கார்வண்ணன்
“ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினை தொடர்பாக புரிந்துணர்வுள்ள தலைவராக இருந்தாலும், அவரிடம் அதற்கான அர்ப்பணிப்பும், ஆற்றலும் இருக்கிறதா?”
“தமிழருக்கு உரிமைகளை வழங்கும் போது, சிங்களப் பேரினவாதம் அதனை நிச்சயம் எதிர்க்கும். அது ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் வெற்றியை பாதிக்கும்” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்திருக்கிறார்.
முதலில் வடக்கு மாகாண எம்.பிக்களுடன் மட்டும் என்று அழைக்கப்பட்ட பேச்சு, தமிழ்க் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, கிழக்கு எம்.பிக்களும், உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான, பேச்சுக்கள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு வழி வரைபடத்தை தயாரித்திருந்தனர்.
இதற்கமைய, கடந்த வியாழக்கிழமை நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பாகவும், வெள்ளிக்கிழமை அதிகாரப் பகிர்வு குறித்தும் கலந்துரையாடப்பட்டிருக்கிறது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான, கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் தவிர்ந்த ஏனைய வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றிருந்தனர்.
முதல் நாள் பேச்சுக்களின் போது, அரசியல் கைதிகள் விடுதலை, பௌத்தமயமாக்கல், காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், பொறுப்புக்கூறல் பொறிமுறை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் போன்ற விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டிருக்கிறது.
இந்தப் பேச்சுக்களின் போது, தொல்பொருள் திணைக்களத்தின் நில ஆக்கிரமிப்பு மற்றும், பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒரே குரலில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
தொல்பொருள் திணைக்களம், வடக்கு கிழக்கில் தமிழர் நிலங்களையும், ஆலயங்களையும், அபகரித்து. பௌத்த விகாரைகளாகவும், தடை செய்யப்பட்ட பிரதேசங்களாகவும் மாற்றி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர், 20 இடங்களில் தவறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், வடக்கு, கிழக்கில் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு, தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருக்கிறார்.
ஆனால், ஜனாதிபதியின் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது தான் கேள்வி.
ஏனென்றால் கடந்த காலங்களில் ஜனாதிபதி இவ்வாறான உத்தரவுகளை பிறப்பித்திருந்த போதும், தொல்பொருள் திணைக்களம் அதனை கண்டுகொள்ளவில்லை.
தொல்பொருள் திணைக்களம் தனியானதொரு நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறது. பௌத்த பிக்குகளின் ஆதிக்கம் அங்கு அதிகம் உள்ளது.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதியின் உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி, தொல்பொருள் திணைக்களத்தை கலைத்து விட்டு புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும், என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜனாதிபதியிடம் நேரடியாகவே வலியுறுத்தியிருக்கிறார்.
ஆட்சிகள் மாறினாலும் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள்
மாற்றமின்றி இடம்பெறுகின்றன. அதற்கு தனியானதொரு சிங்கள பௌத்த, பேரினவாத முகம் உள்ளது.
இதுவரையில், தொல்பொருள் திணைக்களத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஜனாதிபதியினால் கூட முடியவில்லை.
இப்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்பாக, தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு பின்பற்றப்படுமா என்பதைப் பொறுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரம் கொண்டவரா என்பதை தீர்மானிக்க முடியும்.
முதல் நாள் பேச்சுக்களின் ஒரு கட்டத்தில், யாரையும், வலிந்து பேச அழைக்கவில்லை என்றும், தான் அழைத்தேன் வந்தீர்கள், பேசுவோம் என்ற தொனியில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருக்கிறார்.
இது, ஏனோ தானோ என்ற வகையிலான ஒரு கருத்தாகவே தென்படுகிறது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு, தமிழர் தரப்புடன் பேச வேண்டியது முக்கியம். அதனைச் செய்யாமல், நாட்டின் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பது ஜனாதிபதிக்குத் தெரியும்.
தேசியப் பிரச்சினைக்கு இந்த வருட இறுதிக்குள் தீர்வு காண வேண்டும் என்று கூறியவர் ஜனாதிபதி தான். அவர் முன்னதாக கடந்த பெப்ரவரி மாதம் இன்னொரு காலக்கெடுவையும் முன்வைத்திருந்தார்.
இவ்வாறான நிலையில், இனப்பிரச்சினையைத் தீர்த்து, நாட்டில் நிலையான அமைதியை ஏற்படுத்த வேண்டுமானாால், தமிழர்களுடன் பேச வேண்டியது தவிர்க்க முடியாதது. நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அந்தப் பேச்சுக்களை முன்னெடுக்க கடமைப்பட்டவர்.
ஆனால், அவர், தாம் யாரையும் வலியுறுத்தி அழைக்கவில்லை, அழைத்தேன் -வந்தீர்கள் என்று, அலட்சியமாக கருத்தை வெளியிட்டிருப்பது, இந்தப் பேச்சுக்களில் அவர் கொண்டுள்ள ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் குறைமதிப்புக்குட்படுத்துவதாக உள்ளது.
இனப்பிரச்சினைக்கு முக்கால் நூற்றாண்டு வரலாறு இருக்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இனப்பிரச்சினை பூதாகார வடிவம் பெற்று வந்திருக்கிறது.
இதற்கு ஓரிரு நாட்களில் தீர்வு கண்டுவிடவோ, ரணில் விக்கிரமசிங்கவினால் தனிநபராக அதனை சாதித்து விடவோ முடியாது. இவ்வாறான நிலையில், ரணில் விக்கிரமசிங்க இந்தப் பேச்சுக்களை ஏன் அலட்சியமாக எடுத்துக் கொள்ள முனைகிறார் என்ற கேள்வி எழுகிறது.
பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர், கடந்த 10 மாதங்களில் எந்த உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
தீர்க்கமான முடிவுகளையும் அவர் எடுக்கவில்லை. ஏனோ தானோ என்று பேச்சுக்களை நடத்துவதில் தான் அவர் அக்கறை கொண்டிருக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாவிட்டால், இலங்கையில் தற்போதுள்ள எந்த தலைவராலும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று, சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில உரையாற்றும் போது குறிப்பிட்டார். ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினை தொடர்பாக புரிந்துணர்வுள்ள தலைவராக இருந்தாலும், அவரிடம் அதற்கான அர்ப்பணிப்பும், ஆற்றலும் இருக்கிறதா என்ற கேள்வி உள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தாலும், அவரால் மட்டும் இதனை சாதித்து விட முடியாது. அவருக்கு பாராளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்பினர் மாத்திரம் இருக்கிறார். எனவே, எந்தவொரு தீர்வையும், பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்த வேண்டுமானால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அங்கு பலம் அவசியம். அந்தப் பலம் அவரிடம் இல்லை.
பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களை பல்வேறு கட்சிகளின் தலைமைகள் தான் கட்டுப்படுத்துகின்றன. இது, எந்தவொரு தீர்வையும் நடைமுறைப்படுத்தக் கூடிய அவரது ஆற்றலை கேள்விக்குட்படுத்துகிறது.
அடுத்து, ரணில் விக்கிரமசிங்கவுக்கு இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது. ஏனென்றால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அதனை தெளிவாக அறிவித்திருக்கிறது. இனப்பிரச்சினைக்கு நீதியான, நியாயமான தீர்வு காணப்படுவதென்றால், தமிழர்களுக்கு அதிக உரிமைகளை வழங்க வேண்டியிருக்கும். அது, சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டுக்கு எதிரானது.
இவ்வாறான நிலையில், தமிழருக்கு உரிமைகளை வழங்கும் போது, சிங்களப் பேரினவாதம் அதனை நிச்சயம் எதிர்க்கும். அது ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் வெற்றியை பாதிக்கும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகளால் மாத்திரம் வெற்றியைப் பெற்றிருந்தார் கோட்டாபய ராஜபக்ஷ. அதேபேரினவாத வாக்குகள், ரணில் விக்கிரமசிங்கவை இலகுவாகத் தோற்கடித்து விடும்.
எனவே, ஜனாதிபதி தேர்தல் வரைக்கும், இந்த விவகாரத்தை இழுத்தடிக்கும், உத்தியைத் தான் ரணில் விக்கிரமசிங்க கையாளுவார். அதற்காக அவர் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களை குழப்பி விடுவார் என்று அர்த்தமில்லை. அவருக்கு இந்தப் பேச்சுக்கள் முக்கியமானவை.
சர்வதேச அழுத்தங்களை சமாளித்து, உதவிகளைப் பெறுவதற்கு இந்தப் பேச்சுக்கள் அவருக்குத் தேவைப்படுகிறது. அதற்காக அவர் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.
ஆனால் அதில் அர்ப்பணிப்பு இருக்குமா என்ற கேள்வி உள்ளது. எவ்வாறாயினும், காலத்தை இழுத்தடிக்கும் பேச்சுக்களுக்குத் தயார் இல்லை என்று தமிழர் தரப்பு எற்கனவே அறிவித்திருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் நெருக்கடிகளை தீர்த்துக் கொள்வதற்கு அல்லது, அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்வதற்கு இந்தப் பேச்சுக்களை பயன்படுத்தாமல் இருப்பது முக்கியமானது.
அதற்கு மாறாகவே அவர் செயற்படுவாரேயானால், கடந்த காலங்களைப் போலவே இந்தப் பேச்சுக்களும், இடைநடுவில் முறிவடையும் நிலை ஏற்படலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM