டொக்டர் V. காமினி M.Sc., PGDLO.,
குழந்தைகள் உளவியல் நிபுணர்
எம்முடைய இல்லங்களில் பொருளாதார பற்றாக்குறையின் காரணமாகவும், விலைவாசி உயர்வின் காரணமாகவும் கணவன் - மனைவி என இருவரும் அலுவலகத்திற்கு சென்று வருவாய் ஈட்ட வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் கணவன் - மனைவி என இருவரும் பணிக்குச் சென்று விடுவதால், அவர்களது வாரிசுகளான பிள்ளைகளை நாள் முழுவதும் சமாளிப்பது... என்பது சவாலான காரியங்களாகிறது.
பணியாள், தாதியர், குழந்தைகள் காப்பகம், பால்ய பிராயத்து பிள்ளைகளுக்கான விசேட பாடசாலை என பிள்ளைகளை கவனிக்கும் இல்லங்களில் சேர்த்து விட்டு பணிக்குச் சென்று விடுகிறோம். வார விடுமுறை நாட்களில் கணவன் - மனைவி என இருவரும் பணிச்சுமையின் காரணமாக ஓய்வெடுக்கவே முன்னுரிமை அளிக்கிறார்கள்.
ஆனால் பிள்ளைகளோ.. பெற்றோர்கள் விடுமுறை தினத்தில் தங்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து, தங்களுடன் பொழுதே கழிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இது சில குடும்பங்களில் குறையும் போது.. அந்த இல்லங்களில் வளரும் பிள்ளைகள் சமூகத்தில் சுதந்திரமாகவும், கட்டுப்பாடற்றவராகவும் நடந்து கொள்ளும் நிலை ஏற்படுகின்றது.
இதனால் சமூக சிக்கல்கள் உருவாகிறன. இதனால் மருத்துவர்கள் குறிப்பாக குழந்தைகளுக்கான உளவியல் மருத்துவ நிபுணர்கள், விடுமுறை தினங்களிலும்... குறிப்பாக கோடை விடுமுறை தினங்களிலும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி? என்பது குறித்து பயனுள்ள குறிப்புகளை பெற்றோர்களுக்கு வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் இத்துறையில் நிபுணரான டொக்டர் காமினி, குழந்தைகளை சமாளிப்பது எப்படி? என்பது குறித்து பெற்றோர்களுக்கு தன் மருத்துவ அனுபவங்களிலிருந்து விளக்கமளிக்கிறார்.
பிள்ளைகளின் வயதைப் பொருத்து நாங்கள் கோடை விடுமுறையை சமாளிப்பதற்கான திட்ட வரையறையை வழங்குகிறோம். உங்களது பிள்ளைகள் நான்கு வயதிலிருந்து எட்டு வயதிற்குள் இருந்தால் ஒரு வகையினதான திட்டத்தையும், எட்டு வயதிற்கு மேல் பதினைந்து வயதிற்குள் இருந்தால் ஒரு வைகையிதான திட்டத்தையும் முனவைக்கிறோம்.
பொதுவாக பிள்ளைகள், பாடசாலையில் கல்வி கற்கையில் சக மாணவ மாணவிகள் உடன் இருக்கும் போது, தன்னுடைய உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டு பழகுவர். ஏனெனில் மாணவ மாணவிகளைக் கடந்து ஆசிரியர், தலைமையாசிரியர், உடற்கல்வியாசிரியர் என பலர் இருப்பதால் தங்களை சேட்டைகளைக் கவனமாக குறைத்துக் கொள்வர். மேலும் தன் மனதிற்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் தோழிகளிடத்தில் மட்டும் உரையாடி,, தங்களுடைய மன அழுத்தத்திற்கு வடிகாலையும் தேடிக் கொள்வர். ஆனால் கோடை விடுமுறையின் போது.. இதற்கான வாய்ப்பு இல்லை என்பதால், அவர்கள் வீடுகளில் கட்டுப்பாடற்ற முறையில் சுதந்திரமாக உலா வர வேண்டும் என விரும்புவர். மேலும் அவர்கள் தொலைக்காட்சி, கைப்பேசி, மடிக்கணனி.. என இலத்திரனியல் சாதனங்களை தொடர்ச்சியாக பாவித்து, கவன சிதறலுக்கு ஆளாகுவதில் பேரார்வம் காட்டுவர். குறிப்பாக வீடியோ கேம்ஸ், கார்ட்டூன் போன்றவற்றை பார்வையிடுவதிலும், விளையாடுவதிலும் கால அவகாசத்தை செலவழிப்பர். இவர்களை இத்தகைய இலத்திரனியல் சாதனங்களை பாவிப்பதிலிருந்து தற்காலிகமாக விடுபட செய்வதற்கு பெற்றோர்கள் பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியதிருக்கும்.
இதனால் விடுமுறை தினத்தை நாளாந்தம் எப்படி செலவழிக்க வேண்டும் என முதலில் ஒரு திட்ட அட்டவணையை தயாரித்துக் கொள்ள வேண்டும். விடுமுறை தினம் என்றாலும் காலையில் ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் படுக்கையிலிருந்து எழுந்து விட வேண்டும் என்பதனை கண்டிப்பாக பிள்ளைகளுக்கு உணர்த்திட வேண்டும். அதனை நடைமுறையிலும் செயல்படுத்த வேண்டும். இதில் சில பிள்ளைகள் முரண்டு பிடிப்பர். அவர்களுக்கு காலையில் ஆறு மணியளவில் எழுந்தால்.. அன்று மதியம் உமக்கு விருப்பமான வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்கு ஒரு மணி தியாலம் வரை அனுமதி அளிப்போம் என வாக்குறுதி அளிக்க வேண்டும். இதனால் பிள்ளைகள் உற்சாகமடைந்து, பெற்றோர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் காலையில் எழுந்து தங்களது நாளாந்த கடமைகளை செய்வர்.
அதன் பிறகு விடுமுறை தினம் என்பதால் அவர்களுக்கு பாடசாலை கல்வியை கற்பிப்பது போல் சமூக கல்வியை பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும். சமூக கல்வி என்றால், நாளாந்தம் எம்முடைய வாழ்க்கையில் எமக்காக மேற்கொள்ளும் பணிகள் தான் சமூகக் கல்வி. அதாவது சமையலறையில் மனைவிக்கோ அல்லது தாயாருக்கோ உதவுவது.. சாப்பிட்ட தட்டினை கழுவுவது.. சாப்பிடும் முன் தயாரிக்கப்பட்ட உணவினை உணவு மேசையின் மீது கொண்டு வந்து வைப்பது.. பழங்களை கழுவி, சீராக வெட்டி உண்பதற்கு தயார் படுத்துவது.. வாழை இலையை கழுவி பசியாறுவதற்கு முன் எப்படி அதனை பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துரைப்பது.. அதனை நடைமுறைப்படுத்துவது.. துவைத்த துணிகளை மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று உலர வைப்பது.. அதன் போது உடைகளின் மீது காற்றில் பறந்து செல்லாமல் இருப்பதற்காக ‘கிளிப்’ போடுவது, வொஷிங் மிஷினில் துணிகளை போடுவது.. அதன் மீது சோப்புத்தூள் கரைசலை அளவுடன் ஊற்றுவது.. அதற்கான தண்ணீரை திறந்து விடுவது.. வொஷிங் மெஷின் துணியை அலசிய பிறகு அதனை உலர வைப்பதற்கான பிரத்தியேக பெட்டியில் போடுவது.. இப்படி சிறிய சிறிய காரியங்களை எப்படி செய்வது என்பதனை எடுத்துரைத்து, அதனை பிள்ளைகளை செய்ய வைப்பது. இப்படி செய்வதன் மூலம் குழந்தைகள் தொலைக்காட்சி மற்றும் இலத்திரனியல் சாதனங்களை பாவிப்பதிலிருந்து விடுபட்டு, பெற்றோர்களுடன் பொழுதை கழிப்பர். மேலும் அருகிலுள்ள தினச் சந்தை அல்லது சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அழைத்துச் சென்று, காய்கறிகளை எப்படி வாங்குவது என்பதை கற்பிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து வீட்டின் அருகிலுள்ள சந்தைக்குச் சென்று, சில காய்கறிகளை வாங்கி வர அனுமதிக்கவேண்டும். இது தொடர்பாக அவர்களுக்கு சிறிய குறிப்பினை ஒரு தாளில் எழுதச் சொல்லி, அதனை எடுததுச் சென்று, வாங்கி வர பணிக்கவேண்டும். அவர்களுக்கு இது சவாலானதாகவும், கவன குவியத்தையும் ஏற்படுத்தும்.
மேலும் சில பிள்ளைகள் இது போன்ற சிறிய உதவிகளை சில நாட்களுக்கு மட்டும் செய்துவிட்டு மீண்டும் வழக்கம் போல் வீடியோ கேம்ஸ், தொலைக்காட்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவர். அவர்களை மீண்டும் இதுபோன்ற ஆரோக்கியமான விடயங்களில் திசை திருப்ப வேண்டும் என்றால், அவர்களை ‘அவுட்டிங்’ என சொல்லப்படும் வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். கடற்கரை, அருங்காட்சியகம், உறவினர்கள் வீடு, மலைப் பிரதேசம், மலைவாசஸ்தலம், அருவி என சாகச பயணத்தை மையமாகக் கொண்ட சிறிய அளவிலான சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் போது, அவர்களுக்குள் சவாலான உந்துதல் உணர்வு ஏற்பட்டு வியப்புடன் பங்குபற்றுவர். மேலும் இதன் போது மேற்கொள்ளும் பயணம் அவர்களுக்கு பதுவிதமான அனுபவத்தை அளிக்கும்.
பிள்ளைகள் மூன்று வயதிலிருந்து ஐந்து வயதிற்குள் இருந்தால் அவர்களிடத்தில் கணித புதிர் சார்ந்த விளையாட்டுகளை விளையாடலாம். உதாரணமாக பரமபதம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி, அதன் விதிமுறைகளை எடுத்துரைத்து, விளையாடலாம். இதன் மூலம் பிள்ளைகள் பாரம்பரிய விளையாட்டுகளின் மீதும் கவனம் திரும்பும். அதனை அவர்கள் தொடர்ச்சியாக விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் அவர்கள் தொலைக்காட்சி, கைப்பேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவர். பெண் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுக்கு சில்லு விளையாட்டு விளையாட கற்றுத் தரலாம்.
மேலும் நீங்கள் வசிப்பது அடுக்குமாடி குடியிருப்பு என்றால், அருகில் வசிக்கும் பெற்றோர்களிடம் உங்களது பிள்ளைகளை எங்களது இல்லத்திற்கு அனுப்புங்கள், நாங்கள் எங்களது பிள்ளைகளை உங்களது இல்லத்திற்கு அனுப்புகிறோம் என பேசிக் கொள்ளவேண்டும். ஏனெனில் இதன் ஊடாக பிள்ளைகளுக்கிடையே ஒரு பந்தம் உருவாகி, அவர்கள் ஒன்றிணைந்து விளையாடுவார்கள்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடயம் குறித்து திட்டமிட்டு, அதனை அட்டவணைப்படுத்தி, அதனை செயல்படுத்தினால் பிள்ளைகள் கோடை காலத்தில் தொலைக்காட்சி, வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் மட்டும் ஆர்வம் செலுத்தி தங்களது சோம்பேறி தனத்தை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
மேலும் கோடை விடுமுறை காலகட்டத்தில் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே தொலைக்காட்சி, மடிக்கணினி, கைபேசி, வீடியோ கேம்ஸ், கார்ட்டூன் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தும் பிள்ளைகள், தொடர்ந்து வரும் காலகட்டங்களில் பாடசாலைகளில் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களில் கவனம் செலுத்த இயலாத சூழல் உருவாகும். அத்துடன் பாடசாலை என்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது என்றும் சொல்லத் தொடங்கிவிடுவர்.
இதனை தவிர்க்க கோடை விடுமுறை கால கட்டத்தில் பெற்றோர்கள் அவர்களுக்கு ஆசிரியராகவும், சமூக கல்வியை கற்பிப்பவராகவும் திகழ வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் உளவியல் வலிமை அதிகரித்து, அவர்கள் கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்படும் வகுப்புகளில் ஆசிரியர் நடத்தும் பாடங்கள் மீது ஆர்வம் காட்டுவர். இது அவர்களுக்கு பயனுள்ளதாகவும், வாழ்க்கைக்கு ஏற்றதாகவும் இருக்கும். இதனை பெற்றோர்கள் நன்கு உணர்ந்து அதனை அவர்களுடைய பிள்ளைகள் கேட்கும் பாணியில் எளிதாக விளக்கமளித்து, அவர்களுடன் பொழுதை கழித்தால், கோடை விடுமுறையில் பிள்ளைகளை எளிதாக சமாளிக்கலாம். மேலும் இது தொடர்பாக ஏதேனும் வழிகாட்டல் அல்லது ஆலோசனை தேவைப்பட்டால் 0091 96000 68130 என்ற எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம்.
சந்திப்பு புகழ்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM