வியாழன் கிரகத்தின் புதிய படம் ஒன்றை நாஸா வெளியிட்டுள்ளது. இதில், வியாழனின் மேற்பரப்பில் காணப்படும் சிவப்புப் புள்ளியின் நெருங்கிய தோற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியாழனை ஆராய்வதற்காக சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய ஜூனோ என்ற விண்கலத்தை நாஸா அனுப்பி வைத்திருந்தது. குறித்த விண்கலம், கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் திகதி மூன்றாவது முறையாக வியாழனுக்கு மிக அண்மித்த சுற்றுப் பாதையில் - அதாவது, வியாழனுக்குச் சுமார் நான்கு இலட்சத்து 60 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் - பயணித்தபோது இந்தப் படத்தைப் பிடித்துள்ளது. 

வியாழனின் மேற்பரப்பில் சுற்றிவரும் சூறாவளியே இந்த மாபெரும் சிவப்புப் புள்ளியாகத் தென்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள நாஸா, அந்தச் சூறாவளி தொடர்ந்து ஒரே இடத்தில் நிரந்தரமாகச் சுழன்று வருவதாகவும், இதன் அளவு பூமியின் சுற்றளவை விட இரு மடங்கு பெரியது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சுமார் நானூறு வருடங்களுக்கு முன்பிருந்து இந்தச் சிவப்புப் புள்ளியை வியாழன் கிரகத்தில் காண முடிந்திருப்பதாகவும், தற்போது கிடைத்திருக்கும் படமே இதுவரை கிடைத்த படங்களில் சிவப்புப் புள்ளியின் நெருங்கிய தோற்றத்தைக் காட்டுவதாகவும் நாஸா தெரிவித்துள்ளது.