அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20ஆம் திகதி ட்ரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள தமது பிரத்தியேகப் பொருட்களை வொஷிங்டனில் தாம் வாங்கியுள்ள புதிய வீட்டிற்கு மாற்றி வருகிறார் ஒபாமா.

வொஷிங்டனில் சுமார் 43 இலட்சம் டொலர் குத்தகையில் ஒபாமா வாங்கியுள்ள வீட்டிற்கு, பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்கள் வந்து போகத் தொடங்கியுள்ளன.

பதவி விலகியதும் தனது சொந்த ஊரான சிக்காகோவுக்குச் செல்ல ஒபாமா விரும்பியபோதும், தனது இளைய மகள் ஷாஷாவின் படிப்பு நிறைவடைய வேண்டும் என்பதற்காகவே அடுத்த இரண்டு வருடங்கள் வொஷிங்டனில் தங்க முடிவு செய்துள்ளார். 

சுமார் 8,200 சதுர அடி பரப்பளவுள்ள இந்த வீடு 9 படுக்கை அறைகள், அமைதியான தோட்டம், கேளிக்கை விழாக்களுக்கான பிரத்தியேக மண்டபம் என்பனவற்றைக் கொண்டிருக்கிறது.

1928ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வீடு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின் ஊடகச் செயலாளராக இருந்த ஜோ லொக்ஹார்ட்டுக்குச் சொந்தமானது. அவரிடம் இருந்தே ஒபாமா இந்த வீட்டை குத்தகைக்குப் பெற்றிருக்கிறார்.

பதவி விலகியதும் தனது குடும்பத்தினருடன் கலிஃபோர்னியாவுக்கு சுற்றுலா செல்ல ஒபாமா திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.