காதலிக்க வற்புறுத்தியோ அல்லது காதலில் ஏமாற்றப்பட்டதாலோ பெண்கள் மீது ஆண்கள் அமிலத்தை வீசும் செய்திகளைத்தான் இதுவரை கேட்டிருக்கிறோம். ஆனால், தன்னைக் காதலித்துவிட்டு ஏமாற்ற நினைத்த காதலன் மீது பெண் ஒருவர் அமிலத்தை வீசியெறிந்த சம்பவம் பெங்களூரில் இடம்பெற்றுள்ளது.

லிடியா ஃபிஸ்பா (26) என்ற இளம் பெண் தனியார் மருத்துவமனைத் தாதியாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், இவரது வீட்டுக்கு அருகாமையில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவருக்கும் இடையில் கடந்த 2011ஆம் ஆண்டு காதல் மலர்ந்திருக்கிறது.

எனினும், இவர்கள் இருவரும் வெவ்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பரஸ்பரம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. என்றபோதும், லிடியாவைத் தவிர வேறு பெண்ணைத் தான் திருமணம் முடிக்கப்போவதில்லை என ஜெயக்குமார் உறுதியளித்திருந்தார்.

இதனிடையே ஜெயக்குமார் கிறிஸ்தவராக மாறினால் அவரை ஏற்றுக்கொள்வதாக லிடியாவின் குடும்பத்தினர் கூறவே ஜெயக்குமாரை சமயம் மாறும்படி லிடியா வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், என்ன நடந்தாலும் லிடியாவைத் திருமணம் செய்துகொள்ளத் தயார் என்றும், அதற்காக சமயத்தை மாற்றிக்கொள்ள முடியாது என்று ஜெயக்குமார் கூறி வந்துள்ளார். இந்தப் பிரச்சினை இவர்களது காதல் முறிவுக்குக் காரணமாகிறது.

ஜெயக்குமாருக்கு வேறு இடத்தில் மணம் முடித்துவைக்க அவரது குடும்பத்தினர் முயற்சி செய்வதை அறிந்த லிடியா ஜெயக்குமாரைப் பழிவாங்க எண்ணினார். ஜெயக்குமார் ஒவ்வொரு திங்களன்றும் குறித்த ஒரு கோயிலுக்குச் செல்வதை அறிந்திருந்த லிடியா, தனது உறவினர் ஒருவருடன் குறித்த கோயிலுக்கு காரில் சென்று காத்திருந்தார்.

ஜெயக்குமார் தனது நண்பர் ஒருவருடன் கோயிலுக்கு வருவதைக் கண்ட லிடியா, திடீரென காரை விட்டிறங்கிச் சென்று ஜெயக்குமாரின் முகத்தில் அமிலத்தை வீசியெறிந்தார். மேலும், தன் வசமிருந்த சிறு கத்தியால் ஜெயக்குமாரின் இரண்டு பக்கக் கன்னங்களையும் வெட்டிக் கிழித்துவிட்டுத் தப்பிச் சென்றார்.

உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜெயக்குமாருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜெயக்குமாரின் முறைப்பாட்டின் பேரில் லிடியாவும் அவருக்கு உதவியாக இருந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.