(நா.தனுஜா)
இலங்கைவாழ் தமிழ்மக்கள் கடந்தகால அரசாங்கங்களுடன் சுமார் 70 வருடங்களுக்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். எனவே இப்போது தமிழ்மக்களின் தேவை என்ன என்பது குறித்து அரசாங்கம் அறிந்திருக்கவேண்டும்.
என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், வட, கிழக்கு மாகாணங்களில் சர்வசன வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம் தமிழ்பேசும் மக்களின் மனதிலுள்ள உண்மையான எண்ணங்களை வெளிக்கொணரமுடியும் என்பதுடன், அவை பெரும்பான்மையின மக்களுக்கு உவப்பற்றதாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்புக்கும் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, மாகாணசபைகளைத் தற்காலிகமாக நிர்வகிக்கும் வகையிலான இடைக்கால நிர்வாகமுறைமை தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.
'இலங்கைவாழ் தமிழ்மக்கள் கடந்தகால அரசாங்கங்களுடன் சுமார் 70 வருடங்களுக்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். எனவே இப்போது தமிழ்மக்களின் தேவை என்ன என்பது குறித்து அரசாங்கம் அறிந்திருக்கவேண்டும்.
இந்நாட்டில் சுமார் 3000 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் தமிழ்மொழியைத் தொடர்ச்சியாகப் பேசுபவர்கள் என்ற ரீதியில் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்கள் சர்வதேச பிரகடனங்களின் சரத்துக்களுக்கு அமைவாகத் தாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை நன்கறிவர்.
இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்துத் தமிழ் கட்சிகளும் அரசியலமைப்பின் ஊடாக சமஷ்டி முறையிலான பரவலாக்கத்தையே வலியுறுத்திவந்திருக்கின்றன. இதுகுறித்து வட, கிழக்கு மாகாணங்களில் சர்வசன வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம் தமிழ்பேசும் மக்களின் மனதிலுள்ள உண்மையான எண்ணங்களை வெளிக்கொணரமுடியும் என்பதுடன், அவை பெரும்பான்மையின மக்களுக்கு உவப்பற்றதாக இருக்கக்கூடும்.
அரசாங்கம், அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் எமது மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள், மீறல்கள் என்பன அரசுக்கு எதிராகத் திரும்பக்கூடும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் வட, கிழக்கு மாகாணங்களுக்கான மாகாணசபைத்தேர்தல்கள் நடத்தப்படுவதுடன் அரசியலமைப்பின் ஊடாக தமிழ்மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நன்மைகள் அவர்களுக்குக் கிடைக்கப்பெறவேண்டும்' என்று விக்கினேஸ்வரன் அவரது யோசனையில் வலியுறுத்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை மேற்கோள் காண்பிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர், 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக மாகாணசபை முறைமையுடன் தொடர்புடைய 13 ஆம் திருத்தத்தின் சரத்துக்களும் மாகாணசபைகள் சட்டமும் மாகாணசபைகள் தனித்த கட்டமைப்புக்கள் அல்ல, மாறாக அவை மத்தியின் ஓரங்கமே என்பதைக் காண்பிப்பதாகக் குறிப்பிட்டுள்ள விக்கினேஸ்வரன், ஆளுநர் மற்றும் அவரது அதிகாரங்களுடன் தொடர்புடைய சரத்துக்கள், மாகாணசபைகளின் செயற்பாடுகளில் அவர் இயங்குநிலையிலுள்ள ஓர் முக்கிய உறுப்பினர் என்பதை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதார நெருக்கடி நிலவும் தற்போதைய சூழ்நிலையில் மாகாணசபைகள் முறைமை சுமுகமாகவும், அர்த்தமுள்ள விதத்திலும் இயங்கவேண்டுமானால் சட்டரீதியாகவும் நிர்வாகரீதியாகவும் பல்வேறு விடயங்களைச் செய்யவேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 10 வருடகாலமாக மாகாணசபைத்தேர்தல்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறைந்தபட்சம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கேனும் தாமதமின்றி மாகாணசபைத்தேர்தல்களை நடத்தவேண்டும் வலியுறுத்தியுள்ள விக்கினேஸ்வரன், இருப்பினும் இன்னும் சில மாதங்கள் தேர்தலைத் தாமதிப்பது பெரிய விடயமல்ல என்றும், ஏனெனில் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக அதுசார்ந்த சில முக்கிய விடயங்களைச் செய்துமுடிக்கவேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் மாகாணசபைகளை நிர்வகிக்கக்கூடிய தற்காலிக நிர்வாகசபையொன்றை நிறுவுவதற்கான யோசனையை முன்வைத்துள்ள அவர், அந்தச் சபை யாரை உள்ளடக்கியிருக்கவேண்டும் என்றும், எத்தகைய அடிப்படையில் அமையவேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM