்து கொள்ளவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM