சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்

Published By: Ponmalar

12 May, 2023 | 02:24 PM
image

சருமப் பராமரிப்புக்கான கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் முக்கியமாக சேர்க்கப்படுவது 'கோகோ பட்டர்'. கோகோ விதைகளில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பு நிறைந்த மஞ்சள் நிறப் பொருளே 'கோகோ பட்டர்' என அழைக்கப்படுகிறது.

இதில் நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. பொட்டாசியம், கல்சியம், ஜிங்க், மெக்னீசியம், இரும்பு, கொப்பர் மற்றும் பல தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன. 

இதைப் பற்றிய மேலும் பல தகவல்கள் இதோ… 

கோகோ பட்டரில் உள்ள கொழுப்பு அமிலங்கள், சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன. 

இதில் இருக்கும் 'பைட்டோ கெமிக்கல்கள்' எனப்படும் இயற்கை தாவர மூலக்கூறுகள், சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. 

எக்ஸிமா மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கோகோ பட்டரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கிரீம்களை உபயோகப்படுத்தினால் எளிதாக குணம் அடையலாம். சருமத்தின் மீது கோகோ பட்டரை நேரடியாகப் பயன்படுத்தும்போது, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும். 

கோகோ பட்டரில் ஒலிக், பால்மிடிக், லினோலிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் உள்ளன. இவை சேதமடைந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்கி, புதிய சரும அடுக்குகளை உருவாக்குகின்றன. சருமத்தில் உள்ள வடுக்கள், தழும்புகள் போன்றவற்றை மென்மையாக்கி மறைக்கும் தன்மை கோகோ பட்டரில் உள்ள மூலக்கூறுகளுக்கு உண்டு. 

கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பின்பும், பெண்கள் கோகோ பட்டரை உபயோகப்படுத்தினால் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கலாம். 

கோகோ பட்டர் ஸ்கிரப் 

தேவையான பொருட்கள்: 
கோகோ பட்டர் - 1 டேபிள் ஸ்பூன் 

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 

சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன் 

லவங்கப்பட்டை பொடி - 1 டீஸ்பூன் 

செய்முறை: 
கோகோ பட்டர் மற்றும் தேங்காய் எண்ணெய்யை மிதமான சூட்டில் உருக்கவும். 

பின்பு அதில் சர்க்கரை மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து நன்றாகக் கலக்கவும். 

இந்தக் கலவையை காற்று புகாத கண்ணாடி ஜாடியில் சேமித்து பயன்படுத்தவும். 

பயன்படுத்தும் முறை: வெதுவெதுப்பான தண்ணீரில் சருமத்தை கழுவவும். பின்னர் இந்த ஸ்கிரப்பை சருமத்தின் மீது வட்ட இயக்கத்தில் பூசவும். ஸ்கிரப் செய்தபடியே மென்மையாக மசாஜ் செய்யவும். பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் சருமத்தை சுத்தம் செய்து மென்மையான துண்டால் துடைக்கவும். கோகோ பட்டருடன், ஷியா பட்டர், தேன் மெழுகு, விட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை கலந்து மொய்ஸ்சுரைசராகவும் உபயோகிக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right