க்ளாசெனின் சதத்தை விஞ்சியது கோஹ்லியின் சதம் ; ஹைதராபாத்தை வென்றது பெங்களூர்!

Published By: Nanthini

19 May, 2023 | 10:04 AM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்க வீரர் ஹெய்ன்ரிச் க்ளாசென் தனது முதலாவது ஐ.பி.எல். சதத்தைக் குவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை பலமான நிலையில் இட்டிருந்தபோதிலும், விராத் கோஹ்லி குவித்த சதம் அதனை விஞ்சியதுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

அஹமதாபாத் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றிபெற்றதன் பலனாக ப்ளே ஓவ் சுற்றுக்கு செல்வதற்கான அதன் நம்பிக்கை சற்று அதிகரித்துள்ளது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 4ஆம் இடத்துக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் முன்னேறியுள்ளது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இண்டியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தலா 14 புள்ளிகளை பெற்றுள்ளபோதிலும், சிறந்த நிகர ஓட்ட வேக அடிப்படையில் பெங்களூர் 4ஆம் இடத்தில் இருக்கிறது.

மேலும், ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் இரண்டு அணிகள் சார்பாக சதங்கள் குவிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

ஹெய்ன்றிச் க்ளாசென் குவித்த சதத்தின் உதவியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 187 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 19.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

விராத் கோஹ்லியும் அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸும் 172 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்து பெங்களூரின் வெற்றியை இலகுபடுத்தியிருந்தனர். இந்த வருட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டமாகவும் அது அமைந்தது.

தனது இன்னிங்ஸை 2 தொடர்ச்சியான பவுண்டறிகளுடன் ஆரம்பித்த கோஹ்லி, 62 பந்துகளில் 12 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 100 ஓட்டங்களை பெற்றார். ஆனால், அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோஹ்லி குவித்த 6ஆவது சதம் இதுவாகும். இதன் மூலம் க்றிஸ் கேல் குவித்த அதிகூடிய 6 சதங்கள் என்ற ஐ.பி.எல். சாதனையை கோஹ்லி சமப்படுத்தியுள்ளார்.

கிரிக்கெட் அரங்கில் 'மன்னன் கோஹ்லி' என வர்ணிக்கப்படுகின்ற விராத் கோஹ்லி   அண்மைக்காலமாக அவரது துடுப்பாட்டம் சரிவு கண்டிருந்தது. ஆனால், இந்த வருட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்துவருகிறார்.

சதம் குவித்த அவர் தனது துடுப்பை உயர்த்தி, முழந்தால் படியிட்டு தனது மகிழ்ச்சியை கொண்டாடினார்.

அவரது சக ஆரம்ப வீரரும் அணித் தலைவருமான பவ் டு ப்ளெசிஸ் 47 பந்துகளில் 71 ஓட்டங்களைக் குவித்தார்.

இதுவரை 13 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள பவ் டு ப்ளெசிஸ் 702 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் முன்னிலையில் இருக்கிறார்.

விராத் கோஹ்லியும் பவ் டு ப்ளெசிஸும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்த பின்னர், க்ளென் மெக்ஸ்வெலும் மைக்கல் ப்றேஸ்வெலும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 10 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

முன்னதாக இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைக் குவித்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதல் இரண்டு விக்கெட்களை 28 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது.

ஆனால், 18 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராமுடன் 3ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களையும் ஹெரி புறூக்குடன் 4ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களையும் க்ளாசென் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார்.

51 பந்துகளை எதிர்கொண்ட க்ளாசென் 8 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 104 ஓட்டங்களைப் பெற்றார். ஹெரி புறூக் 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மைக்கல் ப்றேஸ்வெல் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று...

2024-02-23 21:56:41
news-image

பென்ஸ் - வெஸ்லி சமஅளவில் மோதல்...

2024-02-23 21:20:49
news-image

ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர்...

2024-02-23 17:57:46
news-image

றோயல் - தோமாவின் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 22:05:50
news-image

றோயல் - தோமியன் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 00:42:42
news-image

நடுவருடன் மோதல் - வனிந்து போட்டி...

2024-02-22 15:09:19
news-image

விக்ரம் - ராஜன் - கங்கு...

2024-02-22 14:49:14
news-image

மூன்றாவது ரி20 போட்டியில் நோபோல் சர்ச்சை...

2024-02-22 13:51:18
news-image

இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல்...

2024-02-22 00:28:59
news-image

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான நான்காவது...

2024-02-21 16:12:47
news-image

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

2024-02-21 14:45:53
news-image

வரலாற்றில் முதல் தடவையாக மெராயா பாடசாலையில்...

2024-02-21 11:02:27