மூன்று தலைமுறைகள் கண்ட பெண் கொரில்லா மரணம்

Published By: Devika

18 Jan, 2017 | 06:09 PM
image

முதன்முதலாக மிருகக்காட்சி சாலையில் பிறந்த கொரில்லா தனது 60 வயதில் நேற்று (17) உயிரிழந்தது. தனது அறுபதாவது வயதைக் கொண்டாடி ஒரு மாதம் கூடப் பூர்த்தியாகாத நிலையிலேயே ‘கோலோ’ என்று பெயரிடப்பட்டிருந்த இந்தப் பெண் கொரில்லாவின் உயிர், தூங்கிய நிலையில் நேற்றுப் பிரிந்தது. 

1956ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி இந்த கொரில்லா அமெரிக்காவின் ஒஹியோ மாகாண மிருகக் காட்சி சாலை ஒன்றில் பிறந்தது. அதுவரையில் இளம் கொரில்லாக்கள் மட்டுமே காடுகளில் இருந்து பிடிக்கப்பட்டு மிருகக் காட்சி சாலையில் வளர்க்கப்பட்டு வந்தன.

பிறந்தது முதல் பார்வையாளர்களைக் கவர்ந்து வந்த கோலோ நாளடைவில் பார்வையாளர்களின் செல்லப்பிராணியாகவே ஆகிவிட்டது. கொரில்லாக்கள் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாத உயிரினம் என்பதை கோலோ தனது நடவடிக்கைகளால் பார்வையாளர்களுக்கு உணர்த்தியது என்று மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

சாதாரண கொரில்லாக்கள் சுமார் நாற்பது ஆண்டுகள் வரையே உயிர் வாழும். ஆனால் கோலோ அந்த எல்லையைத் தாண்டி இரண்டு தசாப்தங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தது.

கடந்த 22ஆம் திகதி கோலோவின் பிறந்த நாளை வெகு விமர்சையாகக் கொண்டாடினர் மிருகக்காட்சி சாலை நிர்வாகிகள். கோலோவுக்குப் பிடித்த சோள மாவில் தயாரிக்கப்பட்ட கேக் உள்ளிட்ட பல உணவு வகைகள் கோலோவுக்கு வழங்கப்பட்டன. இந்தப் பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் திரண்டிருந்தனர்.

இறக்கும்போது மூன்று கொரில்லாக்களுக்குத் தாயாகவும், பதினாறு கொரில்லாக்களுக்கு பாட்டியாகவும், பன்னிரண்டு குட்டிகளுக்கு பூட்டியாகவும் மூன்று தலைமுறைகளைக் கண்டிருந்தது கோலோ.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் கோலோவின் உடலை எரிக்கவுள்ளதாகவும், அதன் சாம்பலை மிருகக்காட்சி சாலையிலேயே புதைக்கவுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்