முறையற்ற குடியிருப்புகளால் மக்களும் இயற்கையும் ஆபத்தில்!

Published By: Nanthini

14 May, 2023 | 03:48 PM
image

கலாவர்ஷ்னி கனகரட்ணம்

துளை மாவட்டத்தின் நேப்பியர் தோட்டத்தில் நிலவும் மண்சரிவு அபாயம் தொடர்பாக நாம் ஏற்கனவே வீரகேசரியில் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளோம். எனினும், சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகமோ அரச தரப்பினரோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது பெய்யும் அடைமழையில் மேலும் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

நேப்பியர் கீழ் பிரிவில் உள்ள லயன் அறைகளுக்கு பின்னால் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, தற்போது ஒரு லயன் அறையின் பின்னால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

தோட்ட நிர்வாகத்துக்கு இது தொடர்பாக அறிவித்தபோதும், அதனை அப்புறப்படுத்துவதற்கு யாரும் வரவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், குறித்த லயன் தொகுதியில் வசிக்கும் மக்கள், ஆபத்துக்கு மத்தியில் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர். 

தோட்ட நிர்வாகத்தின் இந்த அலட்சியப்போக்கினை தொடர்ந்து கிராம உத்தியோகத்தருக்கு அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். எனினும், அவர் அப்பகுதியில் உள்ள நிலைமையை கண்காணிப்பதற்குக் கூட வரவில்லை என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

“குடும்பங்கள் பல்கிப் பெருகியுள்ள போதும், அதற்கேற்ற குடியிருப்புகள் அமைக்கப்படவில்லை. ஆகவே, இருக்கும் இடங்களில் மக்கள் சிறு வீடுகளை அமைக்கின்றனர். இவை ஏனைய குடியிருப்புகளுக்கு பாரிய ஆபத்தாக உள்ளது. 

எமது வீட்டுக்கு மேலே, லயன் அறைகளுக்கு முன்னால் உள்ள வாசலில் வீடு கட்டியுள்ளனர். இது ஆபத்தானது. எப்போது அது எமது வீட்டின் மீது வந்து விழும் என எமக்குத் தெரியாது” என ஆர். ரவிச்சந்திரன் எம்மிடம் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட லயன் அறைகளில் சிறு மாற்றங்களை செய்ய தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. 

எனினும், புதிதாக வீடுகளை கட்டவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு மக்கள் உள்ளாகின்றனர். காரணம், குடும்ப அங்கத்தவர்கள் பெருகும்போது, அவர்களுக்கான உறைவிட வசதி இல்லை. ஆனால், இவ்வாறான வீடுகளை கட்டும்போது இது பாரிய இயற்கை அழிவுக்கு வித்திடுகிறது. 

தற்போது மண்சரிவு ஏற்பட்டுள்ள லயன் அறைக்குப் பின்னால் புதிதாக வீடு கட்டியுள்ளதால், பாதுகாப்புச் சுவர் தகர்க்கப்பட்டுள்ளது. அத்தோடு, அவர்களது பாவனை நீர் கீழ்நோக்கி அனுப்பப்படுவதால் தாம் சுகாதார சீர்கேடுகளுக்கும் உள்ளாவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமன்றி, புதிதாக மலசலகூடங்களும் அமைக்கப்படும்போது அவை உரிய தரநிர்ணயங்களுக்கு அமைய கட்டப்படாமல், குழிகள் திறந்த நிலையில் அல்லது போதிய ஆழமற்று காணப்படுவதால் பாரிய சூழல் மாசடைவையும் எதிர்கொள்கின்றனர். 

குறிப்பாக, மேட்டுநில பகுதிகளில் இவ்வாறு அமைக்கப்படும் மலசலகூடங்களால், குறித்த பகுதிக்கு கீழே வாழும் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். 

அத்துடன், மழைக்காலங்களில் அசுத்த நீர் கலந்து, அவை வீடுகளுக்குள் வருவதாகவும், அந்த நீர் பொதுவெளியில் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மக்கள் மட்டுமன்றி, சூழலும் பாரிய ஆபத்தினை எதிர்கொண்டுள்ள போதும், இப்பகுதி தொடர்பாக தோட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை.  

தற்போது மண்சரிவு ஏற்பட்டுள்ள லயன் அறைக்குப் பின்னால், நீண்ட தூரம் வரை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் தமது குடியிருப்பு முற்றாக பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்வதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக இப்பகுதி கிராம உத்தியோகத்தரை தொடர்புகொண்ட போதும், இப்பிரச்சினை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என குறிப்பிட்டார். 

எனினும், இப்பகுதி மண்சரிவு அபாயம் உள்ள பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு மாற்று குடியிருப்புகளை வழங்காத காரணத்தால் அங்கேயே ஆபத்துக்கு மத்தியில் தங்கியிருக்க வேண்டிய நிலை உள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சனத்தொகைக்கு ஏற்ப குடியிருப்புகளை அமைத்து தராமையால் மக்கள் இவ்வாறான முறையற்ற குடியிருப்புகளை அமைக்கின்றனர். இதனால், மறுபுறம், பாரிய இயற்கை அனர்த்தங்களுக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் உள்ளாகும் விடயம் கவனிக்கப்படுவதில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right