கிளிநொச்சியில் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து வடமாகாண ஆளுனரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொங்கல் விழா, கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் அமைந்துள்ள வட்டக்கச்சி வயல் பண்ணையில் இன்று இடம்பெற்றது.

இதன்போதே முன்னாள் போராளிகள் ஆளுனரிடம் மகஜர் கையளித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு கோரி ஆளுனருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்

இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே குறித்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக குறிப்பிட்டார்.

மேலும் இதற்கான சுமூகமான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாகவும், தன்னால் கால அவகாசம் சொல்லமுடியாது ஆனால் நல்ல முடிவை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் தொண்டராசிரியர்களுக்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டதாகவும் மிக விரைவில் அவர்களுக்கான தீர்வு கிடைத்துவிடும் எனவும் தெரிவித்தார்.