ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வரும் 20 ஆம் திகதி திரைப்படக் காட்சிகள் இரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. தமிழர்களின் மரபுசார்ந்த விளையாட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இலட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் என பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டத்தில் ஈடுபடுள்ள இளைஞர்களுக்கு தமிழகமெங்கும் பொதுமக்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில், பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், ரஜினி, விஜய், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி, சிம்பு, சிவகாரத்திகேயன், தனுஷ், இயக்குநர் அமீர், விக்ரமன், நடிகர் மன்சூர் அலிகான் பாரதிராஜா, தங்கர்பச்சான் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

மேலும், நடிகர்சங்கம் சார்பில் வரும் 20 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 20 ஆம் திகதி திரைபடக் காட்சிகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.