மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை நடைமுறை, உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மாசடைந்த புறச்சூழல் ஆகியவற்றின் காரணமாக மனிதர்களின் ஆரோக்கியம் இளமையின் இறுதிப்பகுதியிலேயே கேள்விக்குறியாகிவிடுகிறது.எம்மில் பலருக்கும் ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பிற்கும், கார்டியாக் அரெஸ்ட் எனப்படும் இதயம் செயலிழப்பிற்கு உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. இரண்டையும் ஒன்றே என்று நினைக்கிறார்கள். ஆனால் இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. 

‘ஹார்ட் அட்டாக்‘ என்பது நமது இதயம் இயங்குவதற்கு இரத்த நாளங்கள் மூலம் கிடைக்கும் இரத்தம் சீராக கிடைக்காமல் திடீரென தடைபடுவதால் ஏற்படுவதாகும். மார்பில் வலி ஏற்படுவது இதன் அறிகுறியாகும். ‘ஹார்ட் அட்டாக்‘ நிகழும்போது நோயாளிகள் பெரும்பாலும் உணர்வுடன் இருப்பார்கள். சுவாசிப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களது இதயம் தொடர்ந்து துடித்தப்படி இருக்கும். அது இரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பும். ஆனால் “கார்டியாக் அரஸ்ட்” என்பது இதயம் தனது வழக்கமான துடிப்பையே அப்படியே நிறுத்திக் கொள்வதாகும். இதயம் துடிப்பது திடீரென நின்று போனால், அது இரத்தத்தை “பம்ப்” செய்யாது. இதயம் இரத்தத்தை “பம்ப்” செய்யாவிட்டால் உடல் முழுவதுக்கும் இரத்த ஓட்டம் நடக்காது. இரத்த ஓட்டம் நின்றால் மயக்கம் உண்டாகும். உணர்வற்ற நிலைக்கு சென்று விடுவார்கள்.

‘கார்டியாக் அரஸ்ட்’ எனப்படும் இதயம் செயலிழப்பு நிலை தோன்றினால், அடுத்த நிமிடமே சிகிச்சைகள் பெற வேண்டியது அவசியமாகும். குறிப்பாக சுவாசத்தை நீட்டிக்க சி.பி.ஆர். எனும் சிகிச்சையை அவசியம் அளிக்க வேண்டும். சுவாசம் சீரான பிறகு ‘கார்டியாக் அரஸ்ட்’ நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப சிகிச்சை பெறலாம். ஏனெனில் ‘கார்டியாக் அரஸ்டில்’ பல வகைகள் உள்ளது.

டொக்டர் கே தாமோதரன்

தொகுப்பு அனுஷா.