அரசியல் தீர்வு காணப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில் பிரிந்து நிற்பது பாரதூரமான பாதகங்களை ஏற்படுத்தும். அரசியல் போட்டிகளில் ஈடுபடுவதற்கு இதுநேரமல்ல.தேசிய இனப்பிரச்சினைக்கான நீடித்து நிலைத்திருக்ககூடிய அரசியல் தீர்வு பெறுவதற்கான புனிதமான கடமையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அவசரமான அரசியல் தீர்வொன்று எட்டப்படுவது அவசியமாகும். அவ்வாறான நிலையிலேயே 2016ஆம் ஆண்டுக்குள் அரசியல் தீர்வு காணப்படும் என்ற கருத்தை நாம் முன்வைத்துள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழர் தரப்பிலும், தென்னிலங்கை அரசியல் தளத்திலும், பிராந்திய மற்றும் சர்வதேசத்தில் நிகழ்ந்துள்ள அண்மைக்கால அரசியல் ரீதியான நிலைமைகளின் பிரகாரம் மலரும் புதிய ஆண்டில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக காத்திருக்கும் அரசியல் தீர்வு கிடைப்பதற்கான சாதகமான நிலைமைகள் இருக்கின்றனவா என்பது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலம் முதல் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கான கருமங்களை முன்னெடுத்தே வந்திருக்கின்றது. அதன்பிரகாரம் 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அப்போது ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் ஆக்கபூர்வமாக செயற்படாமையின் நிமித்தம் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி மைத்திபரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.அந்தக்காலம் முதல் அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும் என்பது தொடர்பாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

பாராளுமன்றத்தேர்தலின்போது 2016ஆம் ஆண்டுக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படவேண்டுமென்ற கருத்தை முன்வைத்திருந்தோம். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் புதிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அந்த சூழலில் அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்படவேண்டும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னரான புதிய சூழலில் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அவசரமாக அடையப்படவேண்டும். அவ்வாறில்லாது தாமதமான நிலைமைகள் காணப்படுமாயின் தீர்வு விடயம் எட்டாக்கனியாகிவிடும். அதனடிப்படையிலேயே அவ்வாறான கருத்தை முன்வைத்திருந்தோம்.

2016ஆம் ஆண்டு புதிய அரசியல் சாசனத்திற்கான பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதில் முக்கியமான மூன்று விடயங்கள் காணப்படுகின்றன. நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கம், தேர்தல்கள் முறைமையில் திருத்தம், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆகியன காணப்படுகின்றன. ஆகவே அரசியல் தீர்வு விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ் மக்களுக்கு எவ்வாறான அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் கூறிவந்திருக்கின்றோம். பாராளுமன்ற தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத்தேர்தல் அனைத்திலும் மக்கள் அதனை அங்கீகரித்திருக்கின்றார்கள். எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.

அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னதாக தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக்கட்சி ஆகியனவும் தமிழர்களுக்கான தீர்வு எவ்விதமாக அமையவேண்டுமென்பதை கூறிவந்துள்ளன.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளின் அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதற்கான ஒழுங்குகள், செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் அனைவரினதும் கருத்துக்களை வெளிப்படுத்த முடியும். மக்கள் கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்துவதற்கான சூழல் காணப்படுகின்றது. அவர்களின் கருத்துக்கள் தொடர்பாக ஆராயவுள்ளோம்.

நீண்டகாலமாக எமது மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கான விமோசனமாக அரசியல் ரீதியாக நியாயமான நீடித்து நிலைத்திருக்ககூடிய அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்ககூடிய தீர்வொன்று எட்டப்படவேண்டும். அதற்காக அரசியல் ரீதியாக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும். உழைக்க வேண்டும். பிரிந்திருப்பது பாதகமானதாகும். அரசியல் போட்டிகளில் ஈடுபடுவதற்கு இது தக்கதருணமல்ல. அரசில் தீர்வை எட்டுவதற்கான புனித கடமையில் அனைவரும் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என்றார்.